(து - ம்.) என்பது, களவினின்று மணஞ் செய்துகொள்ள வேண்டிய தலைமகன் நீட்டித்தலால் வருத்தமுற்ற தலைவி, தன்னை வலிதிற் பொறுத்திரு வென்ற தோழியை நோக்கி "மாலையம்பொழுதும் வந்தது, அதன்மேல் இரவும் வந்திறுத்தது; அவர் கூறிய பருவங் கழிந்தது, கூகையுங்குழறும், அன்றி அன்றிலின் குரலையுங் கேட்குவன்கொலாம்" என்று அழிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.
| ஞாயிறு ஞான்று கதிர்மழுங் கின்றே |
| எல்லியும், பூவீ கொடியிற் புலம்படைந் தன்றே |
| வாவலும் வயின்தொறும் பறக்குஞ் சேவலும் |
| நகைவாய்க் கொளீஇ நகுதொறும் விளிக்கும் |
5 | மாயாக் காதலொடு அதர்ப்படத் தெளித்தோர் |
| கூறிய பருவங் கழிந்தன்று பாரிய |
| பராரை வேம்பின் படுசினை யிருந்த |
| குராஅல் கூகையும் இராஅ இசைக்கும் |
| ஆனா நோயட வருந்தி யின்னுந் |
10 | தமியேன் கேட்குவென் கொல்லோ |
| பரியரைப் பெண்ணை அன்றிற் குரலே. |
(சொ - ள்.) ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்று எல்லியும் பூ வீ கொடியில் புலம்படைந்தன்று - ஆதித்த மண்டிலம் மேலைத் திசையிலிறங்கிக் கதிரும் மழுக்கம் அடைந்தது. இராப்பொழு தென்பதும் பூவுதிர்ந்த கொடிபோல ஞாயிற்றை யிழந்து தனித்துப் பொலிவு குன்றாநின்றது; வயின்தொறும் வாவலும் பறக்கும் - இடங்கள் தோறும் வௌவாலும் பறந்து உலவாநிற்கும்; சேவலும் நகை வாய்க் கொளீஇ நகுதொறும் விளிக்கும் - ஆந்தையின் சேவலும் மகிழ்ச்சி மிகப்பெற்றுத் தான் நகைக்குந் தோறும் தன் பெடையை அழையாநிற்கும்; மாயாக் காதலொடு அதர்ப்படத் தெளித்தோர் கூறிய பருவம் கழிந்தன்று - இவையேயுமன்றித் தீராத ஆசையுடனே நெறிப்பட என்னைத் தேற்றிய காதலர் கூறிய பருவமும் மெல்ல மெல்லச் செல்லாநின்றது; பாரிய பராரை வேம்பின் படுசினை இருந்த குராஅல் கூகையும் இராஅ இசைக்கும் - இடையிடையே நிழல் பரவிய பருத்த அடியையுடைய வேம்பின் பெரிய கிளையிலிருந்த குராலாகிய கூகையும் இரவுமுழுதும் குழறா நிற்கும்; ஆனா நோய் அட வருந்தி இன்னும் தமியேன் - இத்தகைய இரவிலே தீராத காமநோய் துன்புறுத்துதலாலே வருத்தமடைந்து இத்துணைநாளும் வருந்தியதன்றி இன்னும் தமியளாயிருந்து; பரி அரைப் பெண்ணை அன்றில் குரல் கேட்குவென்கொல்லோ - பருத்த அடியையுடைய பனைமடலிலே இருக்கும் அன்றிலின் குரலையுங் கேட்டு மாழ்குவேனோ? எவ்வண்ணம் இதனை ஆற்றியிருப்பேன்? எ - று.
(வி - ம்.) ஞான்று - தொங்கி, கீழிறங்கி. எல்லி - இரவு. சேவல் - ஈண்டு இரவிலியங்கும் ஆந்தையின் சேவல்; "எந்நில மருங்கின்" (தொல். பொ. 19) என்றபடி புள்மயங்கிற்று. குரால் - கோட்டான்; குராற்கூகை: இருபெயரொட்டு. பரிய அரை - பரிய என்ற குறிப்புப் பெயரெச்சத்தின் அகரம் தொக்கது. கேட்குவன் கொல்லோ வென்றது துன்பத்துப் புலம்பல்.
மாலைப் பொழுதானது காமநோயை முற்படவிட்டு வருதலின் அது வருதற்கேதுவாகிய ஞாயிறு படுந்தன்மை கூறி வருந்தினாள். தனித்துறை வாழ்க்கையின் இரவு பொலிவடையாமையின் எல்லியும் புலம்படைந்தது என்றாள். ஏனைப் புள்ளினம் புணர்ச்சிகருதிப் பெடையை யழைப்பக் கேட்டலானே தனது ஆற்றாமை கூறுகின்றவள் அதனுள் இறந்துபடாமல் அன்றிற்குரலுங் கேட்குவேன் கொலென்றாள். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.
(பெரு - ரை.) "ஆயாக் காதலொடு" எனக் கண்ணழித்துக் கோடலுமாம். ஆயாக் காதல் - தேயாக் காதல். அதர்ப்படுதல் - அவன் கூறிய நெறியிலே படுதல். தெளித்தோர் என்றது - இயற்கைப் புணர்ச்சிக்கண் "மெல்லிய லரிவைநின் னல்லகம் புலம்ப, நிற்றுறந்து அமைகுவெனாயின் எற்றுறந்து, இரவலர் வாரா வைகல், பலவாகுக யான் செலவுறுதகவே" என அவன் கூறிய தெளிவகப்படுத்த மொழியை நினைந்தென்க.
(218)