திணை : நெய்தல்.

     துறை : இது, வரைவிடைவைத்துப் பிரிய ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, களவினின்று மணம்புரிந்து கொள்ளக்கருதிய தலைமகன் அது காரணமாகப் பொருளீட்டி வருமாறு பிரிதலும் ஆற்றாளாகிய தலைவி தோழியை நோக்கி "என் உயிர்போவதாயினும் சேர்ப்பன் தானேவந்து புணர்ந்து தலையளி செய்ததனாலே இன்னும் வந்து முயங்குவனென்னுங் கருத்தோடு அவன்மீது சிறிதுஞ் சினங் கொள்ளே" னெனத் தனக்குண்டாய வருத்தத்தை உள்ளடக்கிக்கொண்டு கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கும் முற்செய்யுள் விதியே அமையும்.

    
கண்ணுந் தோளுந் தண்நறுங் கதுப்பும் 
    
பழநலம் இழந்து பசலை பாய 
    
இன்னுயிர் பெரும்பிறி தாயினும் என்னதூஉம் 
    
புலவேன் வாழி தோழி சிறுகால் 
5
அலவனொடு பெயரும் புலவுத்திரை நளிகடற் 
    
பெருமீன் கொள்ளுஞ் சிறுகுடிப் பரதவர் 
    
கங்குல் மாட்டிய கனைகதிர் ஒண்சுடர் 
    
முதிரா ஞாயிற்று எதிரொளி கடுக்குங் 
    
கானலம் பெருந்துறைச் சேர்ப்பன் 
10
தானே யானே புணர்ந்த மாறே. 

    (சொ - ள்.) தோழி வாழி - தோழீ! நெடுங்காலம் வாழ்வாயாக! ; கண்ணும் தோளும் தண் நறுங் கதுப்பும் பழநலம் இழந்து - என்னுடைய கண்களும் தோள்களும் மெல்லிய நறிய கூந்தலும் பழைய அழகு கெட்டு; பசலை பாய இன் உயிர் பெரும் பிறிது ஆயினும் - பசலைபாய இனிய என்னுயிர் இறந்து படுவதாயினும்; சிறு கால் அலவனொடு பெயரும் புலவுத் திரை நளி கடல் பெருமீன் கொள்ளும் சிறுகுடிப் பரதவர் - சிறிய காலையுடைய ஞெண்டுகளோடு பெயர்ந்தேகும் புலவு நாற்றத்தையுடைய அலைகள் நெருங்கிய கடலின் கண்ணே சென்று பெரிய மீனைப் பிடிக்கும் சிறிய குடியின்கணுள்ள பரதமாக்கள்; கங்குல் மாட்டிய கனைகதிர் ஒள் சுடர் - மரக்கலங்களுக்குத் தெரியுமாறு இரவிலிடப்பட்ட நெருங்கிய கதிர்களையுடைய ஒள்ளிய விளக்கம்; முதிரா ஞாயிற்று எதிர் ஒளி கடுக்கும் - முதிராத இளஞாயிற்றின் எதிரே தோன்றிய ஒளிக்கு ஒப்பாகும்; கானல்அம் பெருந்துறைச் சேர்ப்பன் - கழிக்கரைச் சோலையையும் பெரிய கடலின் துறையையும் உடைய நங்காதலன்; தானே யான் புணர்ந்த மாறு - தமியனாய் வந்து யான் மகிழுமாறு முன்பு புணர்ந்து தலையளி செய்ததனால் இனியும் அங்ஙனம் வருவான் என்னுங் கருத்தோடு; என்னதூஉம் புலவேன் - சிறிதும் அவன்மீது புலப்பேனல்லேன்காண்; எ - று.

     (வி - ம்.) பெரும்பிறிது - சாக்காடு. கனைகதிர் - நெருங்கிய கதிர். நளி -செறிவு. தானே யானே என்பவற்றின் ஏகாரம் பிரிநிலை. எதிரொளி - பிரதிவிம்பம்.

     இழந்து பாய உயிர் பெரும்பிறிதாயினும் என்றது பழநலனிழந்து பசலை பாய்தலினாலே உயிர்போகுந் தன்மையேனென்றா ளென்பது, இறக்குந் தன்மையேன் புலந்தாவதென்னை யென்பாள், புலவேனென்றாள். தமிவந்து புணர்ந்து போயதனால் இன்னும் வருவான் கொல்லோவென்று ஐயுற்று உயிர்வைத்திருக்கின்றே னென்றாள். பழநலமிழந்து பசலை பாய வென்றது, பசலை பாய்தல். உயிர் பெரும் பிறிதாயினுமென்றது, கலக்கம்.

     இறைச்சி:- பரதவர் கங்குல்மாட்டிய விளக்கு இளங்கதிரின் ஒளி போல விளங்குமென்றது, தலைவன் என்னைக் கலந்து "நின்னிற் பிரியேன்" என்று சொல்லிவிடுத்த வாய்மை என்னெஞ்சின் இலங்கா நின்ற தென்றாள் என்பதாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை.) தானேயான் - தானாகவே. முன்னரும் தானாகவே வந்து தண்ணளி செய்தான் இன்றும் தானாகவே வந்து அளி செய்வன் என்னும் நம்பிக்கையால் அவனைப் புலவாமலே ஒருவாறுய்ந்திருக்கின்றேன் என்றவாறு.

(219)