திணை : குறிஞ்சி.

     துறை : (1) இது, குறைநேர்ந்த தோழி தலைமகளை முகம்புக்கது.

     (து - ம்.) என்பது, தலைமகன் அடைந்த குறையைத் தீர்க்குமாறு உடன்பட்ட தோழி தலைமகளிடஞ் சென்று, அத் தலைவி தன்முகம் நோக்கி மகிழ்ந்து வினாவுதல் நிமித்தமாக உரையாடுகின்றவள், "ஒரு தலைவன் ஊர்கின்ற மடல்மாவை யீர்த்து நம்முடைய மறுகின்கண் வரும் மாக்களாகிய மயக்கமுற்ற இவர்கள் உலகவியல் பறிந்திருப்பின் "இத் தோழியர் தலைவிக்கு வேறாவார்" என்று எம்முடன் சொல்லாடப் படுதல் எவ்வண்ணமாகு மென்று சூழ்ந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "குறைந்து அவட்படரினும்" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.

     துறை : (2) பின்னின்ற தலைமகன் தோழிகேட்பத் தலைமகளை ஒம்படுத்ததூஉமாம்.

     (து - ம்.) என்பது, “தன்குறையைத் தோழிபாலுரைத்த தலைமகன் மீட்டும் தான்கூறுவதனை அவள்கேட்டு விரைந்து குறைமுடிக்குமாற்றானே "யான் ஊர்கின்ற பனைமாவை யீர்த்து மறுகின்வரு மக்களாகிய மயக்கமுடைய இவர்கள் உலகவியலறிந்திருப்பின் "இத்தோழியர் தலைவிக்கு வேறாதலுடையார்" என்று எம்முடன் சொல்லுதல் எவ்வண்ணமாகு" மென்று கூறியதுமாகும்.

     (இ - ம்.) இதற்கு," தோழி குறைஅவட் சார்த்தி மெய்யுறக் கூறலும்" (தொல். கள. 11) என்னும் விதிகொள்க. அன்றி "மடன்மாக் கூறும் இடனுமா ருண்டே" (மேற்படி) என்னும் விதிகோடலுமாம்.

     துறை : (2) தான் ஆற்றானாய்ச் சொல்லியதூஉமாம்.

     (து - ம்.) என்பது, வெளிப்படை. (உரை எல்லாவற்றிற்கு மொக்கும்.)

     (இ - ம்.) இதற்கு,"பரிவுற்று மெலியினும்" (தொல். கள. 12) என்னும் விதிகொள்க.

    
சிறுமணி தொடர்ந்து பெருங்கச்சு நிறீஇக் 
    
குறுமுகிழ் எருக்கங் கண்ணி சூடி 
    
உண்ணா நன்மாப் பண்ணி எம்முடன் 
    
மறுகுடன் திரிதருஞ் சிறுகுறு மாக்கள் 
5
பெரிதுஞ் சான்றோர் மன்ற விசிபிணி 
    
முழவுக்கண் புலரா விழவுடை ஆங்கண் 
    
ஊரேம் என்னுமிப் பேரேம் உறுநர் 
    
தாமே ஒப்புரவு அறியின் தேமொழிக் 
    
கயலேர் உண்கட் குறுமகட்கு 
10
அயலோர் ஆகலென்று எம்மொடு படலே. 

     (சொ - ள்.) உண்ணா நல் மராப் பண்ணிச் சிறுமணி தொடர்ந்து பெருங்கச்சு நிறீஇக் குறு எருக்க முகிழ்க்கண்ணி சூடி - பனைமடலால் உண்ணாத ஒரு நல்ல குதிரையைச் செய்து அதற்குச் சிறிய மணிகளைக் கட்டிப் பெரிய கச்சையைப் பூட்டிக் குறிய எருக்கம்பூமாலையைச் சூடி ஒரு தோன்றல் அதில் ஏறியிருப்ப; எம்முடன் மறுகு உடன் திரிதரும் சிறு குறு மாக்கள் - அக் குதிரையை ஈர்த்துக் கொண்டு யாம் வருகிற தெருவில் எம் பின்னே வந்து திரிகின்ற சிறிய குறிய பிள்ளைகளாகிய; மன்ற விசி பிணி முழவுக்கண் புலரா விழவு உடை ஆங்கண் ஊரேம் என்னும் இப் பேர் ஏம் உறுநர்தாம் - நன்றாய் இறுகக் கட்டிய குட முழாவின்கண் ஓயாது முழங்குகின்ற திருவிழாவையுடைய அந்த வூரினே மென்று கூறும் இப் பெரிய மயக்கமுடையவர்கள் தாம்; ஒப்புரவு அறியின் - உலகநடை அறிந்திருப்பாரேயாயின்; தேம் மொழிக் கயல் ஏர் உண்கண் குறுமகட்கு அயலோர் ஆகல் என்று - எம்மைச் சுட்டித் "தேன்போலும் மொழியையும் கயல் போன்ற மையுண்ட கண்ணையுமுடைய நம் இளமடந்தைக்கு இத்தோழிமார் அயலாந் தன்மையுடையர்" என்று; எம்மொடு படலே - எம்முடன் சொல்லாடல் எவ்வளவு வியப்புடையது?; பெரிதும் சான்றோர் - இங்ஙனம் கூறுதலால் இவர் பெரிதும் சால்புடையர் போலும்; எ - று.

     (வி - ம்.) தொடர்தல் - தொங்கக் கட்டுதல். கச்சு - முதுகிலிட்ட கலனை நழுவாதபடி குதிரையின் பின்னே மாட்டிக் கட்டும் வார். இவையிரண்டும் குதிரையின் புனைவு. எருக்கங் கண்ணி : தலைமகன் சூடுவது.

     தலைமகன் மடலூர்தலை ஊராரறியின் நின்னை அலர்தூற்றுவராதலின் அதன்முன் நீ உடன்படவேண்டுமென்பதை யறிவுறுத்துவாளாய் அவன் மடலூர்கின்றமை கூறினாள். மக்களை நீவிர் யாவரென்றதற்குத் தக்க விடை கூறாது அந்த வூரினே மென்றமையின் மயக்கமுற்றவரென்றாள். யான் நினக்குரியள் ஆதலையறியாராய்க் குறுமகட்கயலோரென்றதனால் பெரிதுஞ் சான்றோரென் றிகழ்ந்து கூறினாள். இவையனைத்துந் தன்முகமாகத் தலைவிநோக்கி வினவுமாற்றாற்கூறியது. புகுதல் - தலைவி நோக்கிய நோக்கெதிர் தான் சென்றுபுகுதல். முகமென்பது அங்ஙனம் தான் புகுதற் கிடமாகிய நோக்கு. மெய்ப்பாடு - பிறன்கட்டோன்றிய இளிவரல். பயன் - தலைமகளை முகம்புகுவித்தல்.

     (பெரு - ரை.) உண்ணாமா - பனைமடலாற் செய்த குதிரை. சான்றோர் என்றது இகழ்ச்சி.

(220)