(து - ம்.) என்பது, சென்று வினைமுடித்து மீளுந் தலைமகன் தேர்ப்பாகனை நோக்கிப் பாகனே! நம் காதலி தம் புதல்வன் துயிலுமிடம் புகுந்து "எந்தாய் வருக" என்னுஞ் சொல்லை யாம் கேட்டு மகிழுமாறு நின் தேர் விரைவிலே செல்லுவதாகவென்று மகிழ்ந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "பேரிசை யூர்திப் பாகர் பாங்கினும்" (தொல். கற். 5) என்னும் விதி கொள்க.
| மணிகண் டன்ன மாநிறக் கருவிளை |
| ஒண்பூந் தோன்றியொடு தண்புதல் அணியப் |
| பொன்தொடர்ந் தன்ன தகைய நன்மலர்க் |
| கொன்றை ஒள்ளிணர் கோடுதொறும் தூங்க |
5 | வம்புவிரித் தன்ன செம்புலப் புறவின் |
| நீரணிப் பெருவழி நீளிடைப் போழச் |
| செல்க பாகநின் செய்வினை நெடுந்தேர் |
| விருந்து விருப்புறூஉம் பெருந்தோள் குறுமகள் |
| மின்னொளிர் அவிரிழை நன்னகர் விளங்க |
10 | நடைநாள் செய்த நவிலாச் சீறடிப |
் | பூங்கண் புதல்வன் தூங்குவயின் ஒல்கி |
| வந்தீக எந்தை என்னும் |
| அந்தீம் கிளவி கேட்க நாமே. |
(சொ - ள்.) பாக விருந்து விருப்புறூஉம் பெருந்தோள் குறுமகள் - பாகனே வரும்விருந்தை எதிரேற்க விருப்பங் கொண்ட பெரிய தோளையுடைய இளமையுற்ற எங் காதலி; மின் ஒளிர் அவிர் இழை நல் நகர் விளங்க நாள் நடை செய்த நவிலாச் சீறடிப் பூங்கண் புதல்வன் - மின்னல் போல் ஒளிவிடுதலையுடைய விளங்கிய அணிகலன்களால் எமது நல்ல மாளிகை யெங்கும் விளங்காநிற்ப நாட்காலையில் நடத்தலைப் பயின்றறியாத சிறிய அடிகளையும் பூப்போன்ற கண்ணையுமுடைய புதல்வன்; தூங்குவயின் ஒல்கி - தூங்குமிடத்திலே சென்று உடம்பிலுள்ள துவட்சியோடு அப் புதல்வனை நெருங்கி நோக்கி; எந்தை வந்தீக என்னும் அம் தீங் கிளவி நாம் கேட்க - "எந்தாய்! வருக" என்று அழைக்கின்ற அழகிய இனிய வார்த்தையை நாம் கேட்டு மகிழும்படி; மணி கண்டு அன்ன மா நிறக் கருவிளை ஒள் பூந்தோன்றி யொடு தண் புதல் அணிய - நீலமணியாற் செய்துவைத்தாற் போன்ற கரிய நிறத்தையுடைய கருங்காக்கணங்கொடி ஒள்ளிய காந்தளுடனே தண்ணிய புதல்தோறும் மலர்ந்து அழகுசெய்ய; பொன் தொடர்ந்து அன்ன தகைய நல்மலர்க் கொன்றை ஒள் இணர் கோடு தொறும் தூங்க - பொற்காசினைத் தொங்க விட்டாற் போன்ற அழகையுடைய நல்ல மலரையுடைய சரக் கொன்றையின் ஒள்ளிய பூங் கொத்துக்கள் அதன் கிளைகள் தோறும் தூங்காநிற்ப; வம்பு விரித்து அன்ன செம்புலப் புறவின் - இவற்றால் நறுநாற்றத்தைப் பரப்பினாற் போன்ற சிவந்த முல்லை நிலத்தில்; நீர் அணிப் பெருவழி நீள் இடைப் போழ நின் வினைசெய் நெடுந்தேர் செல்க-நீர் அமையப் பெற்ற பெரிய வழியின் நீண்ட இடமெங்கும் சுவடு பிளப்ப இயங்குந் தொழிலையுடைய நினது நெடிய தேர் விரைவிலே செல்வதாக; எ - று.
(வி - ம்.) கருவிளை - கருங்காக்கணம். தோன்றி - செங்காந்தள். வம்பு - நறுமணம். நவிலுதல் - பயிலுதல். இழையையுடைய புதல்வனென்க. வந்தீக: வருகவென்னும் வினைச்சொல்லின் திரிபு. "போர்யானை வந்தீக ஈங்கு" என்றார் (86) கலியினும்.
காதலி தன்னுள்ளமகிழ்ச்சியால் புதல்வனை எழுப்புவது முதலிற் கூறினான். காதலியும் புதல்வனும் தன்னைக் கண்டவழி கழியுவகை மீதூர்தலானும் அவருவகையைக் கண்டவுடன் தான் வழிவரும் வருத்தம் நீங்கப் பெறுதலுண்மையானும் அவள் புதல்வனையெழுப்புங் கிளவியைத் தான் கேட்டு மகிழுமாறு விரைந்து தேர்செல்வதாக வென்றான்.்மெய்ப்பாடு் - உவகை. பயன் - பாகன் விரைந்து தேர்கடாவல்.
(பெரு - ரை.) செய்வினை நெடுந்தேர் என்பதற்கு அணிசெய்தலை யுடைய நெடிய தேர் எனினுமாம்.
அந் தீங் கிளவி கேட்கம் என வினைமுற்றாகக் கண்ணழித்துத் தேர் செல்க யாம் அக்கிளவியைக் கேட்போமாக எனப் பொருள் கூறலுமாம். நாள் செய்தல் நவிலாச் சீறடி எனக் கண்ணழித்துக் கொள்க. இச் செய்யுளில் தலைவன் தான் கண்டின்யைபுற எண்ணும் தலைவியின் நிலை மிகவும் சிறந்த இன்பம் நல்கும் நிலையாதல் உணர்க. முல்லைநில வண்ணனை மிகவும் இனிதாதலும் உணர்க.
(221)