(து - ம்.) என்பது, தலைவன் பிரிந்ததனைத் தோழி தலைவிக்குத் தெரியக் கூறி மீட்டும் வினாவக் கேட்டு வருந்தி அன்பின் மிக்க பெரியராய் நின்னை நீங்ககிலேம் என்று தேற்றிச் சுரத்தின்கண்ணே சென்ற நம் காதலர் திறத்து யான் இனி மொழிவது யாதென நொந்து கூறா நிற்பது.
(இ - ம்.) இதற்கு ''அவனறிவு ஆற்ற அறியுமாகலின்'' (தொல். கற். 6) என்னும் நூற்பாவின்கண் ''ஆவியின் வரூஉம் பல்வேறு நிலையினும்'' என்னும் விதிகொள்க.
| அன்பினர் மன்னும் பெரியர் அதன்றலைப் |
| பின்பனி அமையம் வருமென முன்பனிக் |
| கொழுந்து முந்துறீஇக் குரவுஅரும் பினவே |
| புணர்ந்தீர் புணர்மி னோவென இணர்மிசைச் |
5 | செங்கண் இருங்குயில் எதிர்குரல் பயிற்றும் |
| இன்ப வேனிலும் வந்தன்று நம்வயின் |
| பிரியல மென்று தெளித்தோர் தேஎத்து |
| இனியெவன் மொழிகோ யானே கயனறக் |
| கண்ணழிந்து உலறிய பன்மா நெடுநெறி |
10 | வினைமூசு கவலை விலங்கிய |
| வெம்முனை அருஞ்சுரம் முன்னி யோர்க்கே. |
(சொ - ள்.) அன்பினர் மன்னும் பெரியர் - நங் காதலர்; நம்பால் அன்புடையவர் மிகப் பெரியர் அவர் அப்படியிருப்ப; அதன்தலை அமையம் பின்பனி வரும் என முன்பனிக் கொழுந்து முந்துறீஇ - அதன்மேலுங் காலமோ பின்பனிக் காலம் வருமென்று முன்பனியின் கொழுந்தை முற்படவிட்டு அறிவுறுத்தி அதற்கு அடையாளமாக; குரவு அரும்பின-குராமரம் அரும்பு கட்டின; இணர் மிசைச் செங்கண் இருங்குயில் எதிர் - மாவின் பூங்கொத்துமீது சிவந்த கண்களையுடைய கரிய குயிலின் சேவலும் பேடையும் எதிரெதிரிருந்து; ஓ புணர்ந்தீர் புணர்மின்ன - 'ஓ தலைவனும் தலைவியுமாயமைந்து புணர்ந்துடையீர் பிரியாதீர் இன்னும் பலபடியும் புணருங்கோள்!' என்று; குரல் பயிற்றும் இன்ப வேனிலும் வந்தன்று - தம் இனிய குரலாலெடுத்து இசைக்காநின்ற இன்பமுடைய வேனிற் பருவம் வந்திறுத்ததாதலின்; நம் வயின் பிரியலம் என்று தெளித்தோர் தேஎத்து - 'இனி நம் வயிற் பிரியகில்லோம்.' என்று என்னைத் தெளிவித்தனர், அங்ஙனம் தெளிவித்தவராய்ப் பின்பு; கயன் அறக் கண் அழிந்து உலறிய பல் மா நெடு நெறி - குளங்களில் நீர்வற்றத் தடையறச் செவ்வியழிந்து காய்ந்த பல பெரிய நெடிய நெறியையுடைய; வினை மூசு கவலை விலங்கிய வெம்முனை அருஞ்சுரம் முன்னியோர்க்கு - மறத் தொழில் நெருங்கிய கவர்ந்த வழிகள் குறுக்கிட்ட கொடிய முனையையுடைய செல்லுதற்கரிய சுரத்தின் கண்ணே சென்றனர், அவ்வாறு சென்றவர் நிமித்தமாக; இனி யான் எவன் மொழிகு - அவர்பால் இனி யான் யாது சொல்லமாட்டுவேன்? எ - று.
(வி - ம்.) கயன் - குளம். உலறுதல் - காய்தல். வினை - போர் வினை. விலங்குதல் - குறுக்கிடுதல். பின்பனியென்பதுமுதல் பிரியலமென்றதன் காறும் தலைவன் கூற்றைக்கொண்டு கூறியது.
பருவவியல்பு அறியாதார் பிரியக்கருதினால் அவரைத் தெளித்தலுமாம். அங்ஙனமின்றித் தாம் அறிந்துவைத்துப் பிரிபவர்க்கு யான் யாது கூறவல்லேனென்றழிந்து கூறினாள். பிரியலமென்று கூறிப்பிரிந்ததனால் நம் பால் அன்புடையவரென அசதியாடிக்கூறினாள். மன்னும் பெரியரென்றதும் அது. உலறியகொடியநெறியிலே செல்லுகின்றனரென்றது, அத்தகைய நெறியிலே செல்லுபவர் நெஞ்சமும் பசையற்ற கொடுமையுடையதாதலின் அவர்திறத்து யாது சொல்ல மாட்டுவேன் என்றதூஉமாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.
(பெரு - ரை.) மன்னும் - மிகவும். ''பின்பனி...........வந்தன்று'' என்னுமளவும் தலைவியே கூறினள் என்று கோடலே அமையும், தலைவன் கூற்றைக் கொண்டு கூறினள் எனல் வேண்டாவாம். அவர் தாமே உணர்ந்து பிரியாமைக்குப் பல ஏதுக்கள் உளவாகவும் மேலும் பிரியலம் என்று தெளித்தவராகவும் அன்பினராகவும் மிகப் பெரியராகவும் இருக்கின்ற அவரே பிரிவார் எனின் அவர்க்கு யாம் கூறயாதுளது என்று வருந்தியபடியாம். 'வில்மூசு கவலை' என்றும் பாடம்.
(224)