திணை : குறிஞ்சி.

     துறை : (1) இது, வன்புறை எதிரழிந்தது.

     (து - ம்.) என்பது, தலைமகன் பிரிதலானே வருந்திய தலைமகளைத் தோழி, 'நீ வருந்தாதேகொள்; அவர் இப்பொழுதே வருவர்' என்று வலியுறுத்திக் கூறப் பின்னும் ஆற்றாளாய்த் தோழியை நோக்கித் தோழீ! நாடனது மார்பை நாம் போய் இரந்தோமோ? இல்லையே: அவன் தானே வந்து தலையளிசெய்து, இப்பொழுது துன்புறுத்துகின்றானே யென்று எதிரழிந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கும் முற் செய்யுட்கோதிய விதியே யமையும்.

     துறை : (2) பரத்தை தலைமகட்குப் பாங்காயின வாயில் கேட்பச் சொல்லியதூஉமாம்.

     (து - ம்.) என்பது, காதற்பரத்தை தலைமகளுக்குரிய தோழி முதலாயினார் கேட்கும்படியாக நாடனது மார்பை யாரேனும் இரந்தோருண்டோ? அவனே நமது நலனைத் துய்க்கவந்தவிடத்துத் தலைமகள் வருந்துவதனால் யாது பயன் உண்டெனச் செருக்கிக் கூறாநிற்பதுமாகும்.

     (இ - ம்.) இதற்குப் ''புல்லுதன் மயக்கும் புலவிக் கண்ணும்'' (தொல். கற். 10) என்னும் விதி கொள்க.

    
முருகுறழ் முன்பொடு கடுஞ்சினஞ் செருக்கிப்  
    
பொருத யானை வெண்கோடு கடுப்ப  
    
வாழை ஈன்ற வையேந்து கொழுமுகை  
    
மெல்லியல் மகளிர் ஓதி அன்ன  
5
பூவொடு துயல்வரும் மால்வரை நாடனை  
    
இரந்தோர் உளர்கொல் தோழி திருந்திழைத்  
    
தொய்யில் வனமுலை வரிவனப்பு இழப்பப்  
    
பசந்தெழு பருவரல் தீர  
    
நயந்தோர்க் குதவா நாரின் மார்பே.  

     (சொ - ள்.) தோழி திருந்து இழைத்தொய்யில் வனமுலை வரி வனப்பு இழப்பப் பசந்து எழு பருவரல் தீர - தோழீ! திருத்தமாகச் செய்த கலன் அணிந்த தொய்யிற் குழம்பால் எழுதப்பட்ட வனமுலையின்கணுள்ள இரேகையின் அழகு கெடும்படி பசந்து தோன்றிய துன்பந்தீருமாறு; முருகு உறழ் முன்பொடு கடுஞ்சினம் செருக்கிப் பொருத யானை வெள் கோடு கடுப்ப - முருகவேளையொத்த வலியொடு கடுஞ்சினம் மிகுத்துப் போர்செய்த யானையின் குருதி படிந்த வெளிய தந்தம் போல; வாழை ஈன்ற வை ஏந்து கொழுமுகை - வாழை அப்பொழுது ஈன்ற தாற்றின் கூர்மை பொருந்திய கொழுத்த முகை ; மெல் இயல் மகளிர் ஓதி அன்ன பூவொடு துயல்வரும் - மெல்லிய சாயலையுடைய மகளிரது கூந்தலை முடித்துப்போட்டாற் போன்ற அதன் பூவொடு அசையாநிற்கும்; மால் வரை நாடனை நயந்தோர்க்கு உதவா நார் இல்மார்பு இரந்தோர் உளர் கொல் - பெரிய மலை நாடன்பாற் சென்று விரும்பின எமக்கு உதவாத அன்பற்ற அவனது மார்பை நம்மில் இரந்து கேட்டவர் உளரோ? அவனே வந்து தலையளி செய்து இப்பொழுது கைவிட்டொழிந்தனன் கண்டாய்! எ - று.

     (வி - ம்.) வை - கூர்மை. தொய்யில் - கரும்பு வடிவாக முலையில் எழுதுங் கோலமுமாம். நார் - அன்பு. நயந்தோர்: இடவழுவமைதி. அவனே வந்து என்பதுமுதற் குறிப்பெச்சம். வெண்கோடு - தாறு விடுதலுக்கும், ஓதி - பூவுக்கும் உவமையாக்குக. நாடனது மார்பையென இயைக்க.

    இங்ஙனம் வருத்துமாறு கைவிட்டமையின் நயந்த எமக்கு உதவாத நாரில்மார்பென்றாள். இரவாதுதானேவந்து புணர்ந்தகன்றமையின் தன்னுறு புன்க ணோம்புவதல்லது பிறருறுவிழுமங் களையாத தன்மையனாயினானே என்றிரங்கியதாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

     (2) உரை :-மலைநாடன்பாற்சென்று விரும்பினார்க்குதவாத அவனது மார்பை இங்கு இரந்தோருளரோ? யாருமிரந்தாரிலர்: அவன் பற்பலர் மாட்டுந்துய்க்கச்செல்லுதல்போல, என்மாட்டும் வந்தானாக அது கொண்டு தலைமகள் வருந்துவதால் யாதுபயன்? எ - று. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - காதற்பரத்தை தலைமகளை இகழ்ந்துகூறல்.

(225)