(து - ம்.) என்பது, தலைவன் வினைவயிற்செல்லுதலை உடன்படாது முற்கூறியபடியே தடுத்துக்கூறியதுமாகும்.
(உரை இரண்டற்கு மொக்கும்.) (இ - ம்.) இதனை, முன் துறைக்குக் காட்டிய நூற்பாவின்கண் வரும் ''மரபுடையெதிரும்'' என்பதனால் அமைத்துக் கொள்க.
| சேறும் சேறும் என்றலின் பலபுலந்து |
| செல்மின் என்றல் யானஞ் சுவலே |
| செல்லா தீமெனச் செப்பிற் பல்லோர் |
| நிறத்தெறி புன்சொலின் திறத்தஞ் சுவலே |
5 | அதனாற்,செல்மின் சென்றுவினை முடிமின்சென்றாங்கு |
| அவண்நீ டாதல் ஓம்புமின் யாமத்து |
| இழையணி ஆகம் வடுக்கொள முயங்கி |
| உழையீ ராகவும் பனிப்போள்; தமியே |
| குழைவான் கண்ணிடத்து ஈண்டித் தண்ணென |
10 | வாடிய இளமழைப் பின்றை |
| வாடையுங் கண்டிரோ வந்துநின் றதுவே. |
(சொ - ள்.) சேறும் சேறும் என்றலின் பல புலந்து செல்மின் என்றல் யான் அஞ்சுவல் - 'நாம் வினைவயிற் செல்வோம் நாம் வினைவயிற் செல்வோம் என்று நீர் பலகாலும் கூறுதலாலே யான் பலவாகப் புலந்து கூறிச் செல்லுவீராக' என்று சொல்லுதற்கு அஞ்சாநிற்பேன்; செல்லாதீம் எனச் செப்பின் பல்லோர் நிறத்து எறி புன்சொலின் திறத்து அஞ்சுவல் - 'நீர் செல்லாது இங்கே இருமின்' என்று சொன்னால் பலருங் கூறும் மார்பிலே தைக்கின்ற அம்பு போன்ற புல்லிய சொல்லினிமித்தமாக எங்கே பழிவந்து மூடுமோ என்று அதற்கும் நான் அஞ்சாநிற்பேன்; அதனால் செல்மின் சென்று வினை முடிமின் சென்ற அவண் நீடு ஆதல் ஓம்புமின் - ஆதலால் நீர் செல்லுவீராக! சென்று வினை முடிப்பீராக! அங்ஙனம் முடிக்கச் சென்ற அவ்விடத்து நெடுங்காலம் நிற்றலை ஒழியுமாற்றைப் பாதுகாத்துக் கொள்வீராக!; யாமத்து இழை அணி ஆகம் வடுக்கொள முயங்கி உழையீர் ஆகவும் பனிப்போள் - இரவு நடுயாமத்துக் கலன் அணிந்த மார்பிலே தழும்புகொள்ளுமாறு முயங்கி நீயிர் அருகிருப்பீராயினும் இவள் நடுங்காநிற்பள் கண்டீர்!; தமியே குழைவான் கண் இடத்து ஈண்டித் தண் என ஆடிய இளமழைப் பின்றை - அத்தகையாள் இப்பொழுது தனியேயிருந்து வருந்துமாறு அகன்ற இடமெங்கும் பரவி நெருங்கித் தண் எனும்படி இயங்குகின்ற பெய்து வெளிதாகிய மேகத்தின் பின்னர்; வந்து நின்ற வாடையும் கண்டிர் - வந்துநின்ற வாடைக் காற்றையுங் கண்டீரன்றோ? ஆதலின் ஆராய்ந்து ஏற்றது செய்ம்மின்!; எ - று.
(வி - ம்.) பல்லோர் நிறத்தெறிபுன்சொல் - அறப்புறங்காவல், நாடு காவலென்னும் இவற்றின்பொருட்டுச் செல்லாதிருப்பதாலாகிய கேட்டைக்குறித்துப் பலருங்கூறுங் கடுஞ்சொல்.
முயங்கி அணைத்திருந்தகாலத்தும் பனிப்பவள் நீயிர்பிரியின் வாடையால் நடுங்கி இறந்துபடுமென்பாள் சுட்டிக்காட்டி வாடையுங் கண்டீரோ என்றாள். மெய்ப்பாடு - அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் - செலவழுங்குவித்தல்.
(பெரு - ரை.) ''தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாமையும்'' நன்மனைவிக்குச் சிறந்த கடமையாதல் பற்றி, பல்லோர் கூறும் புன்சொலின் திறத்து அஞ்சுவல் என்றாள். தலைவியை எவ்வாற்றானும் பேணுதல் தன் தலைசிறந்த கடமையாதலின் செல்மின் என்றல் யான் அஞ்சுவல் என்றாள். சென்றால் இவள் இறந்துபடுதலும் கூடும் என்பது குறிப்பு. சென்றவிடத்தே நீடாது வம்மின் என்றதற்கு ஏதுக்காட்டுவாள் உழையீராகவும் பனிப்போள் என்றும் வாடையும் வந்து நின்றது கண்டீர் என்றாள்.
(229)