(து - ம்.) என்பது, தலைவன் சிறைப்புறத்தா னாதலையறிந்த தோழி அவன் இன்றி அமையாமையாலே, தாம் வருந்துவதனை அறிவுறுத்தி விரைந்து வரையுமாற்றானே தலைவியை நோக்கி நம் கொண்கன் செய்த காதல் நம்மைவிட்டு நீங்காமையாலே துறை நோக்குதற்கு வருத்தமாயிராநின்றதென வரைவுதோன்றக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை ''களனும் பொழுதும்.............அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்'' (தொல். கள. 23) என்னும் விதியினால் அமைத்துக்கொள்க.
| மையற விளங்கிய மணிநிற விசும்பின் |
| கைதொழு மரபின் எழுமீன் போலப் |
| பெருங்கடல் பரப்பின் இரும்புறந் தோயச் |
| சிறுவெண் காக்கை பலவுடன் ஆடுந் |
5 | துறைபுலம்பு உடைத்தே தோழி பண்டும் |
| உள்ளூர்க் குரீஇக் கருவுடைத் தன்ன |
| பெரும்போது அவிழ்ந்த கருந்தாள் புன்னைக் |
| கானலங் கொண்கன் தந்த |
| காதல் நம்மொடு நீங்கா மாறே. |
(சொ - ள்.) தோழி பண்டும் உள் ஊர்க்குரீஇக் கரு உடைத்து அன்ன பெரும்போது அவிழ்ந்த கருந்தாள் புள்னைக்கானலங் கொண்கன் - தோழீ! இதன் முன்னும் மனையின் கண்ணேயுள்ள ஊர்க்குருவியின் முட்டையை உடைத்தாற்போன்ற பெரிய அரும்பு மலர்ந்த கரிய அடியையுடைய புன்னையஞ் சோலையையுடைய கொண்கன்; தந்த காதல் நம்மொடு நீங்காமாறு - கொடுத்த காதலானது நம்மை விட்டு நீங்காமையினாலே : மை அற விளங்கிய மணிநிற விசும்பின் கை தொழு மரபின் எழு மீன்போல - மாசு அற விளங்கிய நீலமணிபோன்ற நிறத்தையுடைய ஆகாயத்தின்கண்ணே தோன்றி உலகத்தாராலே கைதொழப்படுந் தகுதியையுடைய முனிவரின் தோற்றமாகிய ஏழுமீன்களைப் போல; பெருங்கடற் பரப்பின் இரும் புறந்தோயச் சிறு வெண்காக்கை பல உடன் ஆடும் துறை - பெரிய கடற் பரப்பின்கண்ணே கரியமுதுகு நனையும்படி சிறிய வெளிய நீர்க்காக்கை பலவும் ஒருசேர நீர் குடையாநிற்கும் கடல் துறையை; புலம்பு உடைத்து - யாம் தமியேமாய் நோக்குதற்கு அத் துறை நனி இன்னாமை உடையதாகக் காணுந் தன்மையதாயிராநின்றது; எ - று.
(வி - ம்.)எழுமீன் - உத்தரதுருவத்தைச் சூழ்ந்துவரும் (எழுமுனிவர் எனப்படும்) ஏழுமீன்கள். பண்டுந்தந்த காதலென இயைக்க.
புன்னையங்கானலின் முன்பு முயங்கினமையின் அதனை நோக்கலும் கானலங்கொண்கன் தந்த காதலென இடத்தொடு புலம்பத்தொடங்கினாள். கொண்கனொடு ஆடற்கினிய துறையாதலின் அவனின்மையிற் புலம்பு உடைத்தென வருந்தினாளாயிற்று. மணஞ்செய்துகொண்டாலன்றி அவன் வெளிப்படையாகவந்து ஆடற்கியலாமையின், வரைவு கடாவுமாயிற்று.
இறைச்சி :- சிறுவெண்காக்கை தாம் ஆணும் பெண்ணும் பல ஒரு சேர ஆடுதலைநோக்கினகாலை யாமும் அங்ஙனம் ஆடற்கில்லையேயென வருந்தாநிற்குமென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவு கடாதல்.
(பெரு - ரை.) அவ்வேழுமீனும் துறந்தோர் குழுவாகலின் கைதொழு மரபின் மீன் எனப்பட்டன. மலர்ந்த புன்னை மலர்க்கு உடைந்த ஊர்க்குருவியின் முட்டை உவமை;
(231)