திணை : குறிஞ்சி.

    துறை : இது, பகல்வருவானை இரவுவருவெனத் தோழி சொல்லியது.

     (து - ம்.) என்பது, பகற்குறிக்கண்வந்த தலைவனைத் தோழி சென்று வலங்கொண்டு எம்பெருமான் எமதுபாக்கத்து இரவுதங்கினையாகிச் செல்லுவையாயின் அதற்கடையாளமாக இப்பொழுது நின் மாலையைத் தருக என்றுவேண்டுவேமெனக் கூறுகின்றவள், உள்ளுறையால் அதனையும் மறுத்து வரைவுகடாவாநிற்பது.

     (இ - ம்.) இதற்கும் முற்செய்யுள் விதியே யமையும்.

    
சிறுகண் யானைப் பெருங்கை ஈரினம் 
    
குளவித் தண்கயங் குழையத் தீண்டிச் 
    
சோலை வாழை முணைஇ அயலது 
    
வேரல் வேலிச் சிறுகுடி அலறச் 
5
செங்கால் பலவின் தீம்பழ மிசையும் 
    
மாமலை நாட தாமம் நல்கென 
    
வேண்டுதும் வாழிய எந்தை வேங்கை
    
வீயுக விரிந்த முன்றில் 
    
கல்கெழு பாக்கத்து அல்கினை செலினே. 

     (சொ - ள்.) சிறுகண் பெருங்கை யானை ஈர் இனம் - சிறிய கண்ணையும் பெரிய கையையுமுடைய யானையின் களிறும் பிடியுமாகிய இரண்டினம்; குளவித் தண் கயம் குழையத் தீண்டிச் சோலை வாழை முணைஇ - மலைப்பச்சையைச் சுற்றிலுமுடைய நீர்ச்சுனையிலே மெய் துவளப் புணர்ந்து சோலையிலுள்ள மலைவாழையைத் தின்பதை வெறுத்து; அயலது வேரல் வேலிச் சிறுகுடி அலறச் செங்கால் பலவின் தீம்பழ மிசையும் மா மலை நாட - அயலிடத்துள்ளதாகிய மூங்கில் முள்ளான் மிடைந்த வேலியையுடைய சிறிய குடியின்கண்ணுள்ளார் அஞ்சியலறும்படி சிவந்த அடியையுடைய பலாவினது இனிய பழத்தைத் தின்னாநிற்கும் கரிய மலை நாடனே!; வாழிய - நீ நெடுங்காலம் வாழ்வாயாக!; எந்தை வேங்கை வீ உக விரிந்த முன்றில் - எந்தைக்குரிய, வேங்கை மலர் உதிரும்படி அகன்ற வாயிலையுடைய ; கல் கெழு பாக்கத்து அல்கினை செலின் - மலையிலே பொருந்திய பாக்கத்து இன்று இராப் பொழுதையிலே தங்கினையாகிப் பிற்றைநாளிற் செல்வதாயின்; தாமம் நல்கு என வேண்டுதும் - அதற்கு அடையாளமாக நினது மாலையைக் கொடுப்பாயாக! என வேண்டுகிற்போம்! எ - று.

     (வி - ம்.)குளவி - மலைப்பச்சை. பாக்கம் - பக்கத்துள்ளவூர். முணைதல் - வெறுத்தல். மிசைதல் - தின்னுதல். இஃது அழிவில் கூட்டத்து அவன் புணர்வுமறுத்தல்.

    இரவில் வந்து முயங்குங்காறும் ஆற்றியிருத்தலருமையின், முற்பட மாலை நல்குவாயாக வென்றாள்; அதனையணைத்தேனும் ஆற்றலாமாதலின்.

     உள்ளுறை :-யானை ஈரினம் தலைவனும் தலைவியுமெனவும், குழையத் தீண்டியென்றது இயற்கைப் புணர்ச்சியிற் கூடியதெனவும், வாழையை வெறுத்தென்றது களவுப்புணர்ச்சியை வெறுத்ததெனவும், சிறுகுடியலற என்றது பழிச்சொற்கூறும் அயலிலாட்டியர் நடுங்கி அவர் வாயடங்கச் செய்ததெனவும், பலவின் பழமிசையுமென்றது வரைந்துகொண்டு இல்லற நடத்தி இன்பந்துய்ப்பாராகவெனவும் கொள்க. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

     (பெரு - ரை.) 'காமல் நல்கென' என்றும், 'வீஉக வரிந்த' என்றும் பாடம்.

(232)