(து - ம்.) என்பது, மணம்புரிந்துகொள்ளாது தலைவன் நீட்டித்தலும் அதுபொறாது தலைவி வருந்தக்கண்ட தோழி "நீ வருந்தாதே கொள், தலைமகன் பகற்குறி வந்து பெயர்ந்தனனாயினும், இனி அவன் வரைவொடு வருதலைப் பார்த்து மீளுதும் வருவாயாக" வென அவள் ஆற்றும் வண்ணம் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "ஆங்கு அதன் தன்மையின் வன்புறை யுளப்பட" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.
| உரவுத்திரை பொருத பிணர்படு தடவுமுதல் |
| அரவுவாள் வாய முள்இலைத் தாழை |
| பொன்னேர் தாதின் புன்னையொடு கமழும் |
| பல்பூங் கானல் பகற்குறி வந்துநம் |
5 | மெய்கவின் சிதையப் பெயர்ந்தன னாயினுங் |
| குன்றில் தோன்றும் குவவுமணல் ஏறிக் |
| கண்டனம் வருகஞ் சென்மோ தோழி |
| தண்தார் அகலம் வண்டிமிர்பு ஊதப் |
| படுமணிக் கலிமா கடைஇ |
10 | நெடுநீர்ச் சேர்ப்பன் வரூஉம் ஆறே. |
(சொ - ள்.) தோழி உரவுத்திரை பொருத பிணர்படு தடவுமுதல் அரவு வாள் வாய முள்இலைத் தாழை - தோழீ! வலிய அலைவந்து மோதிய சருச்சரை பொருந்திய வளைந்த அடியையுடைய அராவுகின்ற வாளரம் போன்ற வாயையுடைய முட்கள் பொருந்திய இலைமிக்க தாழையின்கணுள்ள பூ; பொன் நேர் தாதின் புன்னையொடு கமழும் பல் பூங் கானல் - பொன் போன்ற மகரந்தத்தையுடைய புன்னைமலரொடு சேர்ந்து மணங்கமழாநிற்கும் இன்னும் பலவாகிய மலர்களையுடைய சோலையில் வைத்த; குறி பகல் வந்து நம் மெய் கவின் சிதையப் பெயர்ந்தனன் ஆயினும் - குறியிடத்திலே பகற் பொழுது வந்து நலனுகர்ந்து நம்முடைய உடம்பின் அழகு கெடும்படியாகப் பெயர்ந்து போயினனாயினும்; தண்தார் அகலம் வண்டு இமிர்பு ஊத - தண்ணிய மாலை அணிந்த மார்பின்கண் வண்டுகள் வந்தொலித்து அம்மாலையின் தேனை உண்ணாநிற்ப; படுமணிக் கலிமா கடைஇ - ஒலிக்கின்ற மணியணிந்த குதிரைகளைச் செலுத்தி; நெடுநீர்ச் சேர்ப்பன் வரூஉம் ஆறு - நெடிய நீரையுடைய நெய்தனிலத்திற்குத் தலைவனாகிய நம்காதலன் வரைவொடு வருகின்றதனை; குன்றில் தோன்றும் குவவு மணல் ஏறிக் கண்டனம் வருகம் சென்மோ - யாம் சென்று குன்றுபோலத் தோன்றுகின்ற குவிந்த மணலாலாகிய திடர்மீது, ஏறிநின்று கண்டு வருவோம் அதற்காகச் செல்வோமோ? ஒன்று கூறிக்காண்; எ - று.
(வி - ம்.)அரவுவாள் - வாளரம். ஊதல் - உண்ணுதல். தாழை, புன்னை; மலருக்குப் பொருளாகு பெயர்கள். வாய தாழை: குறிப்புப் பெயரரெச்சத் தொடர்
நலனுகர்தலால் அழகு கதிர்ப்பேறினும் அது வாட்டமுறக் கை விட்டுச் சென்றமையின் கவின் சிதையப் பெயர்ந்தனனென்றாள். இடையீட்டாலே மெய்கவின் சிதையப் போயினனாதலின் வரைவொடு வருவான் காண்; அதனைச் சென்று நோக்குதுமென அவளை ஆற்றுவித்தாளாயிற்று. வண்டிமிர்பூதத் கலிமா கடைஇ மிக்க ஆராவாரத்தோடு வருதலின், வரைவு மலிந்தமையுமாம்.
இறைச்சி :- தாழையும் புன்னையுஞ் சேர்ந்து மணங்கமலுங் கானல் என்றது, தலைவன் வரைவொடு புகுதலாலே மணம்புரிந்துகொண்டு நீயும் அவனும் நம்முடைய சேரி விளங்க வீற்றிருப்பீரென்றதாம். மெய்ப்பாடு - உவகை. பயன் - மகிழ்வித்தல்.
(பெரு - ரை.) வாய என்றது இலையின் விளிம்புகளை. தலைவன் ஒருதலையாக வரைவொடு வருவான் என்பது தோன்ற மணியொலிக்கும் குதிரைகளைக் கடாவி ஆரவாரத்தோடு வரும் ஆறு என்றாள். ஆறு - வகை; வழியெனினுமாம்.
(235)