திணை : குறிஞ்சி.

     துறை : இது, தோழி உரை மாறுபட்டது.

     (து - ம்.) என்பது, பிரிவுக்காலத்துத் தலைவியின் துன்பம் நீங்குமாறு தேற்றுதற்கு உரையெடுத்த தோழி அதனை ஏற்றுக்கொள்ளாது தலைவி ஆற்றியிருப்பதை யறிந்து வியந்து, "மடந்தாய், அவர் கூறிய பருவ வரவின் அடையாளமாக மழைவாராநின்றது கண்டாய்; அது காறும் தலைவர் நீத்தகன்றனரெனக் கூறினாயுமல்லையே, இஃதென்ன வியப்"பென மாறுபடக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும் பொருள்" (தொல். கற். 5) என்னும் நூற்பாவின்கண் "பிறவும் வகைபட வந்த கிளவி" என்பதனால் அமைத்துக் கொள்க.

    
நனிமிகப் பசந்து தோளுஞ் சாஅய்ப் 
    
பனிமலி கண்ணும் பண்டு போலா 
    
இன்னுயிர் அன்ன பிரிவருங் காதலர் 
    
நீத்து நீடினர் என்னும் புலவி 
5
உட்கொண்டு ஊடின்றும் இலையோ மடந்தை 
    
உவக்காண் தோன்றுவ ஓங்கி வியப்புடை 
    
இரவலர் வரூஉம் அளவை அண்டிரன் 
    
புரவெதிர்ந்து தொகுத்த யானை போல 
    
உலக முவப்ப ஓதரும் 
10
வேறுபல் உருவின் ஏர்தரு மழையே. 

     (சொ - ள்.) மடந்தை - மடந்தாய்!; வியப்பு உடை இரவலர் வரூஉம் அளவை - வியப்புடைய இரவலர் வரும் பொழுது; புரவு எதிர்ந்து அண்டிரன் தொகுத்த யானை போல - அவர்கட்குக் கொடுப்பது கருதி "ஆய்அண்டிரன்" சேர்த்துவைத்த யானைத்திரள் போல; உலகம் உவப்ப ஓது அரும் வேறுபல் உருவின் ஏர்தரு மழை - உலகத்தில் வாழும் உயிர்கள் மகிழ்ச்சியடையச் சொல்லுதற்கரிய வெவ்வேறாகிய உருவத்தோடு எழுகின்ற மேகங்கள்; ஓங்கித் தோன்றுவ உவக்காண் - ஓங்கித் தோன்றுவனவற்றை உவ்விடத்தே காணாய்! இஃது அவர் குறித்த பருவமன்றோ?; நனிமிகப் பசந்து தோளும் சாஅய் - இதுகாறும் மிகப் பசந்து தோளும் வாட்டமடைந்து; பனி மலி கண்ணும் பண்டு போலா - நீர் வடிகின்ற கண்களும் முன்போல் இன்றி வேறுபாடு கொள்ள; இன் உயிர் அன்ன பிரிவு அருங் காதலர் நீத்து நீடினர் என்னும் புலவி உள்கொண்டு - இனிய உயிர் போன்ற பிரிதற்கரிய காதலர் என்னைக் கைவிட்டு நெடுந்தூரம்சென்று ஒழிந்தனரே என்று கூறப்படுகின்ற புலவியை நீ நின் உள்ளத்தேகொண்டு; ஊடின்றும் இலை - ஊடுகின்றதும் இல்லையோ? இஃதென்ன வியப்பு; எ-று.

     (வி - ம்.) நனிமிக: ஒருபொருட் பன்மொழி. உவக்காண் - உவ்விடத்தே பார். ஏர்தரல் - எழுதல். இஃதென்ன வியப்பு என்றது சொல்லெச்சம். வியப்புடையிரவலர் - செய்யுளால் தன்னைப் புகழ்தலையுடைய இரவலர்.

     அவர்பால் அன்பிலள் கொடியளென்று ஏதிலாட்டியர் ஏசுபவாதலின் அத்திறத்தேனும் புலப்பாயாக வென்பாள் ஊடின்றுமிலையோ என்றாள். வருந்தாது மகிழ்ந்த வண்ணமே தலைவரை எதிரேற்குந் தன்மையைக் காணென்பாள் அவர் குறித்த மழை தோன்று மென்றாள். மெய்ப்பாடு -பெருமிதம். பயன் - மாறுபடக்கூறல்.

     (பெரு - ரை.) இது, தலைவன் பிரிவினால் பெரிதும் வருந்தி "கையறவு" என்னும் ஆறாம் மெய்ப்பாடெய்தியிருந்த தலைவியைத் தோழி அவன் கூறிப் போந்த கார்ப்பருவ வரவுகாட்டி அவளை விழிப்பூட்டி ஆற்றுவித்தபடியாம். தலைவி ஆற்றியிருப்பதை அறிந்து தோழி வியந்து கூறினாள் எனக் கோடல் தகுதியன்றென்க. ஊடின்றுமிலையே என்றது, கையறவு என்னும் மெய்ப்பாடு. மழைகாண் என்றது, பருவ வரவு காட்டியபடியாம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.

(237)