திணை : பாலை.

     துறை : இது, தலைமகள் வன்பொறை எதிரழிந்தது.

     (து - ம்.)என்பது, தலைமகன் பொருள்வயிற் பிரிதலாலே வருந்திய தலைமகளை "நீ வருந்தாது வலிதிற் பொறுத்திருப்பா"யென்ற தோழியைநோக்கி அவள் "யான் எங்ஙனம் ஆற்றுவேன்! பொருள்வயிற் பிரிந்தோர் ஆண்டு என்னை நினைப்பாராயின் எனக்குப் புரையேறும்; அப்படியுஞ் செய்யார் போலு"மென்று அழிந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனையும், "ஆவயின் வரூஉம் பல்வேறு நிலை" என்பதனாற் கொள்க.

    
உள்ளார் கொல்லோ தோழி கொடுஞ்சிறை 
    
உள்ளடி பொறித்த வரியுடைத் தலைய 
    
நீரழி மருங்கின் ஈரயிர் தோன்ற 
    
வளரா வாடை உளர்புநனி தீண்டலின் 
5
வேழ வெண்பூ விரிவன பலவுடன் 
    
வேந்துவீசு கவரியிற் பூம்புதல் அணிய 
    
மழைகழி விசும்பின் மாறி ஞாயிறு 
    
விழித்திமைப் பதுபோல் விளங்குபு மறைய 
    
எல்லை போகிய பொழுதின் எல்லுறப் 
10
பனிக்கால் கொண்ட பையுள் யாமத்துப் 
    
பல்லிதழ் உண்கண் கலுழ 
    
நில்லாப் பொருட்பிணிப் பிரிந்திசி னோரே. 

     (சொ - ள்.) தோழி கொடுஞ்சிறை உள் அடி பொறித்த வரி உடைத் தலைய நீர் அழி மருங்கின் - தோழீ! வளைந்த சிறகையுடைய பறவைகளின் உள்ளங்காற் சுவடு பொருந்திய வரிகளை மேற்கொண்டுள்ள நீர்வற்றிய இடங்கள் தோறும்; ஈர் அயிர் தோன்ற - மெல்லிய நுண்மணல் தோன்றாநிற்ப; வளரா வாடை உளர்பு நனி தீண்டலின் - மெல்லென வீசும் வாடைக்காற்று உளர்ந்து மிகவும் தீண்டுதலினாலே; வேழ் வெண்பூ விரிவன பல உடன் வேந்து வீசு கவரியின் பூம்புதல் அணிய - கரும்பின் வெளிய பூப் பலவும் ஒருசேர விரிவனவாய் அரசனுக்கு வீசப்படும் கவரிபோல மெல்லிய புதல்தோறும் அழகு செய்யா நிற்ப; மழை கழி விசும்பின் மாறி விழித்து இமைப்பதுபோல் ஞாயிறு விளங்குபு மறைய - மேகங்கள் நீங்கிச் செல்லுகின்ற ஆகாயத்தில் மாறி மாறி விழித்து மூடி இமைப்பதுபோல் ஞாயிறு தோன்றித் தோன்றி மறையாநிற்ப; எல்லை போகிய பொழுதின் எல் உற - பகற்காலஞ் சென்ற மாலைப் பொழுதோடு இராக்காலம் வந்து சேர்தலும்; பனிக் கால் கொண்ட பையுள் யாமத்து - பனி நிலத்தில் விழத்தொடங்கிய துன்பத்தைத் தருகின்ற நடு யாமத்தில்; பல் இதழ் உண்கண் கலுழ - இமையையுடைய மையுண்ட கண்கள் நீர் பெருகி வடியும்படி அழாநிற்ப; நில்லாப் பொருள் பிணிப் பிரிந்திசினோர் - நிலைநில்லாத பொருளை ஈட்டுதலில் உள்ளம் பிணிப்புண்டு எம்மைப் பிரிந்து சென்ற காதலர்; உள்ளார் கொல் - இப்பொழுது யாம் படுந்துயரைக் கருதினாரேல், புரையேறல் தும்மல் முதலியவற்றால் அறிந்து இனி அவர் வருவர் போலுமென ஆற்றியிருப்பேமன்றோ? அங்ஙனம் இன்மையால் கருதியிருப்பாரல்லரோ? எ - று.

     (வி - ம்.) கொடுஞ்சிறை: பறவைக்குச் சினையாகுபெயர். வேழம் - பேய்க் கரும்புமாம்.

     நிலைநில்லாப் பொருள் பிணித்தலானே நிலைபெறக் கைவந்த இன்பத்தை நீத்துச் சென்றவராதலின், அறவரல்லரெனவும், அங்ஙனம், அறவரல்லாதார்க்குச் செய்ந்நன்றி மறப்பது இயல்பாதலிற் பண்டு நாம் பாலித்த நலனுண்டு துறந்து நம் காதலர் நம்மை உள்ளாருமாயினார் போலு மெனவுங் கொண்டு கூறினாளென்பது. கைகோள் - கற்பு. மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை.) தொலைவிலுள்ள அன்புடையா ரொருவர் நினைத்துழி அன்பு செயப்பட்டார்க்குத் தும்மல் முதலியன தோன்றும் என்பது ஒரு நம்பிக்கை. இதனை,

  
"வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள் 
  
 யார்உள்ளித் தும்மினீர் என்று"     (குறள் - 1317 ) 

எனவருந் திருக்குறளானும் உணர்க.

(241)