திணை : முல்லை.

     துறை : இது, வினைமுற்றி மறுத்தராநின்ற தலைமகன் கார்கண்டு பாகற்குச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, வினைவயிற் சென்று மீளுந் தலைமகன் தலைமகளைக் காணும் அவாவினால் விரைவிலே தேர்செலுத்த வேண்டிப் பாகனை நோக்கிப் "பாகனே! மழைபெய்யத் தொடங்கியதுமன்; இவ்வேலை தன் குட்டியோடு களரின் கண்ணே சென்ற பிணைமானை அதன் கலைமான் தேடா நின்றது உவ்விடத்தே பாராய்; ஆதலின் நின்தேர் விரைந்து செல்வதாக"வென உவந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "பேரிசை யூர்திப் பாகர் பாங்கினும்" (தொல். கற். 5) என்னும் விதிகொள்க.

    
இலையில் பிடவம் ஈர்மலர் அரும்பப் 
    
புதலிவர் தளவம் பூங்கொடி அவிழப் 
    
பான்னெனக் கொன்றை மலர மணியெனப் 
    
பன்மலர்க் காயாங் குறுஞ்சினை கஞலக் 
5
கார்தொடங் கின்றே காலை வல்விரைந்து 
    
செல்க பாகநின் தேரே உவக்காண் 
    
கழிப்பெயர் களரில் போகிய மடமான் 
    
விழிக்கண் பேதையொடு இனனிரிந் தோடக் 
    
காமர் நெஞ்சமொடு அகலாத் 
10
தேடூஉ நின்ற இரலை ஏறே.

     (சொ - ள்.) பாக இலை இல் பிடவம் ஈர் மலர் அரும்ப - பாகனே! பழுத்து உதிர்தலானே இலைகளில்லாத பிடாவெல்லாம் மெல்லிய மலர்கள் நிறையும்படி அரும்பு முகிழ்ப்ப; புதல் இவர் தளவம் பூங்கொடி அவிழ - புதர்மேலேறிப் படர்கின்ற முல்லைக்கொடி பூக்கள் மலராநிற்ப; கொன்றை பொன் என மலர - கொன்றைகள் அனைத்தும் பொன்போல மலர்தலைச் செய்ய; மணி எனப் பல் மலர்க் காயாங் குறுஞ் சினை கஞல - நீலமணி போலப் பலவாய மலர்களையுடைய காயாவின் குறுமையாகிய கிளைகள் விளங்கா நிற்ப; காலை கார் தொடங்கின்று - இன்று காலைப் பொழுதிலேயே மேகம் தான் மழைபெய்யுந் தொழிலைத் தொடங்கியது கண்டாய்; கழிப் பெயர் களரில் போகிய மடமான் விழிக்கண் பேதையொடு இனன் இரிந்து ஓட - கழிந்து பெயர்கின்ற களர்நிலத்திலே சென்ற பிணைமான் மருண்டு விழித்தலையுடைய கண்களையுடைய தன் குட்டியோடு கூட்டத்தினின்று இரிந்தோடுதலும்; காமர் நெஞ்சமொடு அகலாத் தேடூஉ நின்ற இரலை ஏறு உவக்காண் - அதன்பால் உற்ற விருப்பமிக்க நெஞ்சத்தொடு சென்று தேடாநின்ற ஆண்மானை உவ்விடத்தே பாராய்!; நின் தேர் வல் விரைந்து செல்க - ஆதலின் நின்தேர் மிக விரைந்து செல்வதாக! எ - று.

     (வி - ம்.) ஆண்மான் பெண்மானையுங் குட்டியையுந் தேடாநின்றதனைப் பார். எனவே யான் என் காதலியையும் புதல்வனையுங் காண மிகவிருப்ப முடையே னென்பதைப் பிறிதொன்றன் மேல்வைத்து அறிவுறுத்தினா னென்பது. இது குறிப்பெச்ச மெனவும் படும். தான் கார்காலத் தொடக்கத்தில் வருவதாகக் காதலிக்குக் கூறிச் சென்றனனாதலின் அது பழுதுறாவாறு செல்லவேண்டிக் கார் தொடங்கின்றென்றான். விழிக் கண்பேதை என மான்குட்டிக்குக் கூறிய அடைச்சிறப்பால் ஆசிரியர் பெருங் கண்ணனார் விழிக்கட்பேதைப் பெருங் கண்ணனார் எனப்பட்டார் போலும். கைகோள் - கற்பு.

     மெய்ப்பாடு - உவகை. பயன் - பாகன் தேர்கடாவல்.

     (பெரு - ரை.) காலை - காலம் எனக்கொண்டு காலம் கார்ப்பருவத்தைத் தொடங்கிற்று என்றலே சிறப்பு; முல்லைக்குச் சிறுபொழுது மாலை; காலையன்றாதலின். மேகம் என எழுவாய் வருவித்தலும் மிகையென்க. இலையில பிடவம் என்றும் பாடம். காயாஞ்சினை பல்மலர் கஞல என மாறுதல் இனிது. இனன் - இனம். தேடூஉநின்ற - தேடா நின்ற.

(242)