(து - ம்.) என்பது, களவொழுக்கத்துத் தலைமகன் சிலபொழுது வாராமையாலே தலைமகள் கவலையால் வாடியதறிந்த தோழி இதனைத் தமர்க்கு அறிவுறுத்தி வரைவெதிர் கொள்ளுவிப்பலெனக் கருதுதலும் அதனை யறிந்த தலைவி தோழியை நோக்கி என்னுடம்பிலுள்ள அழகைக் கெடுத்த பசலையை நீ கண்டு வைத்தும் நாடனுக்கு உரைத்தலாவது அன்னைக்கு இது தணியும் வகையை யுரைத்தலாவது செய்தாயல்லையே யென்று நொந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு,
| "உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும் |
| செயிர்தீர் காட்சிக் கற்புச்சிறந் தன்றெனத் |
| தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு |
| காமக் கிழவ னுள்வழிப் படினும் |
| தாவி னன்மொழி கிழவி கிளப்பினும் |
| ஆவகை பிறவுந் தோன்றுமன் பொருளே" ( தொல். கள. 11) |
என்னும் விதி கொள்க. இது தலைவி தோழிக்கு அறத்தொடு நின்றது.
| விழுந்த மாரிப் பெருந்தண் சாரல் | கூதிர்க் கூதளத்து அலரி நாறும் | | மாதர் வண்டின் நயவருந் தீங்குரல் | | மணநாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும் | 5 | உயர்மலை நாடற்கு உரைத்தல்ஒன்றோ | | துயர்மருங்கு அறியா அன்னைக் கிந்நோய் | | தணியுமா றிதுவென உரைத்தல் ஒன்றோ | | செய்யாய் ஆதலிற் கொடியை தோழி | | மணிகெழு நெடுவரை அணிபெற நிவந்த | 10 | செயலை அந்தளிர் அன்னஎன் | | மதனின் மாமெய்ப் பசலையுங் கண்டே. | |
(சொ - ள்.) தோழி மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த செயலையந் தளிர் அன்ன - தோழீ! நீலமணி போன்ற நீண்ட மலையில் அழகு பொருந்த உயர்ந்த அசோகந் தளிர் போன்ற; என் மதனின் மா மெய்ப் பசலையும் கண்டு - எனது நல்ல மேனியின் அழகுகெடும்படி செய்த பசலையை நீ கண்டு வைத்தும்; மாரி விழுந்த பெருந் தண் சாரல் கூதிர்க் கூதளத்து அலரி நாறும் மாதர் வண்டின்்- மழைபெய்த பெரிய தண்ணிய சாரலின் கண்ணே கூதிர்காலத்துக் கூதாளிமலரின் மணம் வீசுகின்ற அழகிய வண்டின்; நயவரும் தீம் குரல் மணம் நாறும் சிலம்பின் அசுணம் ஓர்க்கும் - விருப்பமுறும் இனிய ஓசையை யாழோசை போலுமென்று மலைமுழையிலிருக்கின்ற அசுணமானாகிய விலங்கு செவி கொடுத்துக் கேளாநிற்கும்; உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்று - உயர்ந்த மலைநாடனுக்குச் சொல்லுதல் ஒன்றாவது; துயர் மருங்கு அறியா அன்னைக்கு இந் நோய் தணியும் ஆறு இது என உரைத்தல் ஒன்று - எனது துன்பத்தின் மிகுதியை அறியாத அன்னைக்கு இந்நோய் தணியும் வழி இதுதான் என உரைத்தல் ஒன்றாவது; செய்யாய் ஆதலின் கொடியை - செய்தாயல்லை இங்ஙனம் இரண்டில் ஒன்றேனுஞ் செய்து என்னைப் பாதுகாவாமையாலே நீ கொடுமை மிக்குடையையாவாய்!; எ - று.
(வி - ம்.) கூதளம் - தாளிக்கொடி; அதன் பேதமுமாம். மாதர் - அழகு. கூதள மணநாறும் வண்டு - தேனையுண்ணுமாறு தாளிப்பூவில் விழுதலால் அம் மலர் மணம்வீசும் வண்டு.
அன்னை வெறியெடுத்தல் முதலாயின கூறி அதன்முன் அவனை விரைந்து மணஞ் செய்து கொள்ளும்படி வற்புறுத்தாமைபற்றி நாடற்குரைத்தலாய வொன்றேனுஞ் செய்திலையென்றாள். அன்னை வெறியெடாதபடி நாடனது மார்பினால் வந்த இந்நோய் அவன் மார்பை முயங்குவதாலே தணியும் என அவட்கு அறிவுறுத்தாமையின் அன்னைக்கு இந் நோய் தணியுமாறு உரைத்தலொன்றுஞ் செய்திலையென்றாள்.
உள்ளுறை :- கூதாளி மலரில் வீழ்ந்துண்ணுதலாலே அதன் மணம் நாறுகின்ற வண்டுபாடும் ஓசையை யாழோசை போலுமென்று அசுணமான் ஆராயுமென்றது, என்னைத் தலைவன் முயங்கி விடுத்தலானாகிய வேறுபாட்டைக் கண்டு இது முருகணங்கு போலுமென அன்னை ஆராய நிற்குமே என்றதாம். மெய்ப்பாடு - வருத்தம்பற்றிய வெகுளி. பயன் - தோழியைத் தன்முகமாக்குதல்.
(பெரு - ரை.) பயன் - அறத்தொடு நிற்றல் என்க. மாதர் வண்டின் தீங்குரல் அசுணம் ஓர்க்கும் என்றது, நமது மறையை நீ அன்னைக்கு (செவிலிக்கு)க் குறிப்பாக உணர்த்துவாயாயின் அவள் மகிழ்ந்து அதற்கு ஆவன செய்யச் சமைவாள் என்னும் உள்ளுறை பொருளது என்றலே துறைக்குப் பொருந்தும் கருத்தென்க. "வீழ்ந்த மாரி" என்றும், "செயலை மருதளிர்" என்றும், "மாமைப் பசலை" என்றும் பாடவேற்றுமைகள் உண்டு.
(244)