(து - ம்.) என்பது, பாங்கியிற் கூட்டத்துத் தலைமகன் கூறிய குறையை முடிப்பதாக உடன்பட்ட தோழி, மீண்டுவந்து தலைவியின் குறிப்பைத் தன்வயம் ஆக்குவாளாய் உரையாடுகின்றவள், சேர்ப்பனொருவன் நம்மை நோக்கி, என்னுயிரைக் கைக்கொண்ட நீ யாவளோ என்று அவனால் நாம் வருந்துவது அறியாமல் நம்மால் அவன் வருந்தினதாகக் கூறித் தொழுது நின்றது, நகையாயிற்றுக் காணென நகையாடிக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "மறைந்தவ ளருகத் தன்னொடும் அவளொடும், முதன்மூன்று அளைஇப் பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும்" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.
| நகையா கின்றே தோழி தகைய |
| அணிமலர் முண்டகத்து ஆய்பூங் கோதை |
| மணிமருள் ஐம்பால் வண்டுபடத் தைஇத் |
| துணிநீர்ப் பௌவந் துணையொடு ஆடி |
5 | ஒழுகுநுண் நுசுப்பின் அகன்ற அல்குல் |
| தெளிதீங் கிளவி யாரை யோவென |
் | அரிதுபுணர் இன்னுயிர் வௌவிய நீயெனப் |
| பூண்மலி நெடுந்தேர்ப் புரவி தாங்கித் |
| தான்நம் அணங்குதல் அறியான் நம்மின் |
10 | தான்அணங் குற்றமை கூறிக் கானல் |
| சுரும்பிமிர் சுடர்நுதல் நோக்கிப் |
| பெருங்கடற் சேர்ப்பன் தொழுதுநின் றதுவே. |
(சொ - ள்.) தோழி தகைய அணிமலர் முண்டகத்து ஆய் பூங் கோதை - தோழீ! தகுதியையுடைய அழகிய மலர் மிக்க கழிமுள்ளியின் நுண்ணிய பூமாலையை; மணி மருள் ஐம்பால் வண்டுபடத் தைஇ - நீலமணிபோன்ற கூந்தலில் வண்டுகள் பொருந்தும்படி சூடி; துணி நீர்ப் பௌவம் துணையொடு ஆடி - தெளிந்த நீரையுடைய கடலிலே தோழியரோடு சென்று நீராடி; ஒழுகு நுண் நுசுப்பின் அகன்ற அல்குல் தெளி தீம் கிளவி - நேர்மையுடைய நுணுகிய இடையையும் அகன்ற அல்குலையும் தெளிந்த இனிய சொல்லையுமுடையாய்; என் அரிது புணர்இன் உயிர் வௌவிய நீ யாரை என - எனது அரிதாயமைந் திருக்கின்ற இனிய உயிரைக் கைக்கொண்ட நீதான் யாவளோ? உரையாய்! என்று; பூண் மலி நெடுந்தேர்ப் புரவி தாங்கித்தான் நம் அணங்குதல் அறியான் - பூண் நிரம்பிய நெடிய தேரிலே பூட்டிய குதிரையொடு வந்து அவன்தான் நம்மை வருத்துதல் அறியானாய்; நம்மில் தான் அணங்குற்றமை கூறி - நம்மால் அவன் வருந்தியது மட்டும் கூறி; கானல் சுரும்பு இமிர் சுடர் நுதல் நோக்கி - கழிச் சோலையின்கண்ணே நாம் நின்றபொழுது நறுமணத்தால் வண்டுகள் வந்து சூழ்ந்தொலிக்கின்ற ஒளியையுடைய நமது நெற்றியை நோக்கி; பெருங்கடல் சேர்ப்பன் தொழுதுநின்றது நகை ஆகின்று - பெரிய கடற் சேர்ப்பன் கை கூப்பி வணங்கி நின்றதைத் கருதுந்தோறும் நகையுடையதாயிராநின்றது காண்! எ - று.
(வி - ம்.) முண்டகம்-கழிமுள்ளி. துணிநீர்-தெளிந்தநீர். ஒழுகல்-நேர்மை.
அவன் செல்வக் குறைபாடின்மை கூறுவாள், தேர்ப்புரவி தாங்கி என்றாள். அவனாலே தலைவி மயங்கி நின்றமை அறிவுறுத்துவாள், தான் நம்மணங்குதலென்றாள். மெய்ப்பாடு - பிறன்கட்டோன்றிய பேதைமை பொருளாகப் பிறந்த நகை. பயன் - தலைவியின் கருத்தறிதல்.
(பெரு - ரை.) "தகைய.................உயிர் வௌவிய நீ" இவை தலைவன் கூற்று: இவற்றைத் தோழி தலைவிக்குக் கொண்டு கூறுகின்றாள். புரவி தாங்கி என்றது, குதிரையை இழுத்து நிறுத்திக்கொண்டு என்றவாறு.
(245)