திணை : பாலை.

     துறை ; இது, பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறீஇயது.

     (து - ம்.) என்பது, தலைமகன் பிரிதலால் மேனி வேறுபட்டு மெலிந்த தலைமகளை நோக்கி இனிய சகுனங்காணா நின்றது, பல்லியும் அடிக்கின்றது, குயில் பயிற்றும், ஆதலிற் காதலர் இன்னே வருகுவர்; வானம் இரங்காநின்றதனால் அவர் வருவேமென்ற பருவ மிதுவே போலுமெனத் தோழி வலியுறுத்திக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "பிறவும் வகைபட வந்த கிளவி" (தொல். கற். 9) என்பதனால் அமைத்துக்கொள்க.

    
இடூஉ ஊங்கண் இனிய படூஉம் 
    
நெடுஞ்சுவர்ப் பல்லியும் பாங்கின் தேற்றும் 
    
மனைமர நொச்சி மீமிசை மாச்சினை 
    
வினைமாண் இருங்குயில் பயிற்றலும் பயிற்றும் 
5
உரம்புரி உள்ளமொடு சுரம்பல நீந்திச் 
    
செய்பொருட்கு அகன்றன ராயினும் பொய்யலர் 
    
வருவர் வாழி தோழி புறவின் 
    
பொன்வீக் கொன்றையொடு பிடவுத்தளை அவிழ 
    
இன்னிசை வானம் இரங்குமவர் 
10
வருதும் என்ற பருவமோ இதுவே. 

     (சொ - ள்.) தோழி வாழி இடூஉ ஊங்கண் இனிய படூஉம் - தோழீ! வாழி! நாம் கருதியதன் இடையிட்டு உவ்விடத்தே இனிய நிமித்தம் உண்டாகாநின்றன; நெடுஞ் சுவர்ப் பல்லியும் பாங்கின் தேற்றும் - நெடிய சுவரின்கணுள்ள பல்லியும் நம்பக்கத்திருந்து நம்மைத் தெளிவியாநின்றது; மனை மர நொச்சி மீமிசை மாச்சினை வினைமாண் இருங்குயில் பயிற்றலும் பயிற்றும் - மனையகத்துள்ள பெரிய நொச்சிவேலியிலுயர்ந்த மாமரத்தின் கிளையிலிருந்து இனிமை பயப்பக் கூவுந்தொழிலிலே கை போதலான் மாட்சிமைப்பட்ட கரிய குயில் கூவுதலையுஞ் செய்யாநிற்கும்; உரம்புரி உள்ளமொடு சுரம்பல நீந்திச் செய்பொருட்கு அகன்றனராயினும் - நந்தலைவர் வலிமைமிக்க உள்ளத்துடனே பலவாய சுரத்தைக் கடந்து ஈட்டப்படும் பொருட்காக அகன்றனராயினும்; பொய்யலர் வருவர் - தாம் குறித்த பருவத்திலே பொய்யாராய் வருவர்காண்!; புறவின் பொன் வீக் கொன்றையொடு பிடவுத்தளை அவிழ - கானத்துப் பொன் போலும் மலரையுடைய கொன்றையுடனே பிடாவும் மலராநிற்ப; இன் இசை வானம் இரங்கும் - இனிய குரலையுடைய மேகம் முழங்காநிற்குமாதலால்; அவர் வருதும் என்ற பருவமோ இதுவே - அவர் வருவே மென்ற பருவம் இதுதான் போலும்; எ - று.

     (இ - ம்.) ஊங்கண் - உவ்விடம். இனிய படுதல் - இன்னே வருகுவரென்னும் வாய்ச்சொல்லுண்டாதன் முதலிய நன்னிமித்தம் படுதல்.

     "எருவுஞ் செருவும்" (தொல். எழு. 260) என்ற சூத்திரத்துத் "தம்மொற்று மிகூஉம்" என உடம்பொடு புணர்த்துக் கூறலின் ஈண்டு "இடூ படூ" என உகரம் நீண்டு "குற்றெழுத் திம்பரும்" (தொல். எழு. 267) என்ற சூத்திரத்து "நிற்றல் வேண்டும் உகரக் கிளவி". என்றபடி உகரம் பெற்று இடூஉ படூஉம் என்றாயினமை அறிக. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.

     (பெரு - ரை.) இது நிமித்தமும் பருவமும்காட்டி அவர் இன்னே வருகுவர் வருந்தற்க! எனத் தோழி ஆற்றுவித்தது. மீமிசைக் கரிய கிளையின்கண் என்றுமாம்.

(246)