நல்வெள்ளையார்
     திணை : மருதம்.

     துறை : இது, புதல்வனொடுபுக்க தலைமகன் ஆற்றானாய்ப் பாணற் குரைத்தது.

     (து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகன் வாயில் பெறானாய்த் தன் புதல்வனொடு சென்றால் மனைவி சினங்கொள்ளாளென்னுங் கருத்தால் அங்ஙனமே கொண்டுபுகுதலும் அதனையறிந்து தலைவி ஊடல்நீடுதலை உடன்வந்த பாணனை நெருங்கி யானும் புதல்வனுமாக அடைந்த வழியும் அவள் வெகுண்டு "நீ யாவனடா" என்றிகந்து நின்றது நகையாகின்றது ஆதலின், யாம் நகுவோம் வாராயென அவள் ஊடல் தணியும்படி கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, “அழியல் அஞ்சல் என்று ஆயிரு பொருளினும், தானவட் பிழைத்த பருவத் தானும்” (தொல். கற். 5) என்னும் விதி கொள்க.

    
நகுகம் வாராய் பாண பகுவாய் 
    
அரிபெய் கிண்கிணி யார்ப்பத் தெருவில் 
    
தேர்நடை பயிற்றுந் தேமொழிப் புதல்வன் 
    
பூநா செவ்வாய் சிதைத்த சாந்தமொடு 
5
காமர் நெஞ்சந் துரப்ப யாந்தன் 
    
முயங்கல் விருப்போடு குறுகினே மாகப் 
    
பிறைவனப்பு உற்ற மாசறு திருநுதல் 
    
நாறிருங் கதுப்பின்எம் காதலி வேறுணர்ந்து 
    
வெரூஉமான் பிணையின் ஒரீஇ 
10
யாரை யோவென்று இகந்துநின் றதுவே. 

     (சொ - ள்.) பாண வாராய் - பாணணே! எமது அருகில் வருவாயாக !; பகுவாய் அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப - பகுத்த வாய் வழியாலே உள்ளே பரலிடப்பட்ட கிண்கிணி யொலிப்ப; தெருவில் தேர் நடை பயிற்றும் தேம் மொழிப் புதல்வன் - தெருவிலே முக்காற் சிறுதேரைப் பற்றிக் கொண்டு நடைபயிலுகின்ற இனிய மொழியையுடைய புதல்வனை; பூ நாறு செவ்வாய் சிதைத்த சாந்தமொடு காமர் நெஞ்சந் துரப்ப யாம் தன் முயங்கல் விருப்போடு குறுகினேமாக - எம் மார்போடு அணைத்தலும் அவனது செவ்வாம்பல் மலர் போலத் தோன்றுஞ் சிவந்த வாய் நீர் ஒழுகுதலாலே சிதைந்த சந்தனப் பூச்சோடு விருப்பம் வரும் எம்முள்ளம் எம்மைச் செலுத்த யாம் எம் காதலியை முயங்க வேண்டிய விருப்பத்துடனே அருகில் சென்றேமாக; பிறைவனப்பு உற்ற மாசு அறு திருநுதல் நாறு இருங் கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து - அங்ஙனஞ் சென்றவுடன் பிறைத்திங்களைப் போன்ற அழகு பொருந்திய மாசற்ற சிறப்புடைய நெற்றியையும் மணங்கமழும் கரிய கூந்தலையும் உடைய அவள் தன் உள்ளத்து வேறாகக் கருதி; மான் பிணையின் வெரூஉ ஒரீஇ - பிணைமான் போல வெருண்டு எம்மை நீங்கி அயலே சென்று நின்று; யாரையோ என்று இகந்து நின்றதுவே நகுகம் - "நீ என்னருகில் வருதற்கு யாவனாந்தன்மையையுடையை" என்று இகந்து நின்றதை நினைக்குந்தோறும் நகை தோன்றுதலானே நாம் இருவேமும் நகா நிற்பம்! எ - று.

     (வி - ம்.) தான் காதலிபால் உழுவலன்புடையனென அவள் கருதுமாறு நெஞ்சந்துரப்ப என்றான். அவளை நன்கு மதித்தமைதோன்ற நுதலையுங் கூந்தலையுஞ் சிறப்பித்தான். அணைந்தவழி நுதலையுங் கூந்தலையுந் தைவரல் இயல்பாதலிற் கூறினானுமாம். மெய்ப்பாடு - பிறர் எள்ளல் பொருளாகப் பிறந்த நகை. பயன் - ஊடல்தணிவித்தல்.

     (பெரு - ரை.) வேறு உணர்ந்து என்றது, சாந்தம் சிதைந்ததற்குக் காரணம் பரத்தையரை முயங்கியதென்று கருதி என்றவாறு. இனி அச் சிதைவிற்குக் காரணங் கூறி அவள் ஊடல் தீர்த்தற்குப் புதல்வன் செவ்வாய் சிதைத்த சாந்தமொடு என்று மாயஞ்செப்பினான். அவள் சினமகலுதற்பொருட்டுப் பிறைவனப்புற்ற மாசறு திருநுதல் நாறிருங் கதுப்பின் எங்காதலி என அருமையாக நலம் பாராட்டினமையும் உணர்க.

(250)