(து - ம்.) என்பது, களவொழுக்கத்துத் தலைமகன் ஒருசிறைப் புறத்தானாக வந்திருப்பதையறிந்த தோழி, தலைவியை இற்செறிப்பறிவுறுத்துவாள் தினையை நோக்கித் தினையே! யாம் நாடனை விரும்பியது காரணமாகவே நின்னைப் பாதுகாத்தலையும் நீ காண்பாய்; இப்பொழுது எம்மை இற்செறித்து அன்னை வெறியெடுத்ததனிமித்தம் நின்னைக் காப்பாரில்லாமையாலே, பறவைகள் நின் கதிரைக் கொண்டுபோய் விடுமாதலின் நீ இப்பொழுது விளையாமல் பிற்காலத்து விளைவாயாகவென நயந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும்.................அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியின்கண் அமைத்துக்கொள்க.
| நெடுநீர் அருவிய கடும்பாட்டு ஆங்கண் |
| பிணிமுதல் அரைய பெருங்கல் வாழைக் |
| கொழுமுதல் ஆய்கனி மந்தி கவரும் |
| நன்மலை நாடனை நயவாய் யாமவன் |
5 | அளிபேர் அன்பின் நின்குரல் ஓப்பி |
| நின்புறங் காத்தலும் காண்போய் நீயென |
் | தளிரேர் மேனித் தொல்கவின் அழியப் |
| பலிபெறு கடவுட் பேணிக் கலிசிறந்து |
| தொடங்குநிலைப் பறவை உடங்குகுரல் கவருந் |
10 | தோடிடங் கோடாய் கிளர்ந்து |
| நீடினை விளைமோ வாழிய தினையே. |
(சொ - ள்.) தினையே நெடுநீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண் - தினையே! நெடிதாம் நீர்மையுடைய அருவியினது ஒலிமிக்க அவ்விடத்திலே; பிணிமுதல் அரைய பெருங்கல் வாழைக் கொழுமுதல் ஆய்கனி - பிணிப்புண்ட அடியையுடைய பெரிய மலையிடத்துண்டாகிய வாழையின் கொழுத்த அழகிய கனியை; மந்தி கவரும் நல் மலை நாடனை நயவாய் - மந்திகள் கவர்ந்து உண்ணாநிற்கும் நல்ல மலைநாடனை விரும்பி; யாம் அவன் அளி பேர் அன்பின் நின்குரல் ஓப்பி நின் புறங் காத்தலும் நீ காண்போய் - யாம் அவனது கருணைமிக்க அன்பினால் நின்னுடைய கதிர்களைக் கிளிகள் கொய்யாதபடி ஓப்பி நின்னைப் பாதுகாத்திருப்பதையும் நீ கண்டிருக்கின்றாயன்றே? ; என் தளிர் ஏர் மேனித் தொல் கவின் அழிய - தளிர் போன்ற என்னுடம்பில் உள்ள பழைய அழகு கெடும்படி; பலிபெறு கடவுள் பேணி - அன்னையானவள், யான் வெளிப்படாதவாறு இல்வயிற் செறித்து ஆடு முதலிய பலியைப் பெற இருக்கின்ற முருகவேளை வழிபட்டு; கலிசிறந்து தொடங்கு நிலை - மாதர்குழாத்தொடு கூடி ஒலிமிக்கு வெறியெடுக்குங்காலை; பறவை உடங்கு குரல் கவரும் தோடு இடம் கோடாய் கிளர்ந்து நீடினை விளை வாழிய - யான் நின்னைக் காப்பதில்லாது கைவிட்டு விடுதலானே கிள்ளை முதலாய பறவைகள் ஒருசேர வந்து உன்னுடைய கதிர்களைக் கொய்துகொண்டு போகாநிற்கும், ஆதலின் இப்பொழுது நின்கதிர்த்தோட்டினிடம் தலைசாயாது நிமிர்ந்து நின்று நெடுநாட் கழித்துக் கதிரீன்று விளைவாயாக! நீ நெடுங்காலம் வாழ்வாயாக! எ -று.
(வி - ம்.) நாடனொடு களவுப்புணர்ச்சி நீட்டிக்கச் செய்தலாலும், பகற்குறிக்கிடங் கொடுத்தலாலும் வாழியவென்றாள். வெறியெடுத்த காலை அறத்தொடு நிற்றலின் பின்வரையுநாள் தினை கொய்யுங்காலமும் வேங்கை மலருங்காலத்தொடுபட்டு வருதலால், அப்பருவங்கடந்து பின்னர்க் கொய்யும்படி காலம் நீட்டித்து விளைவாயாக வென்றாள்.
உள்ளுறை :- அருவியொலிக்கின்றவிடத்துத் தோன்றிய வாழையின் கனியை மந்தி கவருமென்றது, வெறியெடுத்து முழங்குமிடத்தும் தலைவன் அஞ்சாதுவந்து இவளது நலம் பருகுவானாவனென்றதாம். இனித் தமரெல்லாங்கூடி மகிழ்கின்றவிடத்து வரைவொடுபுகுந்து தலைவன் தலைவியை மகிழ்ந்து துய்ப்பானாவனெனவும். மெய்ப்பாடு - பெருமிதம். பயன்-வரைவுகடாதல்.
(பெரு - ரை.) தொடக்கத்தே தோழி தலைவியையும் உளப்படுத்தி யாம்.................ஒப்பி எனப் பன்மையாற் கூறியவள் பின்னர்த் தலைவியெனத் தானென வேற்றுமை கருதாளாய்த் தானே தலைவியாய் என் தளிரேர் மேனி என ஒருமையாற் கூறிய நுணுக்கமுணர்க. இது ஒருமை பன்மை மயக்கமன்றென்க. "நுடங்குநிலைப் பறவை உடங்கு பின்கவரும்" என்றும் பாடம். அன்பின் இன்குரல் எனக் கண்ணழித்து எமது இனிய குரலாலே கிளிகளை ஓப்பி எனவுமாம்.
(251)