(து - ம்.) என்பது, தலைமகன் குறையுற்றும் அக்குறை நீக்கப் பெறானாய்ச் செல்கின்றானை ஆற்றுவிக்கக் கருதிய தோழி புதியனவாகிய சில மொழிகளை அமைத்துக் கொண்டு 'பரப்பனே! நீ எஞ்சிறு குடியின் கண் இன்றிரவு தங்கிச் செல்லுவையாயின் நின்பரிகள் உணவுண்ண நீயும் தனியாகத் தங்குவை அல்லை'யெனப் புனைந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "நன்னயம் பெற்றுழி நயம்புரி யிடத்தும்" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.
| வண்டல் தைஇயும் வருதிரை உதைத்தும் |
| குன்றோங்கு வெண்மணல் கொடியடும்பு கொய்தும் |
| துனியில் நன்மொழி இனிய கூறியும் |
| சொல்லெதிர் பெறாஅய் ஆகி் மெல்லச் |
5 | செலீஇய செல்லும் ஒலியிரும் பரப்ப |
| உமணர் தந்த உப்புநொடை நெல்லின் |
| அயினி மாஇன்று அருந்த நீவீக் |
| கணம்நாறு பெருந்தொடை புரளும் மார்பின் |
| துணையிலை தமியை சேக்குவை அல்லை |
10 | நேர்கண் சிறுதடி நீரின் மாற்றி |
| வானம் வேண்டா உழவினெம் |
| கானலஞ் சிறுகுடிச் சேர்ந்தனை செலினே. |
(சொ - ள்.) வண்டல் தைஇயும் வருதிரை உதைத்தும் - பகற்பொழுதெல்லாம் எம்முடன் வண்டல்மண்ணை வீடுபோலச் சமைத்துக் கோலஞ் செய்தும் கரைமேல் ஏறுகின்ற அலையை எற்றியும்; குன்று ஓங்கு வெள் மணல் கொடி அடும்பு கொய்தும் - மலைபோல் உயர்ந்த வெளிய மணல் மேட்டிலே படர்ந்த கொடி யடும்பின் பூவைப் பறித்தும்; துனி இல் நல் மொழி இனிய கூறியும் - வருத்தந் தீர்ந்த நல்ல வார்த்தை இனியவற்றைக் கூறியும்; சொல் எதிர் பெறாஅய் ஆகி - அங்ஙனம் நீ கூறியவற்றிற்கு விடையும் பெறாயாகி; மெல்லச் செலீஇய செல்லும் ஒலி இரும்பரப்ப - மெல்ல நின்னூர்க்குப் போகும் பொருட்டுச் செல்லாநின்ற ஒலிக்கின்ற பெரிய கடற் பரப்பினையுடைய தலைவனே!; நேர் கண் சிறுதடி நீரின் மாற்றி வானம் வேண்டா உழவினெம் கானலஞ் சிறுகுடிச் சேர்ந்தனை செலின் - நேர்மையான இடத்தையுடைய உப்புப் பாத்தியிலே கடலின் நீரைக் கொணர்ந்து பாய்ச்சி விளைவித்துக் கொள்வதன்றி மழையை விரும்பாத வேளாண்மையுடைய கடற்கரைச் சோலை சூழ்ந்த எமது சிறுகுடியின்கண்ணே வந்து சேர்ந்து இராப்பொழுதில் அங்கே தங்கியிருந்து செல்வாயாயின்; உமணர் தந்த உப்புநொடை நெல்லின் அயினி மா இன்று அருந்த - உப்பு வாணிகராலே கொண்டுவரப்பட்ட உப்பு விலையினால் பெற்ற நெல்லைக் குற்றி ஆக்கிய அரிசிக்காணத்தை நின் குதிரை இன்று உண்ணாநிற்ப; நீ வீக்கணம் நாறு பெருந்தொடை புரளும் மார்பில் துணை இலை தமியை சேக்குவை அல்லை - நீயும் மலரின் கூட்டம் நன் மணங்கமழும் பெரிய பூமாலை புரளுகின்ற மார்பில் அணைக்குந் துணையின்றித் தமியே தங்குவாயல்லை; அத்தகைய துணையாகிய தலைவியை அணைத்து உறங்கப் பெறுவாய்; எ - று.
(வி - ம்.) சிறுதடி - உப்புப்பாத்தி. "காயற் சிறுதடி கண்கெடப் பாய்தலின்" என்றார் (366) அகத்தினும். இனியகூறல் - இம் முத்து நல்லன, இக் கண்ணி நல்லன, இத் தழை நல்லன, இவை கொள்ளற்பாலன என்பனவற்றைக் கூறுதல் அடும்பு கொய்தல் - அதன் மலரைக் கொய்து பாவைக்குச் சூட்டக் கொடுத்தல். துனியில் நன்மொழி - சினவாது இரங்குமாறு கூறும் நல்ல மொழி. நின் இரப்புக்கியைந்துழிக் களவு நீட்டிப்பின் ஏதம் பயக்குமாகலானும், வரைந்தன்றிப் பலரறிய மனைவயிற்றங்க இயலாதாகலானும் வரைந்தெய்துக வென்பாள் இங்ஙனம் கூறினாள். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவனை ஆற்றுவித்தல்.
(பெரு - ரை.) 'சொல் எதிர் பெறாஅய் உயங்கி' என்றும், 'நீலக்கணம் நாறு பெருந்தொடை' என்றும் பாடவேற்றுமை யுண்டு.
(254)