திணை : பாலை.

    துறை : இது, பொருள்வயிற் பிரிந்தானென்று ஆற்றாளாகிய தலைமகளைத் தலைமகன் ஆற்றியது.

     (து - ம்.) என்பது, தலைமகன் பொருள்வயிற் பிரியக் கருதியதறிந்து வருந்துகின்ற தலைவியை 'நீ மெல்லிய அடியுடையை, காடுகள் கொடியவாதலின் நின்னுடன் செல்லுஞ் செலவு இப்பொழுது தவிர்ந்தனம், கார்காலத்து நின்னைப் பிரியவே இயலாதாகலின், அப்பொழுதுந் தவிர்ந்தன'மென அவளாற்றும் வண்ணந் தலைமகன் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "மரபுநிலை திரியா மாட்சிய வாகி விரவும் பொருளும் விரவும்" (தொல். அகத். 45) என்பதனான் அமைத்துக் கொள்க.

    
நீயே பாடல் சான்ற பழிதபு சீறடிப் 
    
பல்குறப் பெருநலத்து அமர்த்த கண்ணை 
    
காடே, நிழல்கவின் இழந்த அழல்கவர் மரத்த 
    
புலம்புவீற் றிருந்து நலஞ்சிதைந் தனவே 
5
இந்நிலை தவிர்ந்தனம் செலவே வைந்நுதிக் 
    
களவுடன் கமழப் பிடவுத்தளை அவிழக் 
    
கார்செயல் செய்த காமர் காலை 
    
மடப்பிணை தழீஇய மாஎருத்து இரலை 
    
காழ்கொள் வேலத் தாழ்சினை பயந்த 
10
கண்கவர் வரிநிழல் வதியுந் 
    
தண்படு கானமுந் தவிர்ந்தனஞ் செலவே. 

    (சொ - ள்.) நீயே பாடல் சான்ற பழி தபு சீறடிப் பல்குறப் பெருநலத்து அமர்த்த கண்ணை - நீதான் புலவராலே பாடுதற்கமைந்த குற்றமற்ற அழகிய சிறிய அடிகளுடனே பல்கிய பெரிய அழகு அமைந்த அமர்த்த கண்ணையுடையையாயிரா நின்றனை; காடு அழல் கவர் மரத்த நிழல் கவின் இழந்த - காடுகளோ தீப்பற்றிய மரங்களையுடையனவாதலின் நிழலும் அழகும் நீங்கி ஒழிந்தன; புலம்பு வீற்றிருந்து நலம் சிதைந்தன - அவ் வண்ணம் ஒழிதலும் தனிமை நிலைபெற்றிருத்தலினால் நன்மைகளெல்லாம் ஒருங்கே சிதைவுற்றன; இந் நிலை செலவு தவிர்ந்தனம் - இத் தன்மையாகிய நிலைமையினால் நின்னை உடன்கொண்டு சேறல் இயையாமையின் நின்னுடன் செல்லுதலைத் தவிர்ந்தனம்; வை நுதிக் கள உடன்கமழப் பிடவுத் தளை அவிழக் கார் செயல் செய்த காமர் காலை - அன்றிக் கூரிய நுனியையுடைய களாவின்மலர் ஒருங்கே மலர்ந்து மணங்கமழாநிற்பப் பிடாமலர் முறுக்குவாய் நெகிழ்ந்து மலர மேகந் தான் செய்ய வேண்டிய மழை பெய்தலைச் செய்யத் தொடங்கிய அழகிய கார்ப்பருவத்தில்; மடப்பிணை தழீஇய மா எருத்து இரலை - இளையபிணைமானைப் புணர்ந்த கரிய பிடரினை யுடைய கலைமான்; காழ்கொள் வேலத் தாழ் சினை பயந்த கண்கவர் வரிநிழல் வதியும் - உள்ளே வயிர முற்றிய வேல மரத்தின் தாழ்ந்த கிளையினாற் பல்கிய காண்போர் கண்ணைக் கவர்ந்து கொள்ளும் வரி பொருந்திய நிழலிலே தங்கியிருக்கும்; தண்படு கானமும் செலவு தவிர்ந்தனம் - குளிர்ச்சியுற்ற காட்டின் கண்ணே செல்லுவதனையும் தவிர்ந்தனம், ஆக இருவகைக் காலத்தும் நின்னைப் பிரியாதிருக்க நீ வருந்துவதென்னை? வருந்தாதே கொள்! எ - று.

    (வி - ம்.) வெப்பத்தில் அடிவைத்தல் இயையாதென்னுங் கருத்தால் அடியையும், நோக்கவு மியையா தென்னுங் கருத்தால் கண்ணையுங் கூறினான். கார் காலத்தே கலைமான் பிணையைத் தழுவி உறையுமாதலின் அவற்றை நோக்குவார் தாமும் பிரிந்திருப்ப மனம் பொருந்தார் எனக்கொண்டு அக் காலத்துந் தவிர்ந்தனம் என்றான். இனிக் காதலியைக் காதலன் அணைந்திருந்தாலன்றிக் கார்முதல் நான்கு பருவங்களையுங் கடத்தலரிதாதலின் அங்ஙனம் கூறினானெனிமுமாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.

    (பெரு - ரை.) வேனிற் காலத்தே என்னுடன் வருதல் நினக்கியலாதாகலின் நின்துயர் கருதிச் செலவு தவிர்ந்தேன். கார்ப்பருவத்தே நின்னைப் பிரிந்துறைதல் எற்கியலா தாகலின் என்னலமே கருதிச் செலவு தவிர்ந்தனங்காண் என்று ஆற்றுவித்தபடியாம். கார்ப்பருவத்தே நின்னைப் பிரிந்துறைதல் எற்கியலா தென்பதனை உள்ளுறுத்தி இரலை பிணை தழீஇ கண்கவர் வரிநிழல் வதியும் தண்படுகானம் என்றான் என்க. "அல்கு பெருநலத்து" என்றும், "கார்பெயல் செய்த காலை" என்றும், பாட வேற்றுமையுண்டு. வேலத்துத் தாழ்சினை எனற்பாலது வேலத் தாழ்சினை என விகாரமுற்றது. அல்லது சாரியை பெறாது புணர்ந்து எனக் கோடலுமாம். வேலத்து ஆழ்சினையுமாம்.

  
"செலவிடை அழுங்கல் செல்லாமை யன்றே 
  
 வன்புறை குறித்தல் தவிர்ச்சி யாகும்"                             (தொல். கற். 46)  

என்பதுபற்றி இது பாலையாயிற்று.

(256)