திணை : குறிஞ்சி.

    துறை : இது, தோழி தலைமகனது ஏதஞ்சொல்லி வரைவு கடாயது.

    (து - ம்.) என்பது, இரவுக்குறிவருந் தலைமகனைத் தோழி நெருங்கி. 'நாடனே! எம்மை அருளாயாகிச் சிறுநெறியிலே சிங்க முதலாயின இயங்குதலறிந்து வைத்தும் நடுயாமத்தில் வாராநின்றனை; இதற்கு யான் வருந்துகின்றேன்' என இரவுக்குறி மறுத்து வரைவுடன்படுமாறு கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . அனிநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்பதனால் அமைத்துக்கொள்க.

    
விளிவில் அரவமொடு தளிசிறந்து உறைஇ 
    
மழையெழுந்து இறுத்த நளிர்தூங்கு சிலம்பின் 
    
கழைஅமல்பு நீடிய வானுயர் நெடுங்கோட்டு 
    
இலங்குவெள் அருவி வியன்மலைக் கவாஅன் 
5
அரும்புவாய் அவிழ்ந்த கருங்கால் வேங்கைப் 
    
பொன்மருள் நறுவீ கன்மிசைத் தாஅம் 
    
நன்மலை நாட நயந்தனை அருளாய் 
    
இயங்குநர் மடிந்த வயந்திகழ் சிறுநெறிக் 
    
கடுமா வழங்குதல் அறிந்து 
10
நடுநாள் வருதி நோகோ யானே. 

    (சொ - ள்.) அரும்பு வாய் அவிழ்ந்த கருங் கால் வேங்கைப் பொன் மருள் நறு வீ கல்மிசைத் தாஅம் நல் மலை நாட - அரும்புகள் முக மலர்ந்த கரிய காம்பையுடைய வேங்கை மரத்தின் பொன் போன்ற நறிய மலர் பாறைமேலுதிர்ந்து பரவாநிற்கும் நல்ல மலைநாடனே!; நயந்தனை அருளாய் - எம்பால் விரும்பி அருள் செய்யாயாகி; விளிவு இல் அரவமொடு தளிசிறந்து உறைஇ மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பில் - ஓயாத முழக்கமொடு மழை மிகுத்து இடியிடித்து மேகம் ஓங்கிச் சென்று பெய்யத் தொடங்கிய குளிர்ச்சிமிக்க மலையிலே; கழை அமல்பு நீடிய வான் உயர் நெடுங்கோட்டு - மூங்கில் நெருங்கிப் பரந்த மிக உயர்ந்த நெடிய சிகரத்தின் கண்ணே; இலங்குவெள் அருவி வியன்மலைக் கவாஅன் - விளங்கிய வெளிய அருவியையுடைய அகன்ற மலைப்பக்கத்தில்; இயங்குநர் மடிந்த அயம் திகழ் சிறுநெறி - வழிப் போகுவார் யாருமில்லாத நீர் விளங்கிய சிறிய நெறியிலே; கடுமா வழங்குதல் அறிந்தும் - கொடிய சிங்கமுதலிய விலங்குகள் இயங்குவதனை அறிந்துவைத்தும்; நடுநாள் வருதி - இரவு நடுயாமத்தில் நீ வாராநின்றனை; யான் நோகு - இதற்கு யான் நோகா நின்றேன் அல்லேனோ?; எ - று.

    (வி - ம்.) அமலுதல் - நெருங்குதல். தளி - மழை.நீ இரவில் வரும் ஏதத்துக்கு யாம் அச்சமுறாதபடி வரைந்து பிரியாது உறைய நினைந்தா யல்லை யென்பாள், நயந்தனை யருளாயென்றாள்.

    உள்ளுறை :- சூடுவாரின்றி வேங்கையின் நறிய மலர் கற்பாறையில் உதிர்தல் போல நீ வரைந்துகொண்டு அருகிருந்து நலனுகர்ந்திலை; ஆதலின் தலைவியின் நலன் இழக்கலாயிற் றென்றதாம். மெய்ப்பாடு - அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் - ஏதஞ்சொல்லி வரைவு கடாதல்.

    (பெரு - ரை.) ஆசிரியர் பெயர் "சோருமருங் குமரனார்" என்றுங் காணப்படுகின்றது; உறைஇ - உறைத்து; பெய்து. இறுத்தல் - நெடிதுநிலை பெறல். நயந்தனை : முற்றெச்சம். அயம் - நீர். கடுமா - அரிமாமுதலிய ஆற்றலொடு புணர்ந்த வல்விலங்குகள்.

(257)