(து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகன் தலைமகளைத் தழுவலும் அவள் கொண்டிருந்த சினத்தை உள்ளடக்கி உடன்பட்டாள் போன்று "ஊரனே! நீ இப்பொழுது மிக்க விருப்பமுற்றாய் போன்று புல்லுகின்றனை, முன்பு என் கோதை வாடுமாறு வையகன்று ஒழிந்தா யென்பதை யான் அறிவேன்" என உள்ளுறையால் அவன் பரத்தையிற் பிரிந்ததனையுங் கூறி ஊடல் நீங்கா நிற்பது.
(இ - ம்.) இதனை, "அவனறிவு ஆற்ற அறியு மாகலின்" (தொல். கற்.6) என்னும் நூற்பாவின்கண் "ஆவயின் வரூஉம் பல்வேறு நிலை" என்பதனாலமைத்துக் கொள்க.
| கழுநீர் மேய்ந்த கருந்தாள் எருமை |
| பழனத் தாமரைப் பனிமலர் முணைஇத் |
| தண்டுசேர் மள்ளரின் இயலி அயலது |
| குன்றுசேர் வெண்மணல் துஞ்சும் ஊர |
5 | வெய்யை போல முயங்குதி முனையெழத் |
| தெவ்வர்த் தேய்த்த செவ்வேல் வயவன் |
| மலிபுனல் வாயில் இருப்பை அன்னஎன் |
| ஒலிபல் கூந்தல் நலம்பெறப் புனைந்த |
| முகையவிழ் கோதை வாட்டிய |
10 | பகைவன் மன்யான் மறந்தமை கலனே. |
(சொ - ள்.) கழுநீர் மேய்ந்த கருந்தாள் எருமை பழனத்தாமரைப் பனி மலர் முணைஇ - கழுநீர் மலரை மேய்ந்த பெரிய (கரிய) காலையுடைய எருமை அயலிலுள்ள வயலிலே படர்ந்த தாமரையின் குளிர்ந்த மலரைத் தின்பதனை வெறுத்துவிட்டு; தண்டுசேர் மள்ளரின் இயலி அயலது குன்றுசேர் வெள் மணல் துஞ்சும் ஊர - கையிலே தடிகொண்ட வீரரைப்போலச் செருக்கி நடந்து அதன் பக்கத்துள்ள குன்று போலக் குவிந்த வெளிய மணலின்மீது துயிலாநிற்கும் ஊரனே!; வெய்யைபோல முயங்குதி - நீ இப்பொழுது விருப்பமுடையாய் போலப் பலகாலும் என்னைத் தழுவிக் கொள்கின்றனை; முனை எழத் தெவ்வர்த் தேய்த்த செவ்வேல் வயவன் மலிபுனல் வாயில் இருப்பை அன்னஎன் - பகை மிகுதலாலே ஆண்டு வந்த பகைவரை யழித்த சிவந்த வேற்படையையுடைய வீரனாகிய 'விராஅன்' என்பவனது நிறைந்த "புனல்வாயிலை" அடுத்த "இருப்பையூர்" போன்ற என்னை விட்டொழிதலானே; ஒலி பல் கூந்தல் நலம் பெறப் புனைந்த முகை அவிழ் கோதை வாட்டிய பகைவன்மன் - என்னுடைய தழைத்த பலவாகிய கூந்தல் அழகு பெற அலங்கரித்த அரும்பு மலர்ந்த பூமாலை வாடும்படி செய்த மிக்க பகைவனல்லையோ?; யான் மறந்து அமைகலன் - யான் நின் செய்கையை மறந்திருப்பேனல்லேன் காண்; ஆதலின் என்னைத் தொடாதே கொள்; எ - று.
(வி - ம்.) பழனம் - நீர்நிலைவயல்.
மெய்ம்மையாக என்பால் நினக்கு அன்பில்லை யென்பாள் வெய்யைபோல முயங்குதி யென்றாள். கோதை புனைந்ததன் பயனாகிய புணர்ச்சி எய்தப் பெறாமையிற் கோதைவாட்டிய பகைவனென்றாள். தொடராதே என வெறுப்புக்கொண்டமை குறிப்பாள் மறந்தமைகலனென்றாள். பணிந்து வேண்ட ஊடல் தீர்வாளாவது.
உள்ளுறை :- தாமரை மலரை வெறுத்துக் கழுநீரை மேய்ந்த எருமை மணற்குன்றிலே சென்று தங்குமென்றது, தலைவி நலனை வெறுத்துக் காதற் பரத்தையின் இன்பந் துய்த்த தலைவனே, நீ ஆண்டுந்தங்காயாய்ச் சேரிப்பரத்தையின் மனையின்கண்ணே சென்று உறங்குவாயாயினா யென்றதாம். மெய்ப்பாடு - வெகுளி. பயன் - ஊடல்தீர்தல்.
(பெரு - ரை.) மறந்து அமைகலன் என்றது மறவேனாயினேன் நின்புன்மையை ஒருவாறு பொறுத்துக் கொள்கின்றேன் என்பது குறிப்பெச்சமாகலின் ஊடல் தீர்வது குறிப்பாயிற் றென்க.
(260)