திணை : குறிஞ்சி.

    துறை : (1) இது, சிறைப்புறமாகத் தோழி இரவுக்குறி விலக்கி வரைவுகடாயது.

    (து - ம்.) என்பது, தலைவன் சிறைப்புறமாக வந்திருப்பதை அறிந்த தோழி தலைவியை நோக்கி 'இத்தகைய கொடிய சிறிய நெறியில் நம் தலைவர் இருளில் வருதலால், அவர் நம்பால் அருளிலராவ'ரென இரவுக்குறி விலக்கி வரைவுகடாயது

    (இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியின்கண் அமைத்துக் கொள்க.

    துறை : (2) தலைமகள் இயற்பட மொழிந்ததூஉமாம்.

    (து - ம்.) என்பது, தலைவி வரைதல் வேட்கையளாய் மொழிந்தது கேட்ட தோழி தலைமகனை இகழ்ந்து கூறுதலும் அதுபொறாது தலைமகள் நொந்து 'அவர் வரைந்து கொள்ளாது இருளில் வருதலால் நம்பால் அருளிலராயினும் நாம் இறந்துபடுவது கருதி அன்பின் வருதலால், அவர் நீடுவாழ்வாராக' என இயற்படக் கூறாநிற்பதுமாம்.

    (இ - ம்.) இதற்கு,

  
"வரைதல் வேண்டித் தோழி செப்பிய 
  
 புரைதீர் கிளவி புல்லிய எதிரும்" (தொல். கள. 16) 

என்னும் விதிகொள்க.

    
அருளிலர் வாழி தோழி மின்னுவசிபு  
    
இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு 
    
வெஞ்சுடர் கரந்த கமஞ்சூல் வானம் 
    
நெடும்பெருங் குன்றத்துக் குறும்பல மறுகித் 
5
தாவில் பெரும்பெயல் தலைஇய யாமத்துக் 
    
களிறகப் படுத்த பெருஞ்சின மாசுணம் 
    
வெளிறில் காழ்மரம் பிணித்து நனிமிளிர்க்கும் 
    
சாந்தம் போகிய தேங்கமழ் விடர்முகை 
    
எருவை நறும்பூ நீடிய 
10
பெருவரைச் சிறுநெறி வருத லானே. 

    (சொ - ள்.) தோழி வாழி - தோழீ! நீ நெடுங்காலம் வாழ்வாயாக!; மின்னு வசிபு இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு - மின்னல் பிளந்து எழுந்து இருள் நிறைந்த ஆகாயத்தில் அதிர்கின்ற இடிமுழக்கத்துடனே; வெம் சுடர் கரந்த கமம் சூல் வானம் - வெய்ய ஆதித்தன் வெளியிலே தோன்றாதபடி மறையச் செய்த நிறைந்த சூலையுடைய மேகம்; நெடும் பெருங்குன்றத்துக் குறும் பல மறுகி - நெடிய பெரிய மலையிடத்துச் சிறிய பலவாக இயங்கி; தா இல் பெரும்பெயல் தலைஇய யாமத்து - வருத்தமில்லாத பெரிய மழையைப் பெய்துவிட்ட நடுயாமத்திலே; களிறு அகப்படுத்த பெருஞ்சின மாசுணம் - களிற்றியானைபைப் பற்றிச் சுற்றிக்கொண்ட பெரிய சினத்தையுடைய பெரும்பாம்பு; வெளிறுஇல் காழ் மரம் பிணித்து நனி மிளிர்க்கும் - வெண்மையில்லாது முற்றிய வயிரம் பொருந்திய மரத்துடனே சேரப்பிணித்து மிகப் புரட்டாநிற்கும்; சாந்தம் போகிய தேம் கமழ் விடர்முகை - சந்தன மரத்தினின்றும் போந்த நறுமணங் கமழ்கின்ற மலைப் பிளப்பினையுடைய துறுகல்லின் அயலிலே; எருவை நறும்பூ நீடிய - கொறுக்கச்சியின் நல்ல பூ நீடி மலர்ந்த; பெருவரைச் சிறுநெறி வருதலான் - பெரிய மலையின்கணுள்ள சிறிய நெறியில் வருதலான்; அருள் இலர் - நம் தலைவர்தாம் நம்பாற் சிறிதும் அருள் உடையார் அல்லர்; இனி அங்ஙனம் வாராதிருக்குமாறு கூறாய்; எ - று.

    (வி - ம்.) அவர் வருநெறியின் ஏதங்கருதி நாம் வருந்தும்படி வருதலின் அருளிலர் என்றாள்; இங்ஙனங் கூறவே வரைந்துகொள்வதன்றி வேறு செய்யலாவது இன்மையால், வரைவுகடா வாயிற்று. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

    (2) உள்ளுறை :- அவர் வரைந்துகொள்ளாது இருளில் வருதலால் நம்பால் அருளிலராயினும் நாம் இறந்துபடுவது கருதி அன்போடு வருதலால், அவர் நீடுவாழ்வாராக வென்று கூறிமுடிக்க.

    (பெரு - ரை.) வெஞ்சுடர் கரந்த இருள் தூங்கு விசும்பின் கமஞ்சூல் வானம் மின்னுவசிபு அதிரும் ஏறொடு குன்றத்து மறுகிப் பெயல் தலைஇய யாமத்து எனக் கொண்டுகூட்டி அதற்கேற்பப் பொருள் கோடல் சிறப்பு. இன்றேல் கதிரவனை மறைத்து நடுயாமத்திலே மழை பெய்தது எனப் பொருந்தாமை யுணர்க. காழ்மரம் பண்டே பாம்பு தான் சுற்றிக் கொண்டிருந்த மரமாம். அம்மரத்தைப் பற்றுக்கோடாகக் கொண்டன்றித் தான் படுத்த யானையைப் புரட்டலாகாமையின் மாசுணம் மரம் பிணித்து மிளிர்க்கும் எனல் வேண்டிற்று.

    (2) உள்ளுறை :- இனி, தலைவி கூற்றாகக் கொள்ளுங்கால், தோழி, "அவர் அருள் இலர்" என்ற இயற்பழித்தாளாக அது கேட்ட தலைவி அருள் இலரோ? என்று வினவி எற்றால் அருளிலாமைக்குக் காரணம் அவர் சிறுநெறி வருதல்தானோ என்று மீண்டும் வினவிக் குறிப்பாக அவர் அருளுடையரே என்று இயற்பட மொழிந்தாள் என நுண்ணிதின் உரைகோடல் வேண்டும்; இன்றேல் அருள் இலர் என்றது இயற்படமொழிந்த தாகாது.

(261)