திணை : நெய்தல்.

    துறை : இது, சிறைப்புறமாகத் தோழி தலைமகனை வரைவு கடாயது.

    (து - ம்.) என்பது, தலைமகன் ஒருசிறைப்புறமாக வந்திருப்பதை யறிந்த தோழி தலைவியை நோக்கி அவர் நம்பால் வந்துபோகின்ற களவொழுக்கத்தால் அடைந்த அலர் முதலாயவற்றை நாணத்தினால் நாம் நேரே கூறாவிடினும் நம்முடைய கண்ணீரே அவரறியும்படி உரை செய்துவிடுகின்றனவென்று அழிந்துகூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்பதனால் அமைத்துக்கொள்க.

    
பிறைவனப்பு இழந்த நுதலும் யாழநின் 
    
இறைவரை நில்லா வளையும் மறையாது 
    
ஊரலர் தூற்றும் கௌவையும் நாணிட்டு 
    
உரையவற்கு உரையாம் ஆயினும் இரைவேட்டுக் 
5
கடுஞ்சூல் வயவொடு கானலெய் தாது 
    
கழனி ஒழிந்த கொடுவாய்ப் பேடைக்கு 
    
முடமுதிர் நாரை கடல்மீன் ஒய்யும் 
    
மெல்லம் புலம்பற் கண்டுநிலை செல்லாக் 
    
கரப்பவுங் கரப்பவுங் கைம்மிக்கு 
10
உரைத்த தோழி உண்க ணீரே. 

    (சொ - ள்.) தோழி பிறை வனப்பு இழந்த நின் நுதலும் இறைவரை நில்லா வளையும் - தோழீ! பிறைபோன்ற அழகெல்லாம் இழந்த நினது நெற்றியையும் முன்கையளவினில்லாது கழலும் வளையையும்; மறையாது ஊர் அலர் தூற்றும் கௌவையும் - மறைந்தேனுங் கூறாது நேராக வந்து ஊரார் அலர் தூற்றும் பழிச்சொல்லையும்; உரையவற்கு நாண் இட்டு உரையாம் ஆயினும் - சொல்லவேண்டிய நங்காதலனுக்கு நாம் நாணமேலீட்டினால் சொல்லாதொழிந்தோ மெனினும்; இரைவேட்டுக் கடுஞ்சூல் வயவொடு கானல் எய்தாது கழனி ஒழிந்த கொடுவாய்ப் பேடைக்கு - இரையை விரும்பி நிறைந்த சூலுடைமையின் இயங்கமாட்டா வருத்தத்தினாலே நெய்தனிலத்தின்கண்ணதாகிய கழியை அடையாமல் மருதநிலத்தின்கண்ணதாகிய கழனியிலே தங்கியிருந்த வளைந்த வாயையுடைய பேடைநாரைக்கு, முடம் முதி்ர் நாரை கடல் மீன் ஒய்யும் - முடம் முதிர்ந்த நாரைப் போத்துக் கடலின் மீனைக் கொண்டுபோய்க் கொடாநிற்கும்; மெல்லம் புலம்பன் கண்டு - மெல்லிய கடற்கரைத் தலைவனைக் கண்டு; கரப்பவும் கரப்பவும் நிலை செல்லாக் கைம்மிக்கு - பலகால் நாம் மறைக்கவும் மறைக்கவும் நிலைகொள்ளாமல் அளவு கடந்து; உண் கண் நீர் உரைத்த - மையுண்ட நம்முடைய கண்களின் நீரே வெளிவந்து உரை செய்துவிட்டன; யாம் யாது செய்யவல்லேம்! எ - று.

    (வி - ம்.) ஒய்யும் - கொடுக்கும். நிலைசெல்லல் : ஒருசொல். வரைந்து பிரியாது முயங்குவையென்பாள் பிரிவினேதமும் அலருங் கூறினாள்.

    உள்ளுறை :- வயலிலே தங்கிய பேடைக்கு நாரைப்போத்து, கடலின் மீனைக் கொண்டுவந்து சொரிதல்போலத் தலைவன் தலைவியை வரைந்து தன்னில்லத்தே கொண்டு சென்றுவைத்துத் தானும் பொருளீட்டிவந்து முட்டின்றி இல்லறம் நடத்துவனென்றதாம்.

    இன்னும் இதனானே தன்னாட்டுப்பறவையும் மனைவியொடு வாழக்கண்டும் தான் அங்ஙனஞ் செய்திலனே இஃதென்ன வியப்போவென வேறும் ஒருபொருள் தோன்றிற்று. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

    (பெரு - ரை.) இச் செய்யுளின் பொருண்முடிபு பொருத்தமுடையதாகக் காணப்படவில்லை. கண்ணீர் காதலனுக்கு உரைத்து விட்டது என்பது துறையோடு பொருந்தாது. ஆதலால் இச் செய்யுளின் சொற்கள் சில திரிந்துவிட்டிருத்தல் வேண்டும் என்று ஊகிக்கின்றோம். பிறைவனப்புஇழந்த நுதலும் நில்லா வளையும் ஊர்தூற்றும் கௌவையும் அவர்க்கு உரையா ஆயினும் உண்கண் நீர் உரைத்தொழிந்தன; ஆதலால் நமர் இனி நம்மை இற்செறிப்பர், இனி யாம் யாது செய்வாம் எனத் தோழி தலைவியை நோக்கிக் கூறுவாளாய்க் களவொழுக்கத்தை நமர் அறிந்துகொண்ட செய்தியைக் குறிப்பாக வுணர்த்தி வரைவு கடாவினள் என்று கோடலே தகுதியாம். இதற்கு உரையவர்க்கு உரையா ஆயினும் என்று பாடம் இருத்தல் வேண்டும். இங்ஙனமிருப்பின் "தோழி நமர்க்கு நின் நுதலும் வளையும் ஊரலர் தூற்றும் கௌவையுங்கூட உரையா நின் உண்கண் ணீரே நாண் விட்டுக் கரப்பவும் கரப்பவும் கைம்மிக்கு உரைத்த" என நன்கு பொருத்தமுற அமையும். "நாண்விட்டு" என்று பாடவேற்றுமையுண்டு. இஃதே சிறந்த பாடமுமாம். இக் கருத்திற்கு உரையவர் என்று பாடங்கொண்டு நாம் அறத்தொடு நிலையால் உரைத்தற்குரிய நமர்க்கு எனப் பொருள் கொள்க.

(263)