திணை : பாலை.

    துறை : (1) இஃது, உடன்போகாநின்ற தலைமகன் தலைமகளை வற்புறீஇயது.

    (து - ம்.) என்பது, உடன்போக்கிற் கொண்டுசெல்லுந் தலைமகன் மடந்தாய், ஊர் தோன்கின்றது உங்கே பாராய் : சிறிது நனி விரைந்து செல்லுவாயாக என ஆற்றிக்கொண்டு செல்லாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "ஒன்றாத் தமரினும்" (தொல். அகத். 41) எனவரும் நூற்பாவின்கண் "கற்பொடு புணர்ந்த கௌவை உளப்பட, அப்பாற்பட்ட வொருதிறத் தானும்" என்பதனால் அமைத்துக்கொள்க.

    துறை : (2) உடன்போய் மறுத்தராநின்றான் ஊர்காட்டி வற்புறீஇயதுமாம்.

    (து - ம்.) என்பது, வெளிப்படை. (ஊரெனப் பொதுப்படக் கூறியிருத்தலால் உரை இரண்டற்குமொக்கும்.)

    (இ - ம்.) இதுவுமது.

    
பாம்பளைச் செறிய முழங்கி வலனேர்பு 
    
வான்தளி பொழிந்த காண்பின் காலை 
    
அணிகிளர் கலாவம் ஐதுவிரித் தியலும் 
    
மணிபுரை எருத்தின் மஞ்ஞை போலநின் 
5
வீபெய் கூந்தல் வீசுவளி உளர 
    
ஏகுதி மடந்தை எல்லின்று பொழுதே 
    
வேய்பயில் இறும்பின் கோவலர் யாத்த 
    
ஆபூண் தெண்மணி இயம்பும் 
    
உதுக்காண் தோன்றுமெம் சிறுநல் ஊரே. 

    (சொ - ள்.) மடந்தை பொழுது எல்லின்று - மடந்தாய்! ஞாயிறு மேலைத்திசையிலே சென்று ஒளி மழுங்கியது: வேய்பயில் இறும்பின் ஆ பூண் கோவலர் யாத்த தெள்மணி இயம்பும் - மூங்கில் நிறைந்த சிறிய மலையின் கண்ணே பசுவினிரை பூண்ட கோவலராலே கட்டப்பட்ட தெளிந்த ஓசையையுடைய மணி ஒலியா நிற்கும்; எம் சிறுநல் ஊர் தோன்றும் உதுக்காண் - எமது சிறிய நல்லவூர் தோன்றாநின்றது, உவ்விடத்தே பாராய்!: பாம்பு அளைச் செறிய முழங்கி வலன் ஏர்பு வான் தளி பொழிந்த காண்பின் காலை - பாம்பு அளையினுள்ளே செறிந்திருக்குமாறு முழங்கி வலமாக எழுந்து மேகம் மழை பொழிந்த காட்சியையுடைய காலைப் பொழுதிலே; அணிகிளர் கலாவம் ஐது விரித்து இயலும் மணி புரை எருத்தின் மஞ்ஞை போல - அழகு விளங்கிய கலாபத்தை வியப்புடையதாக விரித்து ஆடுகின்ற நீலமணி போன்ற பிடரியை உடைய மயில்போல; வீ பெய் நின் கூந்தல் வீசு வளி உளர ஏகுதி - மலர் சூடிய நின் கூந்தல் வீசுகின்ற காற்று உளரி விரித்துவிடச் சிறிது விரைந்து செல்வாயாக! எ - று.

    (வி - ம்.) ஏர்பு - எழுந்து. காண்பு - காட்சி. ஐது - வியப்புடையது.

    "இரட்டைக் கிளவி யிரட்டை வழித்தே" (தொல். பொ. 297) என்றதன்படி தலைவிக்கு மஞ்ஞையையும் அவள் கூந்தலுக்குக் கலாவத்தையும் உவமித்ததென்க. இது காதல் நிலைக்களமாக அடையடுத்த முதலொடு முதல் வந்த உருவுவமம்.

     தன்னூர் மிக நெருங்கியதென்பான் ஆபூணுமணி இயம்புமென்றான். இஃது அவளது அயாவொழியுமாறு கூறினானுமாம். விரைந்து செல்கவென்பான் கூந்தல்வளியுளர ஏகுதியென்றான். இனி அச்சமில்லையாதலால் 'கொண்டைமேற் காற்றடிக்கச்செல்' என்றானுமாம். மெய்ப்பாடு - உவகை, பயன் - தலைமகளை அயாவகற்றிக் கொண்டேகல்.

    (பெரு - ரை.) காண்பு இன் எனக் கண்ணழித்து, காண்டற்கு இனிதாகிய என்று பொருள்கோடலுமாம். "ஈகாண் தோன்றும்" என்றும் பாடம். தலைவன் தலைவியைக் கொண்டு தலைக்கழியுமிடத்தே 'இடையூறின்றிப் புணர்ச்சி நிகழினும் தந்தையரும் தன்னையரும் தேடிப்பின் வந்து இவ்வொழுக்கத்திற்கு இடையூறு செய்வரென்னும் கருத்தே இவருள்ளத்தும் பெரும்பான்மை நிகழ்தலின் பிரிவு நிகழ்ந்தவாறாயிற்று" எனவரும் நச்சினார்க்கினியர் நுண்ணுரை (தொல். அகத். 15) உரை ஈண்டு நினைக.

(264)