(து - ம்.) என்பது பாங்கி மதியுடம்பாட்டின் கண்ணே இவனொரு குறையுடையான் போலுமென்று தோழி உய்த்துணர நிற்குமிடத்து அதுவரையும் பொறாத தனது நெஞ்சைத் தலைவன் நெருங்கி நெஞ்சமே இவளின் தலைவியாகிய மெல்லிய கூந்தலையுடையாள் நம்பால் அன்புடையளாதலின் நீ வருந்தாதொழியென்று தெளியப் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "தோழி குறை அவட்சார்த்தி மெய்யுறக் கூறலும்" (தொல். கள. 11) என்னும் விதி கொள்க.
| இறுகுபுல் மேய்ந்த அறுகோட்டு முற்றல் |
| அள்ளல் ஆடிய புள்ளி வரிக்கலை |
| வீளை அம்பின் வில்லோர் பெருமகன் |
| பூந்தோள் யாப்பின் மிஞிலி காக்கும் |
5 | பாரத்து அன்ன ஆர மார்பின் |
| சிறுகோல் சென்னி ஆரேற்று அன்ன |
| மாரி வண்மகிழ் ஓரி கொல்லிக் |
| கலிமயிற் கலாவத்து அன்னஇவள் |
| ஒலிமென் கூந்தல் நம்வயி னாளே. |
(சொ - ள்.) இறுகு புல் மேய்ந்த அறுகோட்டு முற்றல் அள்ளல் ஆடிய புள்ளி வரிக் கலை - காய்ந்த புல்லை மேய்கின்ற உதிர்ந்த கொம்பினையுடைய முதிர்ச்சியையுடைய சேற்றில் ஓட்டி வருந்தச் செய்த புள்ளியையும் வரியையும் உடைய கலைமானை; வீளை அம்பின் வில்லோர் பெருமகன் பூந்தோள் யாப்பின் மிஞிலி காக்கும் - எய்யும் ஒலியையுடைய அம்பினையும் வில்லினையுமுடைய வீரர் தலைவனாகிய பொலிவு பொருந்திய தோளிலே கவசம் பூட்டிய மிஞிலி என்பவனாலே காவல் செய்து வருகின்ற; பாரத்து அன்ன (இவள்) ஆரம் மார்பில் சிறுகோல் சென்னி - பாரம் என்னும் ஊரைப்போன்ற ஆத்திமாலையையுடைய மார்பையுடைய சிலவாகிய ஊர்களை ஆட்சிகொண்ட செங்கோலையுடைய சோழனுடைய; ஆர் ஏற்று அன்ன (இவள்) மாரிவண் மகிழ் ஓரி கொல்லி - ஆரேற்றைப் போன்ற இவளுடைய தலைவியாகிய மழை போன்ற கொடையும் கள்ளுணவுமுடைய ஓரியென்பவனது கொல்லி மலையிலிருக்கின்ற; கலிமயில் அன்ன இவள் - செருக்கிய மயிலைப் போன்ற நம் காதலியாவாள்; கலாவத்து ஒலி மென் கூந்தல் - அம் மயிலின் கலாபம் போன்ற தழைந்த மெல்லிய கூந்தலையுடையாள்; நம் வயினாள் - நம்பாலள் அல்லளோ?; ஆதலின் நெஞ்சமே கவலை கொள்ளாதே; நின்செயல் விரைய முடிவு பெறுங்காண்! எ - று.
(வி - ம்.) வீளை - அம்பினொலி.
கோடு முதிர்ந்தகாலத்து உதிர்தலின் அறுகோடெனப்பட்டது. முற்றிய கோடு உதிர்தலையுடைய கலையென இயைப்பினும் அமையும். பாரத்து அன்ன ஆரேற்று அன்ன மயிலன்ன காதலியாகிய இவளெனக் கூட்டி இவள் கூந்தல் நம்முடைய கையிலே சிக்குண்டதன்றோ இனி எங்குப் போகுவளென இயைப்பினுமாம். மெய்ப்பாடு - பிறன்கண் தோன்றிய ஆக்கம்பற்றிய இளிவரல். பயன் - தலைமகன் ஆற்றல்.
(பெரு - ரை.) மிஞிலிகாக்கும் பாரத்து அன்ன இவள்: சென்னி ஆரேற்று அன்ன இவள் கொல்லிக் கலிமயில் அன்ன இவள் எனத் தனித்தனி இயைத்துக்கொள்க. கலாவத்து ஒலிகூந்தல் என்று இயைத்துக் கொள்க. பாரம், ஆரேறு என்பன ஊர்ப்பெயர்கள்.
(265)