(து - ம்.) என்பது, தலைமகன் அந்தணர் சான்றோர் அருங்கல முன்னிட்டு மனையகம் புகுந்து தோழியைக் கண்டானுக்கு அவள் நீயிர் வரைவிடை வைத்துப் பிரியுங்காலை யாம் வருந்தாதிருந்ததன்றி இம் மணவினையை முயன்றேமில்லை, இது நும் முயற்சியானன்றோ நிகழ்ந்ததென மகிழ்ந்து கூறாநிற்பதுமாகும். (உரை இரண்டற்குமொக்கும்.)
(இ - ம்.) இதனை, "நாற்றமும் தோற்றமும்" (தொல். கள. 23) என்னும் நூற்பாவின்கண் 'நாலெட்டு வகையும் தாங்கருஞ் சிறப்பிற்றோழி மேன' என்புழித் தாங்கருஞ் சிறப்பு என்ற விதப்பால் கொள்க.
| கொல்லைக் கோவலர் குறும்புனஞ் சேர்ந்த |
| குறுங்காற் குரவின் குவியிணர் வான்பூ |
| ஆடுடை இடைமகன் சூடப் பூக்கும் |
| அகலுள் ஆங்கண் சீறூ ரேமே |
5 | அதுவே சாலுவ காமம் அன்றியும் |
| எம்விட்டு அகறிர் ஆயின் கொன்னொன்று |
| கூறுவல் வாழியர் ஐய வேறுபட்டு |
| இரீஇய காலை இரியின் |
| பெரிய அல்லவோ பெரியவர் நிலையே. |
(சொ - ள்.) ஐய வாழியர் - ஐயனே! வாழ்வீராக!; எம் விட்டு அகறிர் ஆயின் - நீவிர் எம்மைக் கைவிட்டு வேற்று நாட்டுக்குச் செல்வீராயின்; கொல்லை கோவலர் குறும் புனஞ் சேர்ந்த குறுங்கால் குரவின் குவி இணர் வான் பூ - அக் காலத்தில் யாம் கொல்லைகளிலே தனியே இருக்கும் கோவலருடைய சிறிய புனத்தைச் சார்ந்த குறுகிய காம்பினையுடைய குராமரத்தின் குவிந்த கொத்திலுள்ள வெள்ளிய பூ; ஆடு உடை இடை மகன் சூடப்பூக்கும் அகல் உள் ஆங்கண் சீறூரேம் - ஆடு மேய்த்தலையுடைய இடையன் அணிந்துகொள்ளுமாறு மலராநிற்கும் அகன்ற இடத்தையுடைய சீறூரின்கண்ணே யிருத்தலையுடையேமாயிரா நின்றேம்; அதுவே காமம் சாலுவ - அங்ஙனம் உறைகுவதொன்றுமே எங்கள் விருப்பத்துக்குப் பொருந்துதலா யிருக்கும்; அன்றியும் கொன் ஒன்று கூறுவல் - அல்லாமலும் யான் கூறுவதில் ஒருபயனும் இல்லையாயினும் இன்னும் ஒன்று கூறாநிற்பேன்; வேறுபட்டு இரீஇய காலை இரியின் - நீயிர் வேற்று நாட்டுக்குச் செல்லக் கருதி எம்மை இல்லின்கண் இருத்தியகாலை யாம் வருந்தியக்கால்; பெரியவர் நிலை பெரிய அல்ல - பெருங்குடியிலே பிறந்தவர் நிலை பெரிய அல்லவாமன்றோ? எ - று.
(வி - ம்.) அகலுளாங்கண் - அகன்ற இடம். ஆங்கண் - ஊரையடுத்தவிடமுமாம். பெரியவல்லவோ பெரியவர் நிலை: பிறிதுமொழிதலணி. இஃது அருள் மிக உடைமை.
பிரிந்த தலைமகன் வருந்துணை இல்லின்கண் ஆற்றியிருத்தல் கற்புடை மகளிர் கடனாதற்கேற்பச் சீறூரேமென்றாள், அதுவே காமம் சாலுமென்றதனால் உடன்பட்டமையாயிற்று. மெய்ப்பாடு - பெருமிதம், பயன் - செலவுடன்படுதல்.
(பெரு - ரை.) நும்முடைய திருவுளக்குறிப்பிற்கேற்ப நும்முடைய திருமனையின்கண் நீயிர் மீண்டுவருந்துணையும் ஆற்றியிருத்தலே எம் கடமை என்பதை யாங்கள் நன்குணர்வேம். ஆதலின் யாம் ஆற்றியிருப்பேம் எம் பெருமான் கருதியாங்குச் சென்றுவருக எனச் செலவுடன்பட்டபடியாம்
இவ்வூர் எம் பெருமான் ஊர் என்னும் நினைவே எம் பிரிவுத் துன்பத்தை ஆற்றி நும்மோடுறைவது போன்று அமைதிதரும் என்பாள் சீறூரேம் ஆகவே காமம் சாலும் என்றாள் என்க. குரவின் பூ 'இடைமகன் சூடப் பூக்கும்' என்றது எம் பெருமானின் பொருளீட்டும் முயற்சி எம் பெருமாட்டி இல்லறம் நிகழ்த்த ஆக்கமாகும் என்னும் உள்ளுறையுடைய தென்க.
(266)