திணை : நெய்தல்.

     துறை : (1) இது, தோழி காப்புக் கைமிக்குக் காமம் பெருகிய காலத்துச் சிறைப்புறமாகச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, தலைவியை வேற்றுமைகண்டு இல்வயிற் செறித்தகாலத்துக் காமமிகுதிப்பட்டு வருந்துந் தலைவியை ஆற்றப் புகுந்த தோழி, தலைவன் சிறைப்புறத்தானாதலையறிந்து அவன் கேட்குமாற்றானே கானலில் என்றும் வாராத யான் ஒருநாள்வந்து ஆண்டுப் புள்ளொலிக் குரலைத் தலைவனது தேர்க்குரலோவென்றவுடன் அவன் அங்கு வந்துவிட்டனன்: இப்பொழுது அங்ஙனமும் தலைப்பெய்யாதபடி காவல் செய்யப்பட்டாயிற்று என்று நொந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்குக், "காப்பின் கடுமை கையற வரினும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.

     துறை : (2) வரைவுகடாயதூஉமாம்.

     (து - ம்.) என்பது, வெளிப்படை. (உரை இரண்டற்கும் ஒக்கும்.)

     (இ - ம்.) இதனை, "அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (மேற்படி) என்பதனாற் கொள்க.

    
நொச்சி மாஅரும் பன்ன கண்ண 
    
எக்கர் ஞெண்டின் இருங்கிளைத் தொழுதி 
    
இலங்கெயிற்று ஏஎர் இன்நகை மகளிர் 
    
உணங்குதினை துழவும் கைபோன் ஞாழல் 
5
மணங்கமழ் நறுவீ வரிக்குந் துறைவன் 
    
தன்னொடு புணர்த்த இன்னமர் கானல்  
    
தனியே வருதல் நனிபுலம் புடைத்தென 
    
வாரேன் மன்யான் வந்தனென் தெய்ய 
    
சிறுநா வொண்மணித் தெள்ளிசை கடுப்ப 
10
இனமீன் ஆர்கை ஈண்டுபுள் ஒலிக்குரல் 
    
இவைமகன் என்னா அளவை 
    
வயமான் தோன்றல் வந்துநின் றனனே. 

     (சொ - ள்.) நொச்சி மா அரும்பு அன்ன கண்ண எக்கர் ஞெண்டின் இருங்கிளைத் தொழுதி - நொச்சியின் கரிய அரும்பு போன்ற கண்ணையுடைய மணலால் ஆகிய எக்கரின்கண் உள்ள பெரிய சுற்றத்தையுடைய ஞெண்டின் கூட்டம; இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர் உணங்குதினை துழவும் கைபோல் ஞாழல் மணங்கமழ் நறுவீ வரிக்கும் துறைவன் தன்னொடு - விளங்கிய பற்களின் அழகிய இனிய நகையையுடைய மாதர்கள் வெயிலிலே காயுந் தினையைக் கைவிரலாலே துழாவி வருதல் போல மணம் வீசும் ஞாழலின் உதிர்ந்த மலரைக் காலால் வரித்துக் கோலஞ் செய்யுந் துறையையுடைய தலைவனொடு; புணர்த்த இன் அமர் கானல் தனியே வருதல் - கூட்டிய இனிய விருப்பத்தையுடைய கழிச் சோலையிலே அவளின்றித் தனியே நான் வருதல்; நனிபுலம்பு உடைத்து என வாரேன் மன் யான் - மிக வருத்தமுடையதாய் இராநின்றது எனக் கருதி அதனால் பெரும்பாலும் வாராதிருந்த யான்; வந்தனென் - முன்பு ஒருநாள் வந்துளேனாகி, சிறுநா ஒள் மணித் தெள் இசை கடுப்ப இனம் மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலிக்குரல் - சிறிய நாவையுடைய ஒள்ளிய மணியின் தெளிந்த ஓசையைப் போலக் கூட்டமாகிய மீனைத் தின்னுகிறதற்கு வந்து கூடுகின்ற புள் ஒலிக்குங் குரலைக் கேட்டு; இவை மகன் என்னா அளவை - இவ்வொலி தலைமகனது தேர் மணியோசை போலுமென்றுட்கொண்டு "இவ்வோசை தலைமகன்" என்று சொல்லெடுக்கு முன்; வயமான் தோன்றல் வந்து நின்றனன் - வலிய குதிரையையுடைய தோன்றலாவான் ஆங்கு வந்து நின்றனன்; இப்பொழுது அங்ஙனமும் காணாதபடி காவல் செய்தாயிற்று; எ-று.

     (வி - ம்.) இறைச்சி :- ஞாழலி னுதிர்ந்த பூவை ஞெண்டு துழவுமென்றது, தலைவன்பால் நின்று பிரித்து இல்வயிற்செறிக்கப்பட்ட தலைவியை ஏதிலாட்டியர் அலர்தூற்றி வருத்தாநின்றார் என்றதாம். காப்புக் கைமிக்குக் காமம் பெருகியகாலத்துக் கூறினமையின் அறத்தொடு நிலைக்கட்பட்டது இத்துறை என்க. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - அறத்தொடு நிற்றல்.

     (பெரு - ரை.) இச் செய்யுட்குப் பயன் 'அறத்தொடு நிலை' என்று உரையாசிரியர் கூறுவது பொருந்தாது. இது தலைவி காப்புக் கைமிக்கமையால் இரவுக்குறிக்கண் தலைவனைக் காணவியலாதிருத்தலைத் தோழி தலைவனுக்குக் கூறி இரவுக்குறி மறுத்தபடியாம். இதற்குப் பயன் வரைவுகடாதலேயாம். முதற்றுறைக்குத் தோழி தலைவனுக்குத் தலைவியின் காப்பு மிகுதியுணர்த்து மாத்திரையே கொள்க.

    இரண்டாவது துறைக்கு, காப்புமிகுதி இலதாகவும் தோழி அஃது உளதாகப் படைத்துமொழிந்து தலைவனை வரைவுகடாவினள் எனக் கோடல் வேண்டும்.

(267)