(து - ம்.) என்பது, வெளிப்படை (உரை இரண்டற்கு மொக்கும்).
(இ - ம்.) இதுவுமது.
| சூருடை நனந்தலைச் சுனைநீர் மல்க |
| மால்பெயல் தலைஇய மன்னெடுங் குன்றத்துக் |
| கருங்கால் குறிஞ்சி மதனில வான்பூ |
| ஓவுக்கண் டன்ன இல்வரை இழைத்த |
5 | நாறுகொள் பிரசம் ஊறுநா டற்குக் |
| காதல் செய்தும் காதலம் அன்மை |
| யாதெனிற் கொல்லோ தோழி வினவுகம் |
| பெய்ம்மணல் முற்றங் கடிகொண்டு |
| மெய்ம்மலி கழங்கின் வேலற் றந்தே. |
(சொ - ள்.) தோழி மணல் பெய்ம் முற்றம் கடிகொண்டு - தோழீ! மணலைப் பரப்பிய முற்றத்தைச் சிறப்புச் செய்து; மெய்ம்மலி கழங்கின் வேலன் தந்து - மெய்ம்மையைக் கூறுகின்ற கழங்கிட்டுக் குறிபார்த்தலையுடைய படிமத்தானை அன்னை வீட்டில் அழைத்து வந்திருத்தலானே; சூர் உடை நனந்தலைச் சுனை நீர் மல்க - அச்சஞ் செய்தலையுடைய இடமகன்ற சுனையில் நீர் நிறையும்படியாக; மால் பெயல் தலைஇய மன் நெடுங்குன்றத்து - மேகம் மழை பெய்துவிட்ட மிக்க நெடிய குன்றத்தின்கண்ணே; கருங்கால் குறிஞ்சி மதன் இல வான் பூ - கரிய காம்பையுடைய குறிஞ்சியின் வன்மையில்லாத மெல்லிய வெளிய பூ; ஓவுக் கண்டு அன்ன இல்வரை இழைத்த நாறுகொள் பிரசம் ஊறும் நாடற்கு - ஓவியன் மலையிடத்தே சித்திரித்தாற்போன்ற வேட்டுவர் இல்லங்களிலே இழைக்கப்பட்ட தேனடைக்கு வேண்டிய அளவு மணங்கொண்ட தேனூறுகின்ற நாட்டையுடைய தலைவனுக்கு; காதல் செய்தும் காதலம் அன்மை யாதெனின் வினவுகம் - யாம் பலபடியாகக் காதலுண்டாக்கியிருந்தும் அவனாலே காதலிக்கப்படுந் தன்மையே மல்லாதிருத்தல் எக்காரணத்தினாலோ? இவ்வொரு காரியத்தை அந்த வேலன்பாற் கேட்போமாக; எ - று.
(வி - ம்.) இழைத்த என்பதனை வினைப்பெயராக்கி நான்கனுருபு கொடுத்துக் கூறுக. தந்து என்பதனைத் தரவெனத் திரிக்க.
சிறைப்புறமாகிய தலைமகன் கேட்டு விரைய வரையுமாற்றானே அவன்பால் இறைமகள் கைகடந்த காதலுடையளெனவும் அவன் அங்ஙனம் இலனாயினானெனவுங் கூறுவாள் நாடற்குக் காதல் செய்துங் காதலம் அன்மை என்றாள்.
உள்ளுறை :-கருங்கோற் குறிஞ்சியின் மதனிலவாகிய பூ இல்லகத்து இழைத்த தேனடைக்கு மிக்க தேனூறுமென்றது, குறவர் மகளிரேம் ஆகிய யாம் மருதநிலத் தலைவன் மகனாகிய நம் காதலன்பால் வழிமுறை பெருகற்பாலதாகிய நட்புவைத்துள்ளோம்; அதனை அவன் அறிந்தானில்லையே யென்று இரங்கியதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.
(பெரு - ரை.) நாடற்குக் காதல் செய்தும் என்றது நாடனைக் காதலித்திருந்தும் என்றவாறு. "ஒருதலையான் இன்னாது காமம்" என்பதுபற்றி் நாம் காதலிக்குமளவு நம் பெருமானும் நம்மைக் காதலித்திலன்; காதலித்திருப்பின் அவன் வரைந்துகொண்டிருப்பன். வரையாமையாலன்றோ வெறியெடுத்தன் முதலிய வீண்துயர்கள் எய்துகின்றன, என்று வருந்தியபடியாம். வன்மையில்லாத பேதையாகிய குறிஞ்சிப் பூக்கள் தமக்குக் கைம்மாறேதும் இயற்றாத தேனடைக்குத் தாம் தேனூறி நல்குதல் போன்று நம்பால் காதலில்லாத நம் பெருமானுக்கு நாம் மட்டும் காதல் கனிந்த பேதையரேமாயினேம் என்பாள் குறிஞ்சிப்பூ இல்வரை இழைத்தனவற்றிற்குப் பிரசம் ஊறும் என்றாள் என்க. 'காதல் செய்தவும் காதலம் அன்மை' என்றும் பாடம். இதே சிறந்ததுமாம்.
(268)