(து - ம்.) என்பது, தலைவியைத் தலைமகன் கொண்டுதலைக் கழிந்தவழிக் கற்பொடு புணர்ந்த கௌவைக்கண் மனையகத்திருந்த நற்றாய், அஃது அறத்தாறெனக் கொண்டாளாயினும், ஏதிலார் கூறும் பழிமொழி பொறாளாய் மயங்கி 'முன்னமே என்னுயிரைக் கொண்டு போகாது இப்பொழுது ஏதிலாளன் பின்சென்ற என்மகளைப் பின் சென்று தேடி அலர்கூறுதலை யான் கேட்டிருக்குமாறு என்னை இதுகாறும் கைவிட்டொழிந்த கூற்றும் தானே கெடுவதாக' என்று மருண்டு கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, “தன்னும் அவனும் அவளும்” என்ற நூற்பாவின்கண் (தொல். அக. 36) தெய்வம் நன்மை தீமை அச்சஞ்சார்தல் என்று அன்ன பிறவும் என்பதனாற் கொள்க.
| இரும்புனிற்று எருமைப் பெருஞ்செவிக் குழவி |
| பைந்தாது எருவின் வைகுதுயில் மடியும் |
| செழுந்தண் மனையோடு எம்மிவண் ஒழியச் |
| செல்பெருங் காளை பொய்மருண்டு சேய்நாட்டுச் |
5 | சுவைக்காய் நெல்லிப் போக்கரும் பொங்கர் |
| வீழ்கடைத் திரள்காய் ஒருங்குடன் தின்று |
| வீசுனைச் சிறுநீர் குடியினள் கழிந்த |
| குவளை உண்கணென் மகளோர் அன்ன |
| செய்போழ் வெட்டிப் பெய்தல் ஆயம் |
10 | மாலைவிரி நிலவிற் பெயர்புபுறங் காண்டற்கு |
| மாயிருந் தாழி கவிப்பத் |
| தாவின்று கழிகஎற் கொள்ளாக் கூற்றே. |
(சொ - ள்.) இரும் புனிற்று எருமைப் பெருஞ்செவிக்குழவி - அணித்தாக ஈனப்பட்ட கரிய எருமையின் பெரிய செவியையுடைய கன்று; பைந் தாது எருவின் வைகு துயில் மடியும் செழுந் தண் மனையோடு - பசிய மலரில் உள்ள பராகங்கள் உதிர்ந்து எருவாகக் கிடத்தலையுடைய தொழுவத்திடத்துத் தங்கப்பெற்ற துயிலை மேற்கொண்டு செழுமையுடைய குளிர்ச்சியுற்ற மாளிகையுடனே; எம் இவண் ஒழியச் செல் பெருங்காளை பொய் மருண்டு - எம்மை இங்கே ஒழியவிட்டுத் தன்னுடனே வருகின்ற பெரிய காளையாவான் கூறும் அளவு கடந்த பொய்ம்மொழியாலே மயங்கி; சேய் நாட்டுச் சுவைக் காய் நெல்லிப்போக்கு அரும் பொங்கர் - நெடுந்தூரத்திலுள்ள அவனது நாட்டை அடைய விரும்பி இளமரஞ் செறிந்த சுவையையுடைய நெல்லியஞ் சோலையில்; வீழ் கடைத் திரள்காய் ஒருங்கு உடன் தின்று - உதிர்ந்த கடையிலே திரண்ட காயை ஒருசேரத்தின்று; வீ சுனைச் சிறுநீர் குடியினள் - வறந்த சுனையில் உள்ள மிகச் சிலவாகிய நீரைப்பருகி; கழிந்த குவளை உண்கண் என்மகள் - சென்றுவிட்ட நெய்தன் மலர்போன்ற மையுண்ட கண்ணையுடைய என் மகளை; ஓர் அன்ன செய் போழ் வெட்டிப் பெய்தல் ஆயம்மாலை - ஒருதன்மையாகிய சிவந்த பனங்குருத்தைக் கீண்டு பதனிடுமாறு போடுதலாய மாலைப்பொழுதில்; விரி நிலவில் பெயர்பு புறங் காண்டற்கு - விரிந்த நிலவிலே சென்று பின்னே போய்க் காணும்படியாக விட்ட இதற்கு; மா இருந் தாழி கவிப்ப என் கொள்ளாக் கூற்று - முன்னாலேயே என்னைப் பெரிய தாழியிலிட்டுக் கவிக்கும்படி என் உயிரைக் கொண்டுபோகாத கூற்றமானது; தா இன்று தாழி கவிப்பக் கழிக - தான் வலியழிந்து தன்னை அந்தத் தாழியிலிட்டுக் கவிக்கும்படி இறந்தொழியக் கடவதாக!; எ - று.
(வி - ம்.) பனங்குருத்தைக் கீண்டு பதனிடப் போடுகின்ற மாலையென்க. தன் செல்வச் சிறப்பு அறிவுறுத்துவாள் குழவிதாதெருவிலே துயில் மடியுமென்றாள். அவன் வறுமை கூறுவாள் காளையின் பொய்ம்மை கூறினாள். பின்னிருட் பொழுதிலே கொண்டு தலைக்கழிந்தமை குறிப்பின் உணர்த்துவாள் மாலைவிரி நிலவென்றாள். புறங்காண்டற்கு என்றது, இதனாலே தமர் பின்விரைந்து சென்றார் காணவும் பெறும் என்றாளுமாம். தமருடன் சென்றுழி அஞ்சி விடுத்துச் செல்லுமாதலின், இவனுறுந் தோல்வி காண்டல் இழிபென்பது கொண்டு அதனைக் காணுமாறு வைத்த கூற்றென்றவாறு.
இறைச்சி :- எருமைக் குழவி தாதிலே துயிலுமென்றது, அழைத்துச் சென்ற தலைமகன் இனிய தன்மார்பு துணையாகத் துயிற்று மென்று உள்ளம் மகிழ்வாளாவது.
மெய்ப்பாடு - உவகைக் கலுழ்ச்சி. பயன் - ஆற்றியிருத்தல்.
(பெரு - ரை.) 'பொய்தல் ஆயம்' என்றும் பாடம். இப் பாடத்திற்கு, என்மகளை - ஓரன்ன - ஒத்த ஆயம் அவளையின்றி வறிதே நிலவில் உலாவுதலைக் காண்டற் பொருட்டு எற்கொள்ளாக் கூற்று கழிக என்று பொருள் கொள்க.
(271)