(து - ம்.) என்பது, வெளிப்படை (உரை இரண்டற்கு மொக்கும்).
(இ - ம்.) இதற்கு, "களனும் பொழுதும் . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.
| கடலங் காக்கைச் செவ்வாய்ச் சேவல் |
| படிவ மகளிர் கொடிகொய்து அழித்த |
| பொம்மல் அடும்பின் வெண்மணல் ஒருசிறைக் |
| கடுஞ்சூல் வதிந்த காமர் பேடைக்கு |
5 | இருஞ்சேற்று அயிரை தேரிய தெண்கழிப் |
| பூவுடைக் குட்டந் துழவுந் துறைவன் |
| நல்கா மையின் நசைபழு தாகப் |
| பெருங்கை அற்றவென் சிறுமை அலர்வாய் |
| அம்பன் மூதூர் அலர்தந்து |
10 | நோயா கின்றது நோயினும் பெரிதே. |
(சொ - ள்.) கடல் காக்கைச் செவ்வாய்ச் சேவல் - கடலிலியங்கும் நீர்க்காக்கையிலே சிவந்த வாயையுடைய ஆண் காக்கையானது; படிவ மகளிர் கொடி கொய்து அழித்த பொம்மல் அடும்பின் வெள் மணல் ஒருசிறை - நோன்பினையுடைய மாதர்கள் வைகுதல்வேண்டி ஆண்டுப் படர்ந்துள்ள கொடிகளைக் கொய்தலால் அழிபட்ட நெருங்கிய அவ்வடும்பின் கொடியையுடைய வெளிய மணற்பரப்பின் ஒருபால்; கடுஞ் சூல் வதிந்த காமர்பேடைக்கு - நிரம்பிய சூலுடனே தங்கிய தன்னால் விரும்பப்படுகிற பேடைக்கு; இருஞ்சேற்று அயிரை தேரிய - கரிய சேற்றின்கண்ணவாகிய அயிரை மீனைத் தேர்ந்தெடுக்க வேண்டி; தெள் கழிப் பூ உடைக்குட்டம் துழவும் துறைவன் - தெளிந்த கழியிடத்துப் பூவுதிரப்பெற்ற ஆழமான இடத்தினைத் தன் மூக்காலும் காலாலும் துழாவா நிற்கும் துறையையுடைய கொண்கன், நல்காமையின் நசை பழுதுஆக - குறித்தபொழுது வந்து கூடித் தலையளி செய்யாமையால் யான் கொண்ட விருப்பம் வீணாகிவிட அதனாலே; கையற்ற என் பெருஞ் சிறுமை-செயலழிந்த என் பெரிய நோயானது; அலர்வாய் அம்பல் மூதூர் அலர்தந்து - பழிமொழி கூறுகின்ற அம்பலையுடைய பழைய நமது ஊராரால் அறியப்பட்டு; நோயினும் பெரிது நோய் ஆகின்றது - முன்பு நான் கொண்டிருந்த நோயினுங் காட்டில் மிக்க நோயுடையதாகாநின்றது; எ - று.
(வி - ம்.) தேரிய; செய்யிய வென்னும் வாய்பாட் டெச்சம். கடலம், அம்: சாரியை.
உள்ளுறை :- நீர்க்காக்கைச் சேவல் சூலொடு வதிந்த பெடைக்கு அயிரை மீனைத் தேடுமென்றது, என்னை மணஞ்செய்துகொண்டு மனையறம் படுத்து யான் இல்வயினிருக்குமாறு வைத்துத் "தாயத்தாற் செய்தது தேவரும் பிதிரரு மின்புறார்" ஆதலின் அவரை இன்புறுத்துமாறு வேற்று நாட்டுக்குச் சென்று பொருளீட்டிவந்து இல்லறம் நிகழ்த்தற்பாலனென்று அறிவுறுத்தியதாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.
(பெரு - ரை.) நோயாகின்று அது நோயினும் பெரிது எனக் கண்ணழித்து, அலர்தந்து நோயாகியது அது யான்படும் காமநோயினும் பெரிது என்று பொருள் கூறலுமாம். அலர்தந்து: ஒருசொல். அலர்ந்து என்றவாறு. இரண்டாவது துறைக்குப் பயன் வரைவு கடாதல் என்க.
(272)