(து - ம்.) என்பது, (வெளிப்படை) அங்ஙனஞ் சொல்லுகின்றவள் 'வெறியயர்தலாலே குன்ற நாடனை நினைக்குந்தோறும் அவன் செய்கையாலே தந்த வருத்தம் எனது நெஞ்சை நடுங்கச் செய்யா நின்றது; இஃதெப்படியாய் முடியுமோ என்று நொந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கும், "களனும் பொழுதும் . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.
| இஃதெவன் கொல்லோ தோழி மெய்பரந்து |
| எவ்வங் கூர்ந்த ஏமுறு துயரம் |
| வெம்மையின் தான்வருத் துறீஇ நம்வயின் |
| அறியாது அயர்ந்த அன்னைக்கு வெறியென |
5 | வேலன் உரைக்கும் என்ப ஆகலின் |
| வண்ணம் மிகுத்த அண்ணல் யானை |
| நீர்கொள் நெடுஞ்சுனை யமைந்துவார்ந் துறைந்தென் |
| கண்போல் நீலந் தண்கமழ் சிறக்குங் |
| குன்ற நாடனை உள்ளுதொறும் |
10 | நெஞ்சுநடுக் குறூஉமவன் பண்புதரு படரே. |
(சொ - ள்.) தோழி மெய் பரந்து எவ்வம் கூர்ந்த ஏம் உறு துயரம் - தோழீ! நின் உடம்பெங்கும் பரந்து துன்பமிக்கு மயங்கிய துயரத்தை நோக்கி; வெம்மையின் தான் வருத்து உறீஇ நம் வயின் அறியாது அயர்ந்த அன்னைக்கு - நம்பாலுள்ள விருப்பத்தாலே தானும் வருத்தமுற்று நம்மிடத்தில் நிகழ்ந்தது அறியாது முருகவேளுக்கு வெறியெடுத்த நம் அன்னையை நோக்கி; வெறி என வேலன் உரைக்கும் என்ப - இது முருகணங்கு என்று வேலன் கூறாநிற்கும் என்பர்; ஆகலின் வண்ணம் மிகுத்த அண்ணல் யானை நீர்கொள் நெடுஞ்சுனை அமைந்து - ஆதலின் நிறமிக்க பெரிய யானை நீர்முகந்து கொள்கின்ற நெடிய சுனையின் கண்ணே அமைந்து; வார்ந்து உறைந்து என் கண் போல் நீலம் - நீண்டுற்று என் கண்போல்கின்ற நீலமலர்; தண் கமழ்சிறக்கும் குன்றநாடனை உள்ளுதொறும் - தண்ணியவாய் மணமிகும் மலைநாடனை நினைக்குந்தோறும்; அவன் பண்பு தரு படர் நெஞ்சு நடுக்குறூஉம் - அவன் இயல்பாகத் தந்த கவலையானது எனது நெஞ்சை நடுங்கச் செய்யாநின்றது; இஃது எவன்கொல் - இஃது இனி எப்படியாகி முடியுமோ? எ - று.
(வி - ம்.) வார்தல் - நெடுகுதல். படர் - வருத்தமுமாம். கேட்ட தலைவன் வரைவொடு புகுமாறு கருதியதாதலின், இது வரைவுகடாயதாயிற்று.
அவன் தலையளி செய்ததெல்லாம் தனக்கு மிக்க துன்பமும் மயக்கந்தருதுயரமு மாகியதென்பாள் எவ்வங் கூர்ந்த ஏமுறு துயரமென்றாள். இனி வரைந்தன்றிக் களவினியலாதென் றறிவுறுத்துவாள் உள்ளுதொறும் படர் நடுக்குறுத்து மென்றாள்.
உள்ளுறை :- யானை தலைவனாகவும் சுனை தமது குடியாகவும் நீர் தலைவியாகவும் அவ் யானையுண்ணுதல் தலைவன் தலைவியை மணந்து நலன் நுகர்தலாகவும் நீல மலர்தல் இருமுது குரவரும் மகிழ்வதாகவுங் கொள்க. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.
(பெரு - ரை.) அயர்ந்த - வெறியாட்டயர்ந்த. வரைதற்கு வற்புறுத்துவாள் 'கண்போல் நீலம் தண்கமழ் சிறக்கும் குன்ற நாடன்' என அன்புறு தகுந இறைச்சியிற் சுட்டினாள்; என்னை?
| "அன்புறு தகுந இறைச்சியுட் சுட்டலும் |
| வன்புறை யாகும் வருந்திய பொழுதே" (தொல். பொருள். 37) |
என்பதோத்தாகலின் என்க.
(273)