திணை : நெய்தல்.

     துறை : இது, சிறைப்புறமாகத் தலைமகனது வரவுணர்ந்து வற்புறுப்ப, வன்புறை எதிர்மொழிந்தது.

     (து - ம்.) என்பது, வினைவயிற் பிரிந்த தலைமகன் மீண்டு ஒரு சிறைப்புறமாக வருதலையறிந்த தோழி தலைமகளை நோக்கி "அவன் இப்பொழுதே வந்துவிடுவன் ஆதலின் நீ வருந்தாதே யென்று" வலியுறுத்திக் கூறினாளுக்கு 'அவனை நினைந்து வருந்தேனாதலின், வெறுத்தேனுமல்லேன; என்னைக் கைவிட்டு வெறுத்து அகன்ற தலைவன் தன்னைப் பிறரிகழாது புகழ வேண்டி மீட்டும் பெறுவதாயினும் யான் உடன்படுவே'னென உள்ளுறையாலே தன்நிலைமையும் அவனறியும்படி கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "கொடுமை யொழுக்கந் தோழிக் குரியவை, வடுவறு சிறப்பிற் கற்பிற் றிரியாமைக், காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும், ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்" (தொல். கற். 6) என்பதன்கண் காய்தலின் பாற்படுத்துக.

    
செந்நெல் அரிநர் கூர்வாள் புண்ணுறக் 
    
காணார் முதலொடு போந்தெனப் பூவே 
    
படையொடுங் கதிரொடும் மயங்கிய படுக்கைத்  
    
தன்னுறு விழுமம் அறியா மென்மெலத் 
5
தெறுகதிர் இன்துயில் பசுவாய் திறக்கும் 
    
பேதை நெய்தல் பெரு நீர்ச் சேர்ப்பற்கு 
    
யானினைந்து இரங்கேன் ஆக நோயிகந்து 
    
அறனி லாளன் புகழஎன் 
    
பெறினும் வல்லேன்மன் தோழி யானே. 

     (சொ - ள்.) தோழி செந்நெல் அரிநர் கூர் வாள் புண் உறக் காணார் முதலொடு போந்தென - தோழீ! சிவந்த நெற்கதிரை யறுக்கும் மள்ளர் தம் கூரிய அரிவாளினாலே புண்படக் காணாராகக் கதிர்த்தூரொடும் போந்ததனாலே; பூ படையொடும் கதிரொடும் மயங்கிய படுக்கை - அம்மலர் அரிவாளொடும் கதிரொடும் கலந்தனவாகிய அரிக்கிடையிலே படுக்கையாகக் கிடந்து; தன் உறு விழுமம் அறியா - தான் உற்ற துன்பத்தை ஆராயாமல்; மென்மெலத் தெறு கதிர் இன் துயில் பசுவாய் திறக்கும் பேதை நெய்தல் பெரு நீர்ச் சேர்ப்பதற்கு - மெல்ல மெல்லக் கொடிய ஆதித்தனைக் காண்டலும் இனிய துயிலிடத்துப் பசிய வாயைத் திறவாநிற்கும் பேதைமையுற்ற நெய்தன்மிக்க பெரிய கடற்கரைத் தலைவனுக்காக; யான் நோய் இகந்து நினைந்து இரங்கேன் ஆக - யான் படுகின்ற துன்பத்தையும் கடந்து அவனை நினைந்து இரக்கம் உறுவேன் அல்லேன் ஆதலால், அவனை வெறுத்தேனுமல்லேன்; யான் அறன் இலாளன் புகழ என்பெறினும் வல்லேன் - யான் அவ்வறனிலாளன் தன்னை அயலார் புகழும்படி என்னை மீட்டும் பெறுவதாயினும் அதற்கும் இயைகின்றேன்; மன் - அங்ஙனம் வெறாது விடப்பட்டதனால் அதுவும் இல்லையாயிற்று; எ - று.

     (வி - ம்.) தஞ்சமென்றடைந்த தன்னைக் கைவிட்டமையின் அறனிலாளன் என்றாள்.

     உள்ளுறை :- மள்ளரால் அறுபட்ட நெய்தற்பூக் கதிரொடு கலந்து அரிக்கு இடையிலே வாடிக்கிடந்தும் தன் துன்பத்தை ஆராயாமல் கதிரை நோக்கினவுடன் மலருமென்றது, ஏதிலாட்டிய ரெடுத்த பழிச் சொல்லாலே தலையெடாதபடி படுக்கையாகக் கிடந்தும் யான் தலைவனைக் காணில் எந்நோயைக் காட்டாது முகமலர்ச்சியோடு அவற்கு உடன்படுவேனென்றதாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல். இவ்வுள்ளுறை "கடுங்கை வயலுழவர் காலைத் தடிய, மடங்கி யரியுண்ட நீலந் - தடஞ்சேர்ந்து, நீளரிமேற் கண்படுக்கு நீணீரவந்தியார், கோளரியே றிங்கிருந்த கோ" எனப் பிறநூலுள்ளும் வந்தமை காண்க.

     (பெரு - ரை.) நெல் அரிநர்தங் கூர்வாளால் நெய்தல் புண்ணுறக் காணாராக அது முதலொடு போந்ததாக அப்பூ தன் விழுமம் அறியாது வாய்திறக்கும் என இயைபு காண்க. கதிரவன் இனித் தன்னைக் காய்ந்து கொல்வான் என்பதுணராமல் அவன் வரவுகண்டு மலரும் என்பதற்கிரங்கிப் பேதை நெய்தல் என்றாள். பெருநீர்ச் சேர்ப்பன் என்றது இகழ்ச்சி. அருளில்லாதவன் என்பது கருத்து.

(275)