(து - ம்.) என்பது, பகற்குறி நீக்கத்துத் தலைவியைத் தோழியர் கூட்டத்து விடுத்துவந்து ஆங்குத் தன் ஊர்க்குச் செல்லுந் தலைவனைத் தோழி நெருங்கி "யாம் குறமகளிராகிய கொடிச்சியேம், எம்மூர் இம்மலையிடத்தது; ஆதலின், நீ இப்பொழுதே நின்னூர்க்குச் செல்லாது எம்மூர் வந்து நறவுண்டு குரவைகண்டு செல்வாயாக" வென்று விருந்தெதிர்கொள்கின்ற உலகியல் கூறுவாள் போன்று வரைவுபயப்பக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "வேளாண் பெருநெறி வேண்டிய விடத்தும்" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.
| கோடு துவையாக் கோள்வாய் நாயொடு |
| காடுதேர் நசைஇய வயமான் வேட்டு |
| வயவர் மகளிர் என்றி ஆயின் |
| குறவர் மகளிரேம் குன்றுகெழு கொடிச்சியேம் |
5 | சேணோன் இழைத்த நெடுங்கால் கழுதின் |
| கான மஞ்ஞை கட்சி சேக்கும் |
| கல்லகத் ததுஎம் ஊரே செல்லாது |
| சேந்தனை சென்மதி நீயே பெருமலை |
| வாங்கமை பழுனிய நறவுண்டு |
10 | வேங்கை முன்றிற் குரவையுங் கண்டே. |
(சொ - ள்.) கோடு துவையாக் கோள் வாய் நாயொடு காடு தேர் நசை இய வயமான் வேட்டு வயவர் மகளிர் என்றி ஆயின் - தலைவனே! கொம்பையூதி கௌவிக் கொல்லும் நாயோடு காட்டின் கண்ணே ஆராய்கின்ற விருப்பமுற்ற வலிய மானை வேட்டையாற் கொள்ளும் வேட்டுவ வீரரின் மகளிர் என எம்மைக் கூறுவீராயின்; குறவர் மகளிரேம் குன்றுகெழு கொடிச்சியேம் - வேட்டுவ மகளிரல்லேம் யாம் குறமகளிரேம் மலையிலிருக்கிற கொடிச்சியரேம்; சேணோன் இழைத்த நெடுங்கால் கழுதில் - தினை காவலன் கட்டிய நீண்டகாலையுடைய கட்டுப் பரணை; கான மஞ்ஞை கட்சி சேக்கும் - காட்டில் இருக்கின்ற மயில்கள் தாம் இருத்தற்குரிய பஞ்சரமாகக் கொண்டு அதன்கண்ணே தங்கா நிற்கும்; எம் ஊர் கல்லகத்தது - எம்மூர் இம் மலையினகத்ததாயிராநின்றது; நீ செல்லாது சேந்தனை பெருமலை வாங்கு அமை பழுனிய நறவு உண்டு - ஆதலால், நீ இப்பொழுது நின்னூர்க்குச் செல்லாது எம்மூரை யடைந்து பெரிய மலையின் கண்ணே தோன்றி வளைந்த மூங்கிலாலாக்கிய குழாயில் நிரப்பி முற்ற வைத்த கள்ளைப் பருகி; வேங்கை முன்றில் குரவையும் கண்டு செல் - வேங்கை மரத்தையுடைய முன்றிலிலே யாம் அயருங் குரவையையும் கண்டு மகிழ்ந்து பின் நாள் நின் ஊரை அடைவாயாக. எ - று.
(வி - ம்.) கோடு - கொம்பு என்னும் வாச்சியம். கோள் - கொலையுமாம். வயமான் நசைஇய வேட்டுவ ரெனினுமாம். சேணோன் - மரத்தின் மீதிருந்து இரவிலே தினைப்புனங் காப்பவன். கழுது - கட்டுப்பரண்.
ஒரோவொருகால் நீ வந்து பிரிதலை ஆற்றலளாதலின் எம்மூர்வந்து தங்கிச் செல்வாயாக வென்றாள். எமர் உலகியலறிவ ராதலின் நின்னை எதிர்கொண் டோம்புவரென்பது குறிப்பிப்பாள் நறவுண்டு குரவையுங் காண்பாய் என்றாள்.
உள்ளுறை :- கழுதினைத் தன்னுடையதாகக் கொண்டு மஞ்ஞை தங்கும் என்றது, எம்மாளிகையை நின்னுடையதாகக் கருதி நீ தங்குவாயாக வென்று முகமன் கூறியதாம். வரைந்தன்றி அங்ஙனம் இயலாமையின் வரைவு கடாயதென்பது. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.
(பெரு - ரை.) வேடு + வயவர்: வேட்டுவயவர் என்று புணர்ந்தன. வேடு : சாதிப்பெயர். வயமான் - வேடு என்பதற்கு அடைமொழி தேர்தலை நசைஇய வயவர் - என்றவாறு. குறிஞ்சி நிலமாக்களுள் நிலைமக்களும் தலைமக்களும் என இருவகையினர் உளர் ஆதலின், தலைவன் குறிஞ்சியின் நிலைமக்களின் மகளிர் என்னும் பொருள்பட துவையா நாயொடு காடுதேர் நசைஇய வேட்டுவ மகளிர் என்றானை மறுத்து யாங்கள் அனையரல்லேம் தலைமக்களினத்தேம் என்பாள் குறவருள்ளும் கொடிச்சியேம் என்றாள். கொடிச்சி - குறிஞ்சித் தலைமக்களிற் பெண்பாற் பெயர் என்க. எமர் வேட்டையாடச் செல்லுதல் ஒருதலையன் றென்பாள் யாங்கள் கொடிச்சியரேம் என்றாள். எனவே எம்மில்லத்தே தங்குதலும் அரிதே என இரவுக் குறியும் மறுத்தாளாயிற் றென்க. 'காடு தேர்ந்து அசைஇய' என்றும் பாடம். இதுவே சிறந்த பாடமுமாம்.
(276)