திணை : பாலை.

     துறை : இது, 'பட்டபின்றை வரையாது கிழவோன் நெட்டிடைக் கழிந்து பொருள்வயிற் பிரிய' ஆற்றாளாகிய தலைமகள் தும்பிக்குச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, அறத்தொடு நிற்றலின்பின் மணஞ்செய்துகொள்ளாது பொருள் ஈட்டுதற்குத் தலைவன் வேற்று நாட்டுச் சென்றதனால் தலைமகள் வருந்தி வண்டை நோக்கி, "வண்டே! கொடியை; நீ கூடிமுயங்குவது போல எம்மை முயங்குமாறு செய்திலை; நின்நெஞ்சுங் கரியதேயோ? இந்நோயால் இன்றே யான் மடிகின்றேன்; நீ நீடுவாழ்தி"யென அழிந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்" (தொல். கள. 21) என்னும் விதி கொள்க.

    
கொடியை வாழி தும்பி இந்நோய் 
    
படுகதில் அம்ம யான்நினக்கு உரைத்தென 
    
மெய்யே கருமை அன்றியுஞ் செவ்வன் 
    
அறிவுங் கரிதோ அறனிலோய் நினக்கே 
5
மனையுறக் காக்கும் மாண்பெருங் கிடக்கை  
    
நுண்முள் வேலித் தாதொடு பொதுளிய 
    
தாறுபடு பீரம் ஊதி வேறுபட 
    
நாற்றம் இன்மையிற் பசலை ஊதாய் 
    
சிறுகுறும் பறவைக் கோடி விரைவுடன் 
10
நெஞ்சுநெகிழ் செய்ததன் பயனோ அன்பிலர் 
    
வெம்மலை அருஞ்சுரம் இறந்தோர்க்கு 
    
என்நிலை உரையாய் சென்றவண் வரவே. 

     (சொ - ள்.) தும்பி அறன் இலோய் கொடியை மனை உறக் காக்கும் மாண் பெருங் கிடக்கை நுண்முள்வேலி - வண்டே! அறநெறியிலே செல்லாதோய் நீ மிக்க கொடியை நமது மாளிகையைப் பொருந்தக் காவலாயிருக்கும் மாட்சிமைப் படப் பெரியதாக அமைக்கப்பட்ட நுண்ணிய முட்களையுடைய வேலியிலே படர்ந்து; தாதொடு பொதுளிய தாறுபடு பீரம் ஊதி - தேனொடு தழைந்த குலைகட்டிய பீர்க்கம்பூவிலே சென்று தேனைப் பருகி; வேறுபட நாற்றம் இன்மையின் பசலை ஊதாய் - அதற்கு மாறாக நறுநாற்றமில்லாமையினாலே என் பசலையிடத்து முரன்றாயும் அல்லை; சிறு குறும் பறவைக்கு ஓடி விரைவுடன் நெஞ்சு நெகிழ் செய்ததன் பயனோ - சிறிய குறிய நின் பேடு விரும்புதலும் நீ விரைவாக வோடிச் சென்று அதன் மனம் நெகிழப் புணர்ந்து தலையளி செய்ததன் பயனாகவோ?; அன்பு இலர் வெம்மலை அரும் சுரம் இறந்தோர்க்குவர அவண் சென்று என் நிலை உரையாய் - என்னிடத்து அன்பிலராகிக் கொடிய மலையிலே செல்லுதற்கரிய சுரத்திற் சென்ற தலைவர்பால் ஆங்குச்சென்று அவர் விரைவில் வருமாறு ஈங்கு யானுற்ற நிலைமையை யுரைத்தாயுமில்லை; நினக்கு மெய்யே கருமை அன்றியும் அறிவும் செவ்வன் கரிதோ - நினக்கு நின்னுடம்பே கரியததாலன்றியும் அறிவும் (நன்கு) கரிய நிறமுடையதோ? அதனையேனுங் கூறிக்காண்; யான் நினக்கு உரைத்தென இந்நோய்ப் படுக - இங்ஙனம் கொடியையாகிய நின்னிடத்து என் துன்பத்தைக் கூறியதனாலேயே இந்நோயிலே பட்டு இப்பொழுதே இறப்பேனாக; வாழி - நீ நீண்டகாலம் வாழ்ந்திருப்பாயாக!; எ - று.

     (வி - ம்.) தில் : காலத்தின் மேலது. இது பசலை பாய்தலும், தூதுமுனிவு இன்மையுமாம்.

     கூடி இன்பந் துய்க்கின்றவர் தம்மைப்போலப் பிறருந் துய்க்கக் கருதுவர்; நீ அங்ஙன மின்றி உரைத்தாயு மில்லை யாதலால் அறிவுங்கரிதோ வென்றாள். கொடிய நெஞ்சுடையாரைக் கரிய நெஞ்சினரென்பது வழக்கு. "கரிமாலை நெஞ்சினான்" என்றார் சிந்தாமணியினும்; (நாமகள்- 265) கொடியோர்பால் ஒருகாரியங் கூறினால் அக்காரியம் மாறாக முடியுமென்பதற் கேற்ப நின்பாற் கூறியதன் காரணமாக அவர்வாரா தொழிதலின் நோய்மிக்கிறப்பேன் என்றதாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை.) யான் நினக்கு உரைத்தென இந்நோய் படுக என இயைக்க. அம்ம கேட்பித்தற்கண் வந்தது. தன்மெய் பீர்க்கப் பூப்போன்று பசலை பூத்தமை கூறுவாள் நாற்றம் இன்மையிற் பசலையூதாய் என்றாள். சிறுகுறும் பறவை என்றது பெடை வண்டினை.

(277)