(து - ம்.) என்பது, வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்தோன் குறித்த காலத்து வாராமையாலே தலைமகள் வருந்தினாளாக, அப்பொழுது அவன் விரைவில் வருவதனை அறிந்த தோழி தலைவியை நெருங்கி 'நம் காதலன் பலரறிய வருதலானே நின்னை வரைந்துகொள்ள வருகிறானென்பதை யறிந்தேன்' என்று கூறி உள்ளுறையால் நீ கவலையின்றி வாழ்வாயாக வெனவும் மகிழ்ந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "ஆங்கு அதன் தன்மையின் வன்புறை யுளப்பட" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.
| படுகாழ் நாறிய பராரைப் புன்னை |
| அடுமரல் மொக்குளின் அரும்புவாய் அவிழப் |
| பொன்னின் அன்ன தாதுபடு பன்மலர் |
| சூடுநர் தொடுத்த மிச்சில் கோடுதொறும் |
5 | நெய்கனி பசுங்காய் தூங்குந் துறைவனை |
| இனியறிந் திசினே கொண்கன் ஆகுதல் |
| கழிச்சேறு ஆடிய கணைக்கால் அத்திரி |
| குளம்பினுஞ் சேயிறா ஒடுங்கின |
| கோதையும் எல்லாம் ஊதைவெண் மணலே. |
(சொ - ள்.) அடு மரல் மொக்குளின் படு காழ் நாறிய பராரைப் புன்னை அரும்பு வாய் அவிழப் பொன்னின் அன்ன தாதுபடு பல்மலர் - அடுத்த மரலின் மொக்குகளைப்போலப் பொருந்திய வயிரம் விளங்கிய பருத்த அடியையுடைய புன்னையரும்புவாய் திறந்து மலராநிற்ப அங்ஙனம் மலர்ந்த பொன் போன்ற மகரந்தமிக்க பலவாகிய மலர்களில்; சூடுநர் தொடுத்த மிச்சில் - அணிந்து கொள்பவர் கொய்து தொடுத்தனபோக எஞ்சியன; கோடு தொறும் நெய்கனி பசுங்காய் தூங்கும் - கிளைகடோறும் நெய்மிக்க பசிய காயாகத் தூங்காநிற்கும்; துறைவனை - கடற்றுறையுடைய தலைவனை; கழிச் சேறு ஆடிய கணைக்கால் அத்திரி குளம்பினும் சே இறா ஒடுங்கின - கழிக்கரையிலுள்ள சேறுபட்ட திரண்ட காலையுடைய அவனது தேரிலே பூட்டிய கோவேறு கழுதையின் குளம்பினெங்கும் சிவந்த இறாமீன்கள் ஒடுங்கப்பட்டு அழிந்தன; கோதையும் எல்லாம் ஊதை வெண்மணல் - அவனது மாலையிலும் மற்றெவற்றினும் காற்றால் எறியப்படும் வெளிய மணல் ஒடுங்கின ; கொண்கன் ஆகுதல் இனி அறிந்திசின் - ஆதலின் நினக்கே கணவனாமாறு விரைவில் வந்தனன் போலுமென்று இப்பொழுதுதான் அறிந்துகொண்டேன்; எ - று.
(வி - ம்.) நெய்கனி காயென்றதனால் புன்னைக் காயிலிருந்து நெய்யெடுக்கப்படும் வழக்கு அக்காலத்து முளதெனவறிக. ஒடுங்கின வென்பதனை மணலொடுங் கூட்டுக.
பகற்பொழுதிலே பலரறிய அருங்கல முன்னிட்டு விழைவு மிகுதியால் விரைந்து வருதலின் இறாக் குளம்பிலொடுங்கின; கோதை முதலாயவற்றுள் மணலொடுங்கின வென்றாள்.
உள்ளுறை :- புன்னை மலர் கொய்தன போக எஞ்சியவை நெய்கனிந்த காயாகத் தூங்குமென்றது, நீ இதுகாறும் ஏதிலாட்டியரெடுத்த அலரால் வருந்தியது போக, இனிக் கனிந்த நெஞ்சினை யாகி மகிழ்வாய்கா ணென்றதாம். மெய்ப்பாடு - உவகை. பயன் - ஐயந்தீர்த்தல்.
(பெரு - ரை.) கணைக்கால் என்றது கோவேறு கழுதையின் காலை கழிச் சேற்றிலிறங்கியும் மணல் மெய்யெலாம் படியவும் விரைந்து வந்தமை தோன்றுதலின் அவன் வரைவொடு வந்துளான் என்றறிந்தேன் என்பாள் கொண்கன் ஆகுதல் இனி அறிந்தேன் என்றாள்.
(278)