திணை : பாலை.

     துறை : இது, மகட்போக்கிய தாய்சொல்லியது.

     (து - ம்.) என்பது, தலைவன் கொண்டுதலைக் கழிதலும் தோழியாலறிந்த செவிலி ஈன்ற தாய்க் குரைப்ப, அவள் அஃது அறநெறிதானென்று கொண்டனள் ஆயினும் தன்மகளின் மெல்லிய தன்மை கருதி இரங்குகின்றாள், 'ஐயோ! சிலம்புகழி நோன்பாகிய விழாவின் சிறப்பை யான் காணாது பிறர்கண்டு மகிழும்படி சென்றொழிந்த என் மகளுடைய அடிகள் சுரநெறியின்கண்ணே சென்று வருந்தி நின்றனவோ' வென்று கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "தன்னும் அவனும் அவளுஞ் சுட்டி . . . . . .போகிய திறத்து நற்றாய் புலம்பலும" (தொல். அகத். 36) என்பதன்கண் அமைத்துக் கொள்க.

    
வேம்பின் ஒண்பழம் முணைஇ இருப்பைத் 
    
தேம்பால் செற்ற தீம்பழன் நசைஇ 
    
1வைகுபனி உழந்த வாவல் சினைதொறும் 
    
நெய்தோய் திரியின் தண்சிதர் உறைப்ப 
5
நாட்சுரம் உழந்த வாட்கேழ் ஏற்றையொடு 
    
பொருத யானைப் புண் தாள் ஏய்ப்பப் 
    
பசிப்பிடி உதைத்த ஓமைச் செவ்வரை 
    
வெயில்காய் அமையத்து இமைக்கும் அத்தத்து 
    
அதருழந்து அசையின கொல்லோ ததரல்வாய்ச் 
10
சிலம்பு கழீஇய செல்வம் 
    
பிறருணக் கழிந்தஎன் ஆயிழை அடியே. 

     (சொ - ள்.) ததரல் வாய்ச் சிலம்பு கழீஇய செல்வம் பிறர் உணக்கழிந்த என் ஆய் இழை அடி - தலைவனைச் சார்ந்து மணமுடிக்கும் பொழுது காலிலணிந்திருந்த செறிந்த வாயினையுடைய சிலம்பினைக் கழற்றுதற்குச் செய்யும் விழாச்சிறப்பை யான் கண்டு மகிழாது பிறர்கண்டு மகிழும்படி சென்றொழிந்த அழகிய கலன் அணிந்த என் புதல்வியின் அடிகள்; வேம்பி்ன் ஒள் பழம் முணைஇ இருப்பைத் தேம்பால் செற்ற தீம்பழன் நசைஇ - வேம்பின் ஒள்ளிய பழத்தைத் தின்னுதல் வெறுத்து இருப்பையின் தேன்போலும் பால்வற்றிய இனிய பழத்தை விரும்பி; வைகு பனி உழந்த வாவல் சினைதொறும் நெய் தோய் திரியின் தண் சிதர் உறைப்ப - வைகிய பனியிலே உழந்த வௌவால் கிளைகள்தோறும் செல்லுதலால் அவற்றின்மேல் நெய் தோயந்த திரிசுடர் விழுதல் போலத் தண்ணிய பனித்துளிகள் மிகவிழ; நாள் சுரம் உழந்த வாள்கேழ் ஏற்றையொடு பொருத யானை - விடியற் காலையிலே சுரத்திற் சென்று வருந்திய வாள்போலும் நிறமுற்ற வரிபொருந்திய ஆண்புலியொடு போர் செய்த யானையின்; புண் தாள் ஏய்ப்பப் பசிப் பிடி உதைத்த ஓமை - புண்ணையுடைய கால்போலப் பொளிந்தெடுத்துத் தின்ன வேண்டிப் பசிமிக்க பிடியானை உதைத்து மேற்பட்டையைப் பெயர்த்த ஓமையின்; செவ் வரை - சிவந்த அடிமரம்; வெயில்காய் அமையத்து இமைக்கும் அத்தத்து அதர் உழந்து - ஞாயிறெழுந்து வெயில் வீசும்போது விளங்கித் தோன்றா நிற்கும் பாலையின் அருஞ்சுரநெறியிலே சென்று; அசையின் கொல் - வருந்துகின்றனவோ? ஓ - ஐயோ ! எ - று.

     (வி - ம்.) உறைத்தல் - மிகவிழல். உறைப்ப இமைக்கும் அத்தமெனக் கூட்டுக.

     புலியேற்றையோடு யானை பொருததனைக் கூறுவது போன்று நெறி ஏதமுடையதே யென்று இரங்கினாள். இதுகாறும் கூந்தல்வாரி நுசுப்பு இவர்ந்து ஓம்பியும் சிலம்புகழி நோன்பு யான் காணுமாறு நோற்றிலே னென்பாள் பிறருணக் கழிந்தனளென்று இரங்கினாளாயிற்று.

     இறைச்சி :- (1) வேம்பின் பழத்தை வெறுத்து இருப்பையின் பழத்தை விரும்பி வௌவால் வெய்ய பனி உறைப்ப இருக்குமென்றது, தந்தை செல்வத்தை வெறுத்துக் கேள்வனது செல்வத்தை விரும்பி இரவிலே சென்ற என் புதல்வி மாமி, நாத்தூணார் செறிந்திருப்ப எங்ஙன மிருக்குமோ என்றதாம்.

     (2) பிடியாலுதைபட்ட ஓமை ஞாயிறு தோன்றியவுடன் விளங்கித் தோன்றுமென்றது, மகளால் வெறுத்து நீக்கப்பட்ட யான் பொழுது விடிந்தவுடன் எல்லாராலுந் தூற்றப்பட்டு எங்குந் தெரியலாயினேன் என்றதாம்.

     மெய்ப்பாடு - உவகைக் கலுழ்ச்சி. பயன் - ஆற்றாமை நீங்குதல்.

     (பெரு - ரை.) ததர் - செறிவு. யானையின் புண்பட்ட கால்பட்டை உரிக்கப்பட்ட ஓமையின் அடிமரத்திற்குவமை, வாவல் சினைதோறும் சிதர் உறைப்பச் சுரம் உழந்த ஏற்றை எனினுமாம்.

     'பிறருழைக் கழிந்த' என்றும் பாடம்.

(279)
  
 (பாடம்) 1. 
வைகுபனி யுறந்த.