திணை : பாலை.

    துறை : (1) இது, பிரிவின்கண் ஆற்றாளாய தலைவிக்குத் தோழி சொல்லியது.

    (து - ம்.) என்பது, தலைவன் பிரிவுக்காலத்து வருந்திய தலைவியை ஆற்றுவிக்குந்தோழி முன்பு தலைப்பெய்தவழி இத்தகைய அன்புடையனாதலின் அவன் அன்னதொரு குணக்குறைபாடிலன்; இன்று கரந்து பிரிந்தது ஒரு செயலின் மேலதுபோலுமென அவள் ஆற்றும் வகையைக் கருதிக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு "என்பு நெகப் பிரிந்தோள் வழிச்சென்று கடைஇ அன்புதலையடுத்த வன்புறைக்கண்ணும்" (தொல்-கள- 23) என்னும் விதிகொள்க.

(2) குறைநயப்புமாம்

    என்பது, முன்பு தலைவனது குறையைத் தீர்ப்பதாக உடன்பட்ட தோழி தலைவியிடஞ் சென்று அவள் ஆராய்ந்தறியுமாறு குறிப்பாற் கூறாநிற்பது,

    (இ - ம்.) இதற்கு, "மறைந்தவள் அருகத் தன்னொடும் அவளொடும் முதன் மூன்றளைஇப் பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும்" (தொல்-கள-23) என்னும் விதிகொள்க.

    
என்கைக் கொண்டு தன்க ணொற்றியுந்  
    
தன்கைக் கொண்டென் நன்னுதல் நீவியும் 
    
அன்னை போல இனிய கூறியுங் 
    
கள்வர் போலக் கொடியன் மாதோ 
5
மணியென இழிதரும் அருவிப் பொன்னென 
    
வேங்கை தாய வோங்குமலை யடுக்கத்து 
    
ஆடுகழை நிவந்த பைங்கண் மூங்கில் 
    
ஒடுமழை கிழிக்குஞ் சென்னிக்  
    
கோடுயர் பிறங்கல் மலைகிழ வோனே, 

    (சொ - ள்.) மணி என இழிதரும் அருவிப் பொன் என வேங்கை தாஅய ஓங்குமலை அடுக்கத்து - நீலமணிபோலத் தெளிந்து இழியும் அருவியையுடைய, பொன்போல வேங்கை மலர் உதிர்ந்த உயர்ந்த மலைப் பக்கத்தில்; ஆடுகழை நிவந்த பைங்கண் மூங்கில் - அசைகின்ற தண்டுயர்ந்த பசிய கணுக்களையுடைய மூங்கில்; ஓடுமழை கிழிக்கும் சென்னி கோடு உயர்பிறங்கல் மலைகிழவோன் - விசும்பின்கண் ஓடுகின்ற முகிலைக் கீழும் உச்சியையுடைய கொடுமுடிகள் உயர்ந்த பிறங்குதலாகிய மலைக்கு உரிமையுடைய நம் தலைவன்; என் கை தொண்டு தன் கண் ஒற்றியும் தன் கை கொண்டு என் நல் நுதல் நீவியும் அன்னை போல இனிய கூறியும் - முன்பு தலைப்பெய்த நாளிலே என் கைகளைத் தானெடுத்துத் தன் கண்களில் ஒற்றியும் தன் கைகளால் எனது நல்ல நெற்றியைத் தைவந்தும், அன்னைபோல இனிய பலவற்றைக் கூறியும் தலையளி செய்து இஞ்ஞான்று; கள்வர்போலக் கொடியன் - கள்வரைப் போலக் கொடியனாயிரா நின்றான்; அவன் இயல்பு கொடியதாவது காண்; எ - று.

    (வி - ம்.)பிறர் பொருளைக் கைப்பற்றிக் கரத்தல் கள்வர்க்கியல் பாதலின், தலைவியினலம் வௌவிச் சென்றமைக்கு உவமை கூறினாள். தலைவி கூற்றாகக் கூறியவழி அன்னை முதலானோர் கேட்பின் ஐயுற்று ஏதமிழைப்பராதலின் அவள் கூற்றையொழித்துத் தோழி தன்கூற்றாகக் கூறப்பெறுவள்; தான் அவள் என்னும் வேற்றுமையிலளாதலின் அங்ஙனம் கூறுதற்கு "ஒன்றித் தோன்றுந் தோழி மேன" (தொ-பொ- 39) என்பதனால் தோழி கூற்றுந் தலைவி கூற்றாகும் எனக் கூறுவர் பேராசிரியர்; (மேற்படி-சூ- 509. உரை பார்க்க.) கூறியும் என்ற எச்சம் கொடியனென்பதன் ஆக்கச் சொல்லொடு முடிந்தது. மெய்ப்பாடு - அழுகை பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.

    (2) குறைநயப்புக்கு உரை :- [பாட்டுக் குறிஞ்சி] மலைகிழவோன் ஒற்றியும் நீவியும் கூறியும் கொடியன் என்றவழி கேட்ட தலைவி (தன்னுள்ளே) நம் காதலன் வரைவின்றி இளிவந் தொழுகுபவனெனக்கொண்டாள் கொலெனவும், ஒற்றியும் நீவியும் கூறியவெல்லாம் என்பொருட்டென்று கொள்ளாது தன்பொருட்டென்று கொண்டாள் கொலெனவும் கருதும்படி கூறினளேனும் அதனுள்ளே இவள் எனக்குச் சிறந்தாளென்பதை எம்பெருமானுணர்ந்துளனாதலின் என் வருத்தந் தீர்த்தியென இவளை நயந்தானெனவும், இவள் பிறழக்கொண்ட தன்மை அவன்கண் ணுளதாயின் இவளைக் குறிப்பறியாது ஒற்றியும் நீவியுஞ் செய்யானெனவும், எனது களவொழுக்கம் இவளுஞ் சிறிதறிதலானே இக்குறை முடித்தற்குண்டாய மனநெகிழ்ச்சியாலே அவன், ஒற்றி நீவியவழி உடன்பட்டு நின்றாளெனவும் அவளாராய்ச்சியாலே கொள்ளவைத்தமையிற் குறைநயப்பாயிற்று. கள்வர் போலக் கொடிய னென்றது சிறுமைபற்றிய நகையுவமம். அன்னைபோலவென்றது சிறப்புநிலைக்களமாகப் பிறந்த பண்புவமம். மெய்ப்பாடு - இளிவரலைச் சார்ந்த பெருமிதம். பயன் - குறைநயப்பு.

    (பெரு - ரை.) இச் செய்யுளின் 1-ஆவது துறைக்கு, இதனைத் தோழி தலைவனை இயற்பழித்துரைக்குமாற்றால் தலைவியின் நெஞ்சைத் தலைவனுடைய அருட்பண்பிற் றிருப்பி அவ்வழி அவள் ஆற்றியிருக்கும்படி செய்தது என்று கொள்க. என்னை? தலைவன் தன்னை மறந்து வாராது தங்கினான் என்று வருந்துவாட்கு அவன் வஞ்சன் போலும் என்று தோழி கூறிய கூற்றுச் செவி சுடுதலான் வஞ்சனோ என் கணவன் அவன் கேண்மை நிலத்தினும் நீரினும் வானினும் பெரிதென நினைவு கூர்ந்து அதனைப் பாராட்டுவாள் அல்லளோ? அவ்வழி அவள் நெஞ்சம் பிரிவுத் துயர் மறந்து அவன் பண்பிலே ஈடுபட்டுப் பெரிதும் ஆறுதல் பெறும் ஆதலான் என்க. இதன்கண் தோழி அவளெனத்தானென வேற்றுமையின்றி, நின்கை நின்னுதல் என்னாது, என் கை என்னுதல் என்றாள். என்றாளேனும் நின்கை நின்னுதல் என்பதே கருத்தாகும் என்க. தோழி இவ்வாறு வேற்றுமை இன்றித் தலைவி உறுப்பினைத் தன்னுறுப்பாகக் கூறும் வழக்கத்தை "தாயத்தினடையா" (தொல்-பொருளியல்- 27.) என்னும் வழுவமைதியானும் அறிக.

     இனி, இரண்டாவது துறைக்குத் தோழி, தன்னையே தலைவன் நயந்தான் போலவும் பின்னர் மறந்து மாறினான் போலவும் கூறியதற்கு

  
"அறக் கழிவுடையன பொருட்பயம் படவரின்  
  
 வழக்கென வழங்கலும் பழித்தன் றென்ப" 

என்னும் வழுவமைதியானே அமைத்துக் கொள்க.

    இனி இந்தச் செய்யுளை “அருமை செய்து அயர்ப்பினும்” (தொல்-கள- 20) என்னும் விதிபற்றித் தலைவன் பிரிவினை ஆற்றாத தலைவி தோழிக்குக் கூறியது எனக் கொள்ளினுமாம்.

(28)