(து - ம்.) என்பது, வெளிப்படை. (உரை இரண்டதற்கு மொக்கும்.)
(இ - ம்.) இதனை, "பிறவும் வகைபட வந்த கிளவி" (தொல். கற். 9) என்பதன்கண் அமைத்துக் கொள்க.
| மாசில் மரத்த பலியுண் காக்கை |
| வளிபொரு நெடுஞ்சினை தளியொடு தூங்கி |
| வெல்போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும் |
| நல்வகை மிகுபலிக் கொடையோடு உகுக்கும் |
5 | அடங்காச் சொன்றி அம்பல் யாணர் |
| விடக்குடைப் பெருஞ்சோறு உள்ளுவன இருப்ப |
| மழையமைந்து உற்ற மாலிருள் நடுநாள் |
| தாம்நம் உழைய ராகவும் நாம்நம் |
| பனிக்கடு மையின் நனிபெரிது அழுங்கித் |
10 | துஞ்சாம் ஆகலும் அறிவோர் |
| அன்பிலர் தோழிநங் காத லோரே. |
(சொ - ள்.) தோழி நம் காதலோர் - தோழீ! நம் காதலர்; மாசு இல் மரத்த பலி உண் காக்கை - மாசற்ற மரத்திலுள்ளனவாகிய மக்களிடுபலியை உண்ணுங் காக்கை; வளி பொரு நெடுஞ்சினை தளியொடு தூங்கி - காற்று மோதுகின்ற நெடிய கிளையில் தன்மேல் விழுகின்ற மழைத்துளியுடனே அசைந்து கொண்டு; வேல் போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும் - வெல்லுகின்ற போரையுடைய சோழரது 'கழாஅர்' என்னும் பதியிலே கொள்ளப்படுகின்ற; நல் வகை மிகு பலிக் கொடையோடு உகுக்கும் அடங்காச் சொன்றி - நல்ல பலவகையாக மிகுந்த பலிக்கொடையொடு போகடப்படுகின்ற சொல்லிலடங்காத சோற்றுத் திரளுடனே; அம்பல் யாணர் விடக்கு உடைப் பெருஞ்சோறு உள்ளுவன இருப்ப - அழகிய பலவாகிய புதிய ஊனொடு கலந்து இடப்படுகின்ற பெரிய சோற்றைத் தின்னக் கருதியனவாயிருக்குமாறு; மழை அமைந்து உற்ற மால் இருள் நடுநாள் - மழைபொருந்திப் பெய்தலையுற்ற மயக்கத்தையுடைய இருளின் நடுயாமத்தில்; தாம் நம் உழையர் ஆகவும் - அவர்தாம் நம்மிடத்து முயங்கியிருப்பாராகவும்; நாம் நம் பனிக் கடுமையின் நனிபெரிதும் அழுங்கி - நாம் நமக்குண்டாகிய குளிரின் கடுமையால் மிகப்பெரிதும் வருத்தமுற்று; துஞ்சாம் ஆகலும் அறிவோர் - தூங்காதிருந்தனமாதலையும் அறிந்தவர் இப்பொழுது நம்மைக் கைவிட்டு அகன்றனர் கண்டாய்; அன்பு இலர் - ஆதலின் அவர் நம்மீது சிறிதும் அன்பே இல்லாதவர் அல்லரோ? எ - று.
(வி - ம்.) சொன்றி - சோற்றுத்திரள்.
இறைச்சி :- பலியுண் காக்கை மழையிலே நனைந்து வருந்தியும் விடக்குடைச் சோற்றைக் கருதியிருக்கு மென்றது, அவர் தலையளி செய்தலால் இன்புற்ற யாம் இப்பொழுது பனியாலுங் குளிராலும் வருந்தியும் இன்னும் ஒருகால் அவர் வந்து கூடுவரோ வென்னும் ஆசையால் உயிர் துறவேமாய் இராநின்றே மென்றதாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.
(பெரு - ரை.) காக்கை மழை பெய்தலாலே உணவு பெறாவாய் நெடுஞ்சினையில் தாம்பண்டுண்ட சோழர் இடுகின்ற பெருஞ் சோற்றை உள்ளிப் பசித்திருப்ப என்பது கருத்து. பெருஞ் சோறாவது:- 'வேந்தன் போர் தலைக் கொண்ட பிற்றைஞான்று போர் குறித்த படையாளரும் தானும் உடனுண்பான் போல்வதொரு முகமன் செய்தற்குப் பிண்டித்து வைத்த உண்டியை (மறவர்க்கு)க் கொடுத்தல்', என வரும் (ஆசிரியர் நச்சினார்க்கினியர்) உரையானும் 'பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலையும்' (தொல். புறத். 8) என்னும் நூற்பாவானும் உணர்க. அப்பெருஞ் சோறு வழங்குங்கால் முதலில் தெய்வங்கட்கும் காக்கைக்கும் பலியிட்டு வழங்குதலான் காக்கை அதனைத் தின்று பின்னர் உள்ளியிருக்கும் என்க. "நெய்த்தோர்த் தூஉய நிறைமகிழ் இரும்பலி . . . . .கருங்கட் காக்கையொடு பருந்து இருந்து ஆர' (30) எனவரும் பதிற்றுப்பத்தும் நினைக.
(281)