(து - ம்.) என்பது, பொருள்வயிற்சென்ற தலைமகன் தலைவியை நினைந்து ஆற்றான் ஆகி 'என் நெஞ்சமானது தலைவிபாற் செல்லுவோமென்னாநின்றது, என் அறிவானது பொருள்முடித்துப் போவோமாதலின், அதற்குள் விரையாதே என்கின்றது. இவ்விரண்டும் பகை கொண்டதனால் இடையிலுள்ள என் உடம்பு அழியவேண்டுவதுதான் போலும்' என இடைச்சுரத்து அழுங்கிக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "வேற்றுநாட்டு அகல்வயின் விழுமத் தானும்" (தொல். கற். 5) என்னும் விதி கொள்க.
| புறந்தாழ்பு இருண்ட கூந்தற் போதின் |
| 1 நிறம்பெறும் ஈரிதழ் பொலிந்த உண்கண் |
| உள்ளம் பிணிக்கொண் டோள்வயின் நெஞ்சம் |
| செல்லல் தீர்க்கஞ் செல்வாம் என்னுஞ் |
5 | செய்வினை முடியாது எவ்வஞ் செய்தல் |
| எய்யா மையோடு இளிவுதலைத் தருமென |
| உறுதி் தூக்கத் தூங்கி அறிவே |
| சிறிதுநனி விரையல் என்னும் ஆயிடை |
| ஒளிறேந்து மருப்பிற் களிறுமாறு பற்றிய |
10 | தேய்புரிப் பழங்கயிறு போல |
| வீவது கொல்என் வருந்திய வுடம்பே. |
(சொ - ள்.) நெஞ்சம் புறம் தாழ்பு இருண்ட கூந்தல் போதின் நிறம் பெறும் ஈர் இதழ் பொலிந்த உண்கண் - என் நெஞ்சமானது புறத்தே தாழ்ந்து இருண்ட கூந்தலையும் நெய்தல் மலர் போன்ற நிறம் விளங்கிய ஈரிய இமைபொருந்திய மையுண்ட கண்ணையும் உடைய; உள்ளம் பிணிக்கொண்டோள் வயின் செல்வாம் செல்லல் தீர்க்கம் என்னும் - என் உள்ளத்தைப் பிணித்துப் பற்றிக்கொண்டவளிடத்து யாம் செல்வோம், சென்று அவளுடைய இன்னாமையைத் தீர்ப்போம் என்று கூறாநிற்கும்; அறிவு செய்வினை முடியாது எவ்வம் செய்தல் எய்யாமையோடு இளிவு தலைத்தரும் என - அப்பொழுது என் அறிவானது நாம் எடுத்த காரியத்தை முடிவுபெறப் போக்காமல் இடையில் இகழ்ந்து விட்டு விடுதலானது அறியாமையுடனே இகழ்ச்சியையும் கொடாநிற்கும் என; உறுதி தூக்கத் தூங்கி சிறிது நனி விரையல் என்னும் - உறுதிப்பாட்டை ஆராய்கையாலே 'ஏ நெஞ்சமே! நீ நிலையிலே பொருந்தி நின்று சில பொழுதளவும் மிக விரையாதே கொள்' என்று கூறாநிற்கும்; ஆயிடைவருந்திய என் உடம்பு - அவ்விரண்டும் மாறுபடுதல் கொண்டமையின் அவற்றிடை நின்று வருந்துகின்ற என் உடம்பானது; ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய தேய்புரிப் பழங்கயிறு போல - விளங்கிய தலையிலே தாங்கிய கொம்பினையுடைய களிற்றியானை ஒன்றோடோன்று மாறாகப் பற்றி யீர்த்த தேய்ந்த புரியை உடைய பழைய கயிறு இற்றொழிவது போல; வீவது கொல் - அழிய வேண்டுவது தானோ? இஃதொரு கொடுமை யிருந்தவாறு நன்று!; எ - று.
(வி - ம்.) ஆயிடை வருந்திய உடம்பெனக் கூட்டுக. எய்த்தல் - அறிதல்; எய்யாமை - அறியாமை. செல்லல்தீர்க்கம் செல்வாமென்றது, காதல் கைம்மிகல்.
"உள்ளம் அவளாலே பிணிப்புண்டமையின் அது மீண்டும் அவள் பால் ஏகக் கருதியதாயிற்று; அறிவு பிணிப்புறாமையின் ஆராய்ச்சியின் மேலதாய் விரையலென்றது", என இதனானே மகளிர்பால் மயங்கினார்க்கு ஆராய்ச்சி தோன்றாமையும் மயங்காதார்க்கு ஆராய்ச்சி மேம்படத் தோன்றுவதுங் கூறினான். மெய்ப்பாடு - பிறன்கண் தோன்றிய வருத்தம் பற்றிய இளிவரல். பயன் - இடைச்சுரத்தழுங்கல்.
(பெரு - ரை.) 'செல்லல் தீர்கம்' என்றும் பாடம். இதற்கு யாமுற்ற துன்பம் தீர்தற்பொருட்டு என்க. 'உறுதி தூக்காத் தூங்கி' என்றும் பாடம்; இதற்கு "அறிவு உறுதிப்பொருளை ஆராய்ந்து தெளிந்து அத் தெளிவிற்கிணங்க அதன்கட்டங்கி நின்று, என்க" "செய்வினைமுடியாது எவ்வஞ்செய்தல் எய்யாமையோடு இளிவுதலைத் தரும்" என்னும் அறிவுரையை நெஞ்சத்தே ஆழப்பதித்திக் கொள்க. "பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து, ஆள்வினை யின்மை பழி" எனவரும் திருக்குறளும் 618 ஈண்டு நினைக. ஓளிறேந்து மருப்பின் என்பது வினைத்தொகையடுக்கு.
(284)
(பாடம்) 1. | நிறங்கிளர் நிறையிதழ். |