(து - ம்.) என்பது, வணிகர் தலைமகன் பொருள்வயிற் பிரிதலால் வருந்திய தலைவியைத் தோழி நெருங்கி அவர் பிரிதலால் இறந்துபடுவேனென்று வருந்தாதேகொள்; நட்பாளர்க்கு ஆக்கமும் நின் தோளுக்கு அணியும் கொண்டுவரவேண்டியன்றோ அவர் சென்றதென வலியுறுத்தி ஆற்றுமாறு கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும் பொருள்" (தொல். கற். 9) என்னும் நூற்பாவின்கண் 'பிறவும் வகைபட வந்த கிளவி' என்பதனால் அமைத்துக்கொள்க.
| ஊசல் ஒண்குழை உடைவியத்து அன்ன |
| அத்தக் குமிழின் ஆயிதழ் அலரி |
| கல்லென வரிக்கும் புல்லென் குன்றம் |
| சென்றோர் மன்ற செலீஇயரென் உயிரெனப் |
5 | புனையிழை நெகிழ விம்மி நொந்துநொந்து |
| இனைதல் ஆன்றிசின் ஆயிழை நினையின் |
| நட்டோ ராக்கம் வேண்டியும் ஒட்டிய |
| நின்தோள் அணிபெற வரற்கும் |
| அன்றோ தோழியவர் சென்ற திறமே. |
(சொ - ள்.) ஆய் இழை தோழி உடைவியத்து ஒண்குழை ஊசல் அன்ன அத்தக் குமிழின் ஆய் இதழ் அலரி கல் என வரிக்கும் - ஆராய்ந்தணிந்த இழையையுடையாய்! தோழீ, உடைமரங்கள் மிக்க நெறியின்கண்ணே மகளிரின் ஒள்ளிய குண்டலத்திற்கொளுவிய ஊசல் போன்ற மலை நெறியிலுள்ள குமிழ மரத்தின் அழகிய இதழையுடைய மலர் கல்லென்னும் ஒலியோடு கோலஞ்செய்தாற்போல உதிராநிற்கும்; புல் என்னும் குன்றம் சென்றோர் மன்ற என் உயிர் செலீஇயர் என - பொலிவழிந்த குன்றத்து எங்காதலர் சென்றனர் ஆதலால் திண்ணமாக இனி என்னுயிர் சென்றொழிவதாக என்று; புனை இழை நெகிழ விம்மி நொந்து நொந்து இனைதல் ஆன்றிசின் - நீ அணிந்த கலன்கள் கழன்று விழும்படி விம்மியழுது மிகநொந்து வருந்துகின்றதனைச் சிறிது பொறுப்பாயாக!; நினையின் நட்டோர் ஆக்கம் வேண்டியும் ஒட்டிய நின்தோள் அணிபெற வரற்கும் அன்றோ - கருதுங்காலைத் தம்மை நட்புக் கொண்டவர் தாம் செல்வமடைய வேண்டியதற்காகவும் அடைக்கலமாகப் புகுந்த நின்னுடைய தோள்கள் நல்ல கலன்களை அணியப் பெறுவதற்காகவும் அன்றோ; அவர் சென்ற திறம் - அவர் சென்ற தன்மையாகும்; எ - று.
(வி - ம்.) உடை - உடைமரம். வியம் - வழி. உடைவியத்துக் கற்பாறையிலே குழை ஊசலன்ன அலரி கோலஞ் செய்யுமென மாறிக் கூட்டுக. ஊசல் போறலின் ஊசலென்றார். இக்காலத்துச் சிமிக்கியெனவுங் குடைக்கடுக்கன் எனவுங் கூறுப: குமிழம்பூ அங்ஙனமேயிருப்பதுகண்டு தெளிக. பெறுவரல்: ஒருசொல். அணிபெறுதற்கெனவே தலைவன் வணிகனானமை தெளிக.
கல்லறை குமிழமலர் வரிக்குமென்றது, சென்றோர் மீண்டு நின்மாட்டு அருங்கலம் பலகொணர்ந்து அலங்கரிப்பரென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைமகளை ஆற்றுவித்தல்.
(பெரு - ரை.)"ஊசல் ஒண் குழை உடை வாய்த்தன்ன" என்றும் பாடம்: இதற்கு ஊசலாடுகின்ற ஒள்ளிய குழையின் உடைந்த சிதர்கள் பொருந்தினாற்போன்று குமிழின் அலரி கல் அறை வரிக்கும் என்று இயைத்துக் கொள்க. உடை - உடைந்த சிதர்கள். ஊசல் என்பது முதலாக என்னுயிர் ஈறாக என்னுந் துணையும் தோழி தலைவியின் கூற்றைக்கொண்டு கூறியபடியாம்.
(286)