திணை : பாலை.

    துறை : இது, மகட்போக்கிய தாய் சொல்லியது

    (து - ம்.) என்பது, தலைமகளைத் தலைமகன் கொண்டுதலைக்கழிந்தமை கேட்ட செவிலி புலம்பிப் பின்பு நற்றாய்க்குக் கூற அவ்வீன்றதாய் அஃது அறத்தாறெனக் கொண்டாளாயினும் பண்டு என்னைச் சிறிது பொழுது பிரியினும் நொந்து புலக்குநள் எவ்வாறு அஞ்சாது பாலைநிலத்திற் செல்லுவள்கொலென மகளது அச்சத்தன்மை முதலாயவற்றுக் கச்சமுற்றிரங்கிக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, “தன்னு மவனு மவளுஞ் சுட்டி” (தொல்-அகத்- 39.) என்னும் நூற்பாவின்கண் "அச்சம்" பற்றி நற்றாய் கூறியதென அமைத்துக் கொள்க. அச்சம் இருவகைத்து : தலைவி தான் செல்லும் பாலையின்கண் விலங்கும் புள்ளும் ஆறலைப்போரும் முதலிய கண்டு அஞ்சும் அச்சமும், தந்தை தன்னையர்பின் சென்றவர் இஃதறமென்னாது தீங்கு செய்கின்றாரோ என்று அஞ்சும் அச்சமும் என்பனவாம். இவற்றுள் இது முன்னது,

    
நின்ற வேனி லுலந்த காந்தள்  
    
அழலவிர் நீளிடை நிழலிடம் பெறாஅது  
    
ஈன்றுகான் மடிந்த பிணவுப்பசி கூர்ந்தென 
    
மான்ற மாலை வழங்குநர்ச் செகீஇய 
5
புலிபார்த் துறையும் புல்லதர்ச் சிறுநெறி 
    
யாங்குவல் லுநள்கொல் தானே யான்றன் 
    
வனைந்தேந் திளமுலை நோவ கொல்லென 
    
நினைந்துகைந் நெகிழ்ந்த வனைத்தற்குத் தான்றன் 
    
பேரமர் மழைக்க ணீரிய கலுழ 
10
வெய்ய வுயிர்க்குஞ் சாயன் 
    
மையீ ரோதிப் பெருமடத் தகையே. 

    (சொ - ள்.) தன் வனைந்து ஏந்து இளமுலை நோவகொல் என - அவளுடைய தொய்யில் வனைந்து பருத்த இளைய கொங்கைகள் நோவனவோ என்று; யான் நினைந்து கை நெகிழ்ந்த அனைத்தற்கு - யான் நினைந்து அணைத்திருந்த கையை நெகிழ்த்த அதனைப் பொறாளாய்; தான் தன் பேர் அமர் மழைக்கண் நீரிய கலுழ வெய்ய உயிர்க்கும் - தான் தன்னுடைய பெரிய அமர்த்த குளிர்ச்சியையுடைய கண்கள் நீர் வடிவனவாய்க் கலுழ வெம்மையாக உயிர்க்கின்ற; சாயல் மை ஈர் ஓதி பெருமடம் தகை - மென்மையையும் கரிய ஈரிய கூந்தலையும் பெரிய மடப்பத்தையும் உடைய தகுதிப்பாடுடைய என் புதல்வி; வேனில் நின்ற உலந்த காந்தள் அழல் அவிர் நீள் இடை-ஏனைய பருவம் எய்தாமல் வேனிற் பருவமொன்றுமே நிலை பெற்று நின்ற காய்ந்து வாடிய காந்தளையுடைய அழல் வீசுகின்ற நீண்ட கடத்திலே; நிழல் இடம் பெறாது ஈன்று கான் மடிந்த பிணவு - நிற்குமாறு நிழலிடமும் பெறாது குட்டிகளையீன்று காட்டில் காவல் செய்திருந்த பெண்புலி; பசி கூர்ந்தெனமான்ற மாலை வழங்குநர்ச் செகீஇய புலி பார்த்து உறையும் - மிகவும் பசியுடையதென்று அதன் பசியைப் போக்கக் கருதி மயங்கிய மாலைப் பொழுதில் நெறியிற் செல்லுபவரைக் கொல்லும் பொருட்டு ஆண்புலி அந்நெறியை நோக்கியிருக்கும்; புல் அதர்ச் சிறுநெறி - புல்லிய அதராகிய சிறியநெறியில்; யாங்கு வல்லுநள் - யாங்ஙனம் நடக்க வல்லுநளோ? எ - று.

    (வி - ம்.) மான்றல் - மயங்குதல். செகிஇய - கொல்லவேண்டி. மடத்தகை : அன்மொழித்தொகை. மடத்தகை நெறி யாங்கு வல்லுநளெனக் கூட்டுக.

    கைநெகிழ்த்தற்குக் கலுழ்தல் - பிரிதற்கு அழுதல். சிறிது பிரியினுங் கலுழ்பவள் புலிபார்த்துறையுங் கானிற் செல்வதெங்ஙனம் என அவளது அச்சத் தன்மைக்கிரங்கியதாம்.

    புல்லதர்ச் சிறுநெறி - பரலும் முள்ளும் பயின்ற சிறிய வழி. இதில் யாங்ஙனம் நடக்கவல்லுநளெனத் தன்மகண் மென்மைத் தன்மைக்கிரங்கியதாம்.

    இறைச்சிகள் :- (1) பிணவின்பசியைப் போக்கப் புலி உணவு தேடி நெறியிற் பார்க்குங்கானமென்றது தலைவியின் அயர்ச்சியைப் போக்க வேண்டித் தலைமகன் மாலைப்பொழுதிலே தங்குமிடந் தேடி ஆங்கு இருவருந் தங்குவரென ஆற்றுவாளென்றதாம்.

    இறைச்சிகள் :- (2) ஈன்று கான்மடிந்த பிணவென்றது தலைமகள் இனி மக்களொடு மகிழ்ந்து மனையறங்காக்குமென்றாற்றுவா ளென்றவாறு. மெய்ப்பாடு உவகைக்கலுழ்ச்சி. பயன் - ஆற்றாமை நீங்குதல்.

    (பெரு - ரை.) இவ்வுரையாசிரியர் மழைக்கணீரிய, என்பதனை மழைக்கண் நீரிய என்று கண்ணழித்துக் கொண்டனர். மழைக்கண் ஈரிய கலுழ எனக் கண்ணழித்துக் கொண்டு ஈரமுடையவாய்க் கலுழ என்னலே அமையும் என்க. என்னை? நீரிய எனல் வழக்கன்மையான் என்க.

(29)