திணை : நெய்தல்.

    துறை : இது, வாயிலாகப் புக்க பாணற்குத் தோழி தலைமகளது குறிப்பறிந்து நெருங்கிச் சொல்லியது.

    (து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்த தலைமகன் விடுப்ப வந்த பாணனைத் தோழி நோக்கித் 'தலைவன்பால் இறைமகள் வேட்கையுடையாளென்னுங் குறிப்பு அறிந்தனளாதலின், அதற்கேற்கும்படி கூறுவாளாகிப்' பாணனே, இவள் தான் நலமிழந்து வருந்துவதனை நீ கண்ணாலே கண்டவாறு துறைவன் உள்ளங்கொள்ள மொழிந்தாயல்லையே. இது தகுதியோவென நொந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "பாணர் . . . . பேணிச் சொல்லிய குறைவினை எதிரும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.

    
நீர்பெயர்ந்து மாறிய செறிசேற்று அள்ளல் 
    
நெய்த்தலைக் கொழுமீன் அருந்த இனக்குருகு 
    
குப்பை வெண்மணல் ஏறி அரைசர் 
    
ஒண்படைத் தொகுதியின் இலங்கித் தோன்றும் 
5
தண்பெரும் பௌவநீர்த் துறைவற்கு நீயுங் 
    
கண்டாங்கு உரையாய் குணமோ பாண  
    
மாயிரு முள்ளூர் மன்னன் மாவூர்ந்து 
    
எல்லித் தரீஇய இன நிரைப் 
    
பல்லான் கிழவரின் அழிந்தவிவள் நலனே. 

    (சொ - ள்.) பாண மா இரு முள்ளூர் மன்னன் மா ஊர்ந்து - பாணனே! மிக்க பெரிய முள்ளூர் மன்னவனாகிய மலையமான் திருமுடிக்காரி் பரியேறிச் சென்று; எல்லித் தரீஇய இனநிரைப் பல்லான் கிழவரின் - இராப் பொழுதில் அடித்துக் கொண்டு வரப்பட்ட கூட்டமாகிய பலவாய பசுவினிரைக்குரியவர் அவனோடெதிர்நின்று போர்முனையில் அழிந்தாற்போல; அழிந்த இவள் நலம் - அழிந்து போகிய இவளது நலத்தை; நீ கண்டாங்கு - நீ கண் கூடாகக் கண்டபடி; நீர் பெயர்ந்து மாறிய செறி அள்ளல் சேற்று - நீர் தன்னிலையிலிருந்து ஓடி வற்றிய அள்ளற் சேற்றின்கணுள்ள; நெய்த்தலைக் கொழுமீன் அருந்த இனக்குருகு - நிணமிக்க தலையையுடைய கொழுத்த மீனை அருந்த வேண்டி நாரையினம்; குப்பை வெள்மணல் ஏறி - குவிந்த வெளிய மணல்மேட்டில் ஏறியிருந்து; அரைசர் ஒள் படைத்தொகுதியின் இலங்கித் தோன்றும் - அரசரது ஒள்ளிய காலாட்படையின் கூட்டம்போல விளங்கித் தோன்றாநிற்கும்; தண்பெரும் பௌவம் நீர்த் துறைவற்கு - தண்ணிய பெரிய கடனீர்த்துறையை உடைய காதலனுக்கு; உரையாய் குணமோ - உரைத்தாய் இல்லையே! அங்ஙனம் கூறாதது நினக்கு இயல்பாகுமோ? கூறியிருந்தால் முன்னரே அவன்வந்து கூடித் தலையளி செய்திருப்பன்; நீ உள்ளவாறு கூறாமையின் அவனும் வந்திலன்; இவளது நலனும் அழிந்ததுகாண்!; எ - று.

    (வி - ம்.) காலாட்படை சென்னியில் வெள்ளாடை சூடிச்செல்லுதல் அக்கால வழக்காதலின், வெளிய நாரையிருத்தற்கு உவமித்தனர் போலும். நிணத்தை உருக்க நெய்யாமாதலின் நெய்த்தலை யென்றதாம்.

    உள்ளுறை :- மீனருந்த வேண்டிக் கூட்டமாகக் குருகுகளிருத்தல் போல இறைமகன்பால் கிடைக்கப் பெறுவனவற்றைத் தெட்டிக்கொள்ளுதற்கு விறலி முதலானவரொடு கூட்டமாக விருக்கின்றீர்; குருகுகள் படைபோன் றிருப்பினும் படையாகாதன்றே; அங்ஙனம் நீயிர் வாயில்கள் ஆகுந் தண்மையீர் போலிருந்தும் அது செய்யும் வன்மையுடையீரல்லீர் என்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவனைத் தலைவியொடு கூட்டுவித்தல்.

    (பெரு - ரை.) கொழுமீன் அருந்த இனக்குருகு என்புழி அருந்த என்னும் எச்சம் ஆர்ந்த என்னுஞ் செய்த வென்னும் வாய்பாட்டுப் பெயரெச்சத்தின் குறுக்கல் விகாரம்; செயவென்னும் வாய்பாட்டு வினையெச்சம் அன்று. எனவே அதற்குக் கொழுத்த மீனைத் தின்ற நாரையினம் என்று பொருள்கோடலே நேரிதாம். இதனை, "அந்நாற் சொல்லும் . . . . நாட்டல் வலிய என்மனார் புலவர்" என வரும் (தொல். சொல். எச்சவியல் - 7) நூற்பாவானும் அதன் உரையானும் உணர்க. எனவே உள்ளுறைக்கும் மீனைத்தின்ற நாரை மணற்குன்றேறி இருத்தல் போன்று நின் தலைவனும் பரத்தையரை நுகர்ந்து நல்லோன் போன்று ஈண்டு வருவானாயினன் என்பது கருத்தாக்குக. இது மறுப்பாள் போன்று வாயில் நேர்ந்தபடியாம். 'கண்டாங்கு உரையாய் கொண்மோ' என்றும் பாடம்.

(291)