(து - ம்.) என்பது, களவொழுக்கத்து இரவுக்குறி வருந் தலைவனைத் தோழி நெருங்கி 'ஐயனே, கரைகளில் யானை பொருதலால் இடிந்து பொன் முதலியன மின்னாநிற்கும்; கான்யாற்றின் கண்ணே முதலை இயங்காநிற்கும்; இத்தகைய நெறியின் ஏதம் நினையாது இராப்பொழுதில் நீ வருதலாலே தலைவி உயிர்வாழாள் கா'ணென இரவுக்குறி மறுத்து வரைவுகடாவா நிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்பதனாற் கொள்க.
| நெடுங்கண் ஆரத்து அலங்குசினை வலந்த |
| பசுங்கேழ் இலைய நறுங்கொடித் தமாலந் |
| தீந்தேன் கொள்பவர் வாங்குபு பரியும் |
| யாணர் வைப்பிற் கானம் என்னாய் |
5 | களிறுபொரக் கரைந்த கயவாய்க் குண்டுகரை |
| ஒளிறுவான் பளிங்கொடு செம்பொன் மின்னுங் |
| கருங்கற் கான்யாற்று அருஞ்சுழி வழங்குங் |
| கராஅம் பேணாய் இரவரின் |
| வாழேன் ஐய மைகூர் பனியே. |
(சொ - ள்.) ஐய நெடுங் கண் ஆரத்து அலங்குசினை வலந்த பசுங் கேழ் இலைய நறுங்கொடித் தமாலம் - ஐயனே! நெடிய கணுக்களையுடைய சந்தன மரத்தின் அசைகின்ற கிளையிலே சுற்றிய பசிய நிறம் பொருந்திய இலையையுடைய நறிய தமாலக் கொடியை; தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும் யாணர் வைப்பின் கானம் என்னாய் - இனிய தேனெடுக்கும் வேடர் வளைத்து அறுத்துக்கொண்டு செல்லாநிற்கும் புதுவருவாய் மிக்க இடத்தினையுடைய கானமென்று கருதாயாகி; களிறு பொரக் கரைந்த கயவாய்க் குண்டு கரை ஒளிறுவான் பளிங்கொடு செம் பொன் மின்னும் - யானைகள் ஒன்றோடொன்று போர் செய்தலாலே இடிந்தொழிந்த பெரிய பள்ளங்கள் பொருந்திய ஆழ்ந்த கரையிடமெல்லாம் வெள்ளிய பளிங்குக் கற்களும் சிவந்த பொன்னும் மின்னாநிற்கும்; கருங் கல் கான்யாற்று அருஞ் சுழி கராஅம் வழங்கும் - கரிய கற்பாறையில் ஓடுகின்ற கான்யாற்றில் நீந்துதற்கரிய நீர்ச் சுழியையுடைய இடந்தோறும்; முதலைகள் இயங்காநிற்கும்; பேணாய் இர வரின் (வாழேன்) - இத்தகைய ஏதங்களை நினையாயாகி இரவின்கண்ணே நீ இங்கு வரின் யான் இனி உயிர் வாழ்ந்திரேன்; மைகூர் பனிவாழேன் - இந்த இருள் நிரம்பிய பனிக்காலத்திலே தனித்தும் உயிர் வாழ்ந்திரேன்: ஆதலின் இதனை ஆராய்ந்து ஒன்றனை இன்னே செய்வாயாக! எ - று.
(வி - ம்.) வாழேனென்பதை இரண்டிடத்துங் கூட்டுக. தலைவி கூற்றைத் தோழிகொண்டு கூறியது.
நறுங்கொடி என்றிரங்காது அறுப்பவரென்றதனால் நீ அரச குமரனென்று இரங்காது ஊறுசெய்பவரென்பது குறிப்பித்தாள். வாழேனென அவனது நெறிவருமேதம் நினைந்து கவன்றது போலவுங் கூறினமையின் வரைந்து பிரியாதுறைக வென்றாளுமாம். இஃது அழிவில் கூட்டத்து அவன் புணர்வுமறுத்தல்.
இறைச்சி :- தேன் கொள்பவர் சந்தன மரத்திலே சுற்றிய கொடியை அறுப்பரென்றதனால், தலைவியினது நலனை நுகரவருகின்ற நீ இரவில் வருதலானே கவலுகின்ற அவளது கவலை நீங்குமாறு வரைந்தெய்துக வென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - இரவுக்குறி மறுத்து வரைவுகடாதல்.
(பெரு - ரை.) கண் - கணு. பரியும் - அறுக்கும். இரா, ஈறுகுறுகி இர என நின்றது. 'நெடுந்தண் ஆரத்த' என்றும் பாடம்.
(292)