(து - ம்.) என்பது, தலைவனைச் சார்ந்தவரைக் கண்டு சொல்லியதுமாகும்.
(உரை இரண்டற்கு மொக்கும்.) (இ - ம்.) இதுவுமது,
| மணிக்குரல் நொச்சித் தெரியல் சூடிப் |
| பலிகள் ஆர்கைப் பார்முது குயவன் |
| இடுபலி நுவலும் அகன்றலை மன்றத்து |
| விழவுத்தலைக் கொண்ட பழவிறல் மூதூர்ப் |
5 | பூங்கண் ஆயங் காண்தொறும் எம்போல் |
| பெருவிதுப் புறுக மாதோ எம்மில் |
| பொம்மல் ஓதியைத் தன்மொழிக் கொளீஇக் |
| கொண்டுடன் போக வலித்த |
| வன்கண் காளையை ஈன்ற தாயே. |
(சொ - ள்.) மணிக் குரல் நொச்சித் தெரியல் சூடிப்பலிகள் ஆர்கைப் பார்முது குயவன் - நீலமணி போலும் பூங்கொத்தினையுடைய நொச்சிமாலையைச் சூடிப் பலிகளிடுதற்கு அமைந்த கையையுடைய பரிய முதிய குயவன்; இடு பலி நுவலும் அகல்தலை மன்றத்து - தன்னால் இடப்படும் பலியை உண்ணுதற்கு அணங்குகளையும் காக்கைகளையும் அழையாநிற்கும் அகன்ற இடத்தையுடைய மன்றத்தின்கண்ணே; விழவுத் தலைக்கொண்ட பழவிறல் மூதூர் - திருவிழாச் செய்தலை மேற்கொண்ட பழைமையான வெற்றியையுடைய இம் மூதூரிடத்தில்; பூங் கண் ஆயம்காண் தொறும் - எம் புதல்வியுடன் விளையாடும் நெய்தன் மலர் போலும் கண்ணையுடைய தோழியரைக் காணும்போதெல்லாம்; எம்போல் - யாம் பெரிய நடுக்கமுற்றுத் துன்பப்படுவதுபோல; எம் இல் பொம்மல் ஓதியைத் தன் மொழிக் கொளீஇ - எம் மனையகத்திருந்த பொலிவு பெற்ற கூந்தலையுடைய எம் புதல்வியை மருட்டிப் பலவாய பொய்ம்மொழிகளைக் கூறி; உடன் கொண்டுபோக வலித்த வன்கண் காளையை ஈன்ற தாய் - தன் சொற்படி ஒழுகச் செய்து தன்னுடன் அழைத்துக்கொண்டு சென்ற வன்கண்மையுடைய காளையாவானை ஈன்ற தாயும்; பெருவிதுப்பு உறுக - இத்தகைய கொடிய புதல்வனை ஈன்றதனாலே அவள் பெரிய நடுக்கமுற்றுத் துன்பம் அடைந்தொழிவாளாக!; எ - று.
(வி - ம்.) விதுப்பு - நடுக்கம். பழவிறல் - பழைய வெற்றி. பொம்மல் - பொலிவு. இங்ஙனம் கூறியதனால் தலைவனுக்குத் தாயும் தலைவிக்குத் தாயுமாவார் ஒருவரை ஒருவர் கடிந்து கூறுதல் பண்டைக் காலமுதல் தமிழ்நாட்டில் நிகழும் வழக்குப்போலும். மெய்ப்பாடு - வெகுளி. பயன் - ஆற்றுதல்.
(பெரு - ரை.) 'பலிக்கள்' என்றும் பாடம். இதுவே சிறந்த பாடம். பலிக்கள் ஆர்கை - பலியாகிய கள்ளை யுண்ணுதலையுடைய குயவன் என்க.
(2")