திணை : பாலை.

    துறை : இது, தோழியாற் பிரிவுணர்த்தப்பட்ட தலைமகள் சொல்லியது.

    (து - ம்.) என்பது, தலைமகன் பிரிதலைத் தோழியாலறிந்த தலைவி அவளை நோக்கிக் 'கார்காலத்திலே நம் தலைவர் நம்மைப் பிரிந்து செல்வாராயினார்; நாம் அவரின்றி வருந்தி மனையின்க ணிருப்போ மாயினோம்; இஃதென்ன கொடுமை, இங்ஙனம் பிரிந்தால் இனி யாதாய் முடியுமோ' வென நொந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "கொடுமை யொழுக்கம் தோழிக் குரியவை. . . . ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்" (தொல். கற். 6) என்பதனாற் கொள்க.

    
என்னா வதுகொல் தோழி மன்னர் 
    
வினைவல் யானைப் புகர்முகத்து அணிந்த 
    
பொன்செய் ஓடை புனைநலங் கடுப்பப் 
    
புழற்காய்க் கொன்றைக் கோடணி கொடியிணர் 
5
ஏகல் மீமிசை மேதக மலரும் 
    
பிரிந்தோர் இரங்கும் அரும்பெறற் காலையும் 
    
வினையே நினைந்த உள்ளமொடு துனைஇச் 
    
செல்ப என்ப காதலர் 
    
ஒழிதும் என்பநாம் வருந்துபடர் உழந்தே. 

    (சொ - ள்.) தோழி மன்னர் வினை வல் யானைப் புகர் முகத்து அணிந்த பொன்செய் ஓடை புனை நலம் கடுப்ப - தோழீ! அரசருடைய போர்த்தொழில்வல்ல யானையின் புள்ளியையுடைய முகத்திலணிந்த பொன்னாற் செய்த நெற்றிப் பட்டத்தில் அலங்கரித்த அழகிய தோற்றம்போல; புழல் காய்க் கொன்றைக்கோடு அணிகொடி இணர் ஏகல் மீமிசை மேதக மலரும் - உள்ளே புழலமைந்த காயையுடைய சரக்கொன்றையின் கிளைகளில் அழகிய கொடிபோன்ற பூங்கொத்துகள் பெரிய மலையின் மிகவுயர்ந்த இடத்தில் மேம்பட மலராநிற்கும்; பிரிந்தோர் இரங்கும் அரும்பெறல் காலையும் - பிரிந்தோர் வருந்துகின்ற பெறுதற்கரிய கார்காலத்திலும்; வினையே நினைந்த உள்ளமொடு காதலர் துனைஇச் செல்ப - தாம் செய்ய வேண்டிய காரியத்தையே கருதிய வுள்ளத்துடனே நங் காதலர் விரைந்து செல்வாராயினர்; நாம் வருந்துபடர் உழந்து ஒழிதும் - அங்ஙனம் செல்லுகின்றவருடன் சேரவுஞ் செல்லாமல் நாம் வருந்துகின்ற துன்பத்திலுழன்று இங்கேயே தங்கியிருக்கக் கடவேமாயினோம்; இஃதென்ன கொடுமை? இவ்வண்ணம் பிரிதலால்; என் ஆவது கொல் - இனி யாதாய் முடியுமோ? ஒன்று சூழ்ந்து கூறாய்; எ - று.

    (வி - ம்.) ஏ - பெருமை, என்ப இரண்டும் அசைநிலை. கொன்றை மலர்வது கார்காலத்தாதலின், ஈண்டுக் கார்காலமெனப்பட்டது. "கார்விரி கொன்றை", "கண்ணி கார்நறுங் கொன்றை" என்றார் பாரதம் பாடிய பெருந்தேவனாரும் (அகம் புறம் காப்புச்செய்யுள்களில்).

    பிரிவின் இறந்துபடுவ னென்னுங் கருத்தால் என்னாவதுகொல் என்றாள்.

    இறைச்சி :- யானையின் நெற்றிப் பட்டம் போலக் கொன்றை கார்காலத்து மலருமென்றது, யான் தலைமகற்கு உரிமை பூண்டொழுகும் இல்லறக் கிழத்திபோல அவரை நோக்கி மகிழ்ந் துறைந்தேன்; கார்நீக்கத்துக்கண் அம்மலர் உதிர்ந்தொழிதல்போல அவர் பிரிவினால் யான் இறந்து ஒழிதல் திண்ணமென்றா ளென்பதாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

    (பெரு - ரை.) வினை - போர்த் தொழில். ஓடை - முகபடாம். இது பிரிதற்கொண்ணாத பருவத்தே பிரியலாயினர் என்று வருந்தியபடியாம்.

(296)