மள்ளனார்
    திணை : குறிஞ்சி.

    துறை : (1) இது, தோழி சிறைப்புறமாகத் தலைமகட் குரைப்பாளாய்த் தலைமகன் கேட்பச் சொல்லியது.

    (து - ம்.) என்பது, தலைமகன் சிறைப்புறத்தானாக அவன் கேட்குமாற்றானே தோழி தலைமகளை நோக்கி நின்னிடத்து நிகழுங் குறிப்புப் புணர்ச்சிக் குறிப்புப் போலப் பெரிதா யிராநின்றது; நீ நாடனை முயங்கிய குறியை அன்னை நோக்கினால் ஐயப்படா நிற்குமன்றே; ஆண்டுக் கூவாநின்றனள் காணென்று மருண்டு கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "களனும் பொழுதும் . . .. . . . .அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.

    துறை : (2) தோழி தலைமகளை அறத்தொடு நிலைவலிப்பித்ததூஉமாம்.

    (து - ம்.) என்பது, தோழி தலைமகளை அறத்தொடு நிற்கும்படி கூறி உடன் படுத்தியதுமாகும் (உரை இரண்டிற்கு மொக்கும்.)

    (இ - ம்.) இதனை, "நாற்றமும் தோற்றமும்" (தொல். கள. 23) என்னும் நூற்பாவின்கண், "வகை" என்பதனாற் கொள்க.

    
பொன்செய் வள்ளத்துப் பால்கிழக் கிருப்ப 
    
நின்னொளி ஏறிய சேவடி ஒதுங்காய் 
    
பன்மாண் சேக்கைப் பகைகொள நினைஇ 
    
மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை 
5
எவன்கொல் என்று நினைக்கலும் நினைத்திலை 
    
நின்னுள் தோன்றுங் குறிப்புநனி பெரிதே 
    
சிதர்நனை முனைஇய சிதர்கால் வாரணம் 
    
முதிர்கறி யாப்பின் துஞ்சும் நாடன் 
    
மெல்ல வந்து நல்லகம் பெற்றமை 
10
மையல் உறுகுவள் அன்னை 
    
ஐயம் இன்றிக் கடுங்கூ வினளே. 

    (சொ - ள்.) பொன் செய் வள்ளத்துப் பால் கிழக்கு இருப்ப - தோழீ! பொன்னாற் செய்த கிண்ணத்துள் வைத்த பால் நின்னால் உண்ணப்படாமல் கீழே வைத்திருக்கின்றமை காணாய; நின் ஒளி ஏறிய - நின் மேனியின் ஒளிமிக்கு வேறு வண்ணமாகத் தோன்றுவ; சே அடி ஒதுங்காய் - அன்றி மெல்ல நின் சிவந்த அடிகளால் நடந்து இயங்கினாயுமல்லை; பல் மாண்சேக்கைப் பகை கொள நினைஇ - பல மாட்சிமைப்பட்ட படுக்கையைப் பகையாகக் கருதிக்கொண்டு; மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை - மகிழா நோக்கம் கட்குடியான் மயங்கினாற்போல் ஆயினை; எவன் கொல் என்று நினைக்கலும் நினைத்திலை - நாம் இப்படியிருப்பது என்ன காரணம் என்று நினைக்கலுஞ் செய்திலை; நின்னுள் தோன்றும் குறிப்பு நனி பெரிது - ஆகலின் நின்னுள்ளே தோன்றும் குறிப்பானது மிகப் பெரிதாயிராநின்றது; சிதர் நனை முனைஇய சிதர்கால் வாரணம் - வண்டுகள் மொய்க்கின்ற மலரும் பருவத்தினையுடைய பூவினை வெறுத்த மெல்லிய காலையுடைய கோழி; முதிர்கறி யாப்பின் துஞ்சும் நாடன் - முதிர்ந்த மிளகுக்கொடி ஒன்றோடொன்று பின்னியிருப்பதன்கண்ணே துயிலாநிற்கும் மலை நாடன்; மெல்ல வந்து நல் அகம் பெற்றமை - மெல்ல வந்து நின்மார்பினை அடையப்பெற்றதனால் ஆகிய சில குறிகளை நோக்கிய; அன்னை மையல் உறுகுவள் - அன்னை இவளுக்கு இக் குறிப்புகள் உண்டாயதன் காரணம் யாதென்று மயக்கமுறாநிற்கும் உவ்விடத்தே கேளாய்; ஐயம் இன்றிக் கடுங் கூவினள் - ஐயப்பாடின்றி அவ்வன்னை கடுமையான குரலையெடுத்து நின்னைக் கூவுகின்றனள் காண்; எ - று.

    (வி - ம்.) கிழக்கு - கீழிடம். மகிழ்தல் - கட்குடித்தல். சிதர் - வண்டு. சிதர்கால் - மெல்லிய கால். யாப்பு ஒன்றோடொன்று பின்னியிருக்குங் கட்டு. இருப்ப: முற்று.

    இப்பொழுது ஆசாரமும் நாணுங் காதலும் மீதூர்தலானே உணவை நோக்காயாய்ப் பண்டையிற் குறைந்த உண்டியை யுடையாயென அன்னை ஐயம்கொள்ளுவ ளென்பாள் பால் கிழக்கிருப்ப என்பதனால் அறிவுறுத்தினாள். பண்டை நிறமின்றிக் கண்ணுங் கொங்கையுந் தோளுங் கதிர்ப்புக் கொண்டு வேறுபட்டுக் காட்டலானே ஐயுறுமென்பாள், நின்னொளி ஏறிய என்பதனால் அறிவுறுத்தினாள். ஆயத்தொடு பயிலாது இடந்தலைப்பாட்டிற்கு ஏதுவாக நீங்கி நிற்றலானும், செவிலிமுலையிடத்தே துயில வேண்டாது வேறொரிடத்துப் பயின்று நிற்றலானும், செய்வினை மறைப்புப் பயில்வு முதலியவற்றான் ஐயுறுமேயென்பாள் சேவடி ஒதுங்கா யென்பதனால் அறிவுறுத்தினாள். இவைதானறிந்தனவன்றி அன்னையுமறியும்மென அச்சுறுத்தினாளுமாம். கூவுதலையுடையளென மேலும் அச்சுறுத்தியது ஆயிற்று.

    உள்ளுறை :- நனையை வெறுத்த வாரணம் கறிக்கொடியிலே துஞ்சும் என்றது, இத்தகைய தலைவியை வருந்தவிடுத்துத் தலைவன் கரந்து தன்னூர் அகத்து வைகுவானாயினான் என்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

    (பெரு - ரை.) சிதர் நனை - பூந்துகளையுடைய மலருமாம். கறியாப்பு - மிளகுக் கொடிப் பின்னல். இரண்டாவது துறைக்கு: கோழி மலரை வெறுத்துக் கொடிப் பின்னலில் உறங்கும் என்பதற்கு இனி நீ அறத்தொடு நிற்குமாற்றால் நம் பெருமானை மணந்துகொண்டு இம் மனை துறந்து அவன் மனைக்கண் மகிழ்ந்திருத்தல் வேண்டும் என்பது உள்ளுறையாகக் கொள்க. 'ஐயமின்றிக் கடுங்கவவினள்' என்றும் பாடம்.

(297)