திணை : பாலை.

    துறை : இது, முன்னொரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.

    (து - ம்.) என்பது முன்பு பொருள் தேடச் சென்றிருந்து வந்த தலைமகன் மற்றொரு காலத்துப் பின்னும் பொருள்தேடும்படி கருதிய நெஞ்சை நோக்கி நெஞ்சே ! மாலைப்பொழுது வரக்கண்டு இம்மாலைப்பொழுது நம்காதலி நம்மைக் கருதி வருந்துதற்குரிய காலமென்று முன்பு பிரிந்தவிடத்துக் கருதினேன் அல்லனோவென வருந்திக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "வேற்றுநாட் டகல்வயின் விழுமத் தானும்", (தொல். கற். 5) என்னும் விதி கொள்க.

    
ஈன்பருந் துயவும் வான்பொரு நெடுஞ்சினைப்  
    
பொரியரை வேம்பின் புள்ளி நீழல்
    
கட்டளை அன்ன வட்டரங் கிழைத்துக்
    
கல்லாச் சிறா அர் நெல்லிவட் டாடும்
5
வில்லேர் உழவர் வெம்முனைச் சீறூர் 
    
சுரன் முதல் வந்த உரன்மாய் மாலை 
    
யுள்ளினென் அல்லனோ யானே யுள்ளிய 
    
வினைமுடித் தன்ன இனியோண் 
    
மனைமாண் சுடரொடு படர்பொழு தெனவே. 

     (சொ - ள்.) ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ்சினை நெஞ்சே! பார்ப்பை யீன்ற பருந்து வருந்தியுறையா நிற்கும் ஆகாயத்தின்மேற் செல்லுகின்ற நெடிய கிளைகளையும்; பொரிஅரை வேம்பின் புள்ளி நீழல்-பொரிந்த அடியையுமுடைய வேம்பினது புள்ளிபோன்ற நிழலின்கண்ணே; கட்டளை அன்னவட்டு அரங்கு இழைத்து - கட்டளைக் கற்போன்ற அரங்கை வட்டினாலே கீறி; கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்-ஏனைத் தொழிலொன்றும் கற்றறியாத சிறுவர்கள், நெல்லியங்காயை வட்டாகக்கொண்டு பாண்டிலாடா நிற்கும்; வில் ஏர் உழவர் வெம்முனைச் சீறூர் - விற்போரால் ஆறலைத்துண்ணும் மழவரின் வெய்ய குடியிருப்பினையுடைய சீறூரையுடைய; சுரன்முதல் வந்த உரன்மாய் மாலை - அழற் சுரத்தின் கண்ணே முற்பட்டு வந்த நம் வலியனைத்தையும் குறைக்கின்ற மாலைப் பொழுதைக் கண்டு; உள்ளிய வினைமுடித்து அன்ன இனியோள் - இம் மாலையானது கருதிய வினை முடித்தாற் போன்ற இனிமையையுடைய நம் காதலி; மனைமாண் சுடரொடு படர் பொழுது என-மனையகத்து மாட்சிமைப்பட்ட விளக்கை ஏற்றி அதன் முன்னின்று அவர் தாம் இன்னும் வந்தாரில்லையே யென்று அவ்விளக்கொடு வெறுத்துத் துன்புற்றுக் கருதுகின்ற பொழுதாகும் என்று; யான் உள்ளினன் அல்லனோ-யான் முன்னம் ஒரு காலத்து நினைத்தேன் அல்லனோ? அங்ஙனமாக இப்பொழுதும் பொருளீட்டுமாறு ஒருப்படுத்தி என்னை வருத்தாதேகொள்; இனி யான் வாரேன் காண்; எ-று.

    (வி - ம்.) உயவு-வருத்தம். கட்டளை - பொன்னுரைக்குங் கல். சுரன்முதல்-சுரத்தினிடத்தில்; முதல்: ஏழனுருபு, படர்தல்-நினைத்தல்.

    வெப்பத்தால் இலைதழைக்காது கருகுதலிற் புள்ளி போன்ற நிழலாயிற்று. ஏரால் உழுதுண்பார் போல வில்லால் ஆறலைத்துண்ணலின் வில்லேர் உழவ ரென்றார். வேம்பின் நீழற் சிறார் வட்டாடுஞ் சீறூரென்க. முன்பு பொருள் செயல் வினையை முடித்துப் பெற்ற மகிழ்ச்சியனாதலின் வினைமுடித்தன்ன வினியோளென்றான். இதனானே அம் மகிழ்ச்சி இவளை நோக்குழியேபெறக் கிடத்தலிற் பொருளை நச்சிவாரேனெனவுங் குறிப்பித்தானாயிற்று. அங்ஙனமாக என்பது முதற் குறிப்பெச்சம்.

    இறைச்சிப்பொருள் :- பருந்து வருந்தியிருக்கும் வேம்பின் நிழலில் அப்பருந்தின் வருத்தத்தை ஏறிட்டு நோக்காது, சிறார் நெல்லிவட்டாடி மகிழா நிற்பர் என்றது, யான் இவளைப் பிரிதலால் வருந் துன்பத்திற்கஞ்சி வருந்தவும் அதனைக் கருதாத என்னெஞ்சே! நீ பொருள்மேற்சென்று மீளும் மகிழ்ச்சியை உடையையாயிரா நின்றாய் என்பதாம். மெய்ப்பாடு - பிறன்கண் தோன்றிய வருத்தம் பற்றிய இளிவரல். பயன் - இல்லத்தழுங்கல். இதனை இத்துறையிலேயே அடக்கினார் நச்சினார்க்கினியர்; (தொல்-பொ-சூ- 43 உரை.)

    (பெரு - ரை..) கட்டளையன்ன இட்டரங்கு என்றும் பாடம். வட்டினாலே கீறி என்னும் உரை பொருந்தாது. வட்டு நெல்லிக்காயே ஆதலின் அதனால் அரங்கு கீறுதல் அமையாமையும் உணர்க. இட்டரங்கு - சிறிய வகுப்பறைகளையுடைய அரங்கு என்க. உள்ளினென் அல்லெனோ என்றும் பாடம்.

    இச்செய்யுளின்கண் தலைவன் முன்னிகழ்ந்த நிகழ்ச்சியை நினைந்து செலவழுங்கினமையின் இதனை, “நிகழ்ந்தது நினைத்தற் கேதுவுமாகும்.” (தொல்-அகத்- 43) என்னும் நூற்பாவிற்கு எடுத்துக் காட்டினர் ஆசிரியர் நச்சினார்க்கினியர்.

(3)