திணை : மருதம்.

    துறை : (1) இது, வாயில் மறுத்தது.

    (து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனால் விடப்பட்டுக் காமக் கிழத்தியிடத்துத் தூதாக வந்த பாணனை அவட்குப் பாங்காயின விறலி நோக்கி 'ஊரனாவான் சிறிய வளையையுடைய இவட்கு இஃது ஈடென்று தனது தேரை அலங்கரித்து என் முன்றிலின்கண்ணே நிறுத்தியிட்டு வேறாவா ளொருபரத்தைபாற் சென்றனன் கண்டாய்; அவனது தேரொடு வந்த நீயும் அவனொடு போகாது எமது அட்டிற்சாலைக் கூரையைப் பற்றி நிற்கின்றனை, அப்படியே நீ நிற்பாயாக'வென வெகுண்டு கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "பாணர் கூத்தர் விறலியர் என்றிவர் பேணிச்சொல்லிய குறைவினை யெதிரும்" (தொல். கள. 23) என்னும் விதியாற் கொள்க.

    துறை : (2) வரைவுகடாயதூஉமாம். மாற்றோர் நொதுமலாளர் வரைவின் மேலிட்டு மருதத்துக் களவு.

    (து - ம்.) என்பது வரையாது வந்தொழுகுந் தலைமகனை நெருங்கிய தோழி 'ஐயனே! வரைவு வேண்டிவந்த அயலானொருவன் நம் தலைமகளின் வளைவிலை இதுவாகுமென்று தனது தேரை முன்றிலின்கண் வைக விடுத்து அகன்றொழிந்தனன்; நீயும் அங்ஙனம் அகன்றொழியாது போந்து மணம் புரிந்து கொள்'ளென ஆய்ந்து வரைவுகடாதல் தோன்றும் வண்ணங் கூறியதுமாகும்.

    (இ - ம்.) இதற்கு, "பிறன் வரைவு ஆயினும்" (மேற்படி) என்னும் விதிகொள்க.

    
சுடர்த்தொடிக் கோமகள் சினந்தென அதனெதிர் 
    
மடத்தகை ஆயங் கைதொழு தாஅங்கு 
    
உறுகால் ஒற்ற ஒல்கி ஆம்பல் 
    
தாமரைக்கு இறைஞ்சும் தண்டுறை ஊரன் 
5
சிறுவளை விலையெனப் பெருந்தேர் பண்ணிஎம் 
    
முன்கடை நிறீஇச் சென்றிசி னோனே 
    
நீயுந் தேரொடு வந்து போதல்செல் லாது 
    
நெய்வார்ந் தன்ன துய்யடங்கு நரம்பின் 
    
இரும்பா ணொக்கல் தலைவன் பெரும்புண் 
10
ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண் 
    
பிச்சைசூழ் பெருங்களிறு போலவெம் 
    
அட்டில் ஓலை தொட்டனை நின்மே. 

    (சொ - ள்.) நெய் வார்ந்து அன்ன துய் அடங்கு நரம்பின் இரும் பாண் ஒக்கல் தலைவன் - நெய்வடிந்தாலொத்த பிசிர் அடங்கிய நரம்பு பூட்டிய யாழையுடைய பெரிய சுற்றத்தையுடைய பாணர் தலைவனே!; சுடர்த்தொடிக் கோமகள் சினந்தென அதன் எதிர் - விளங்குகின்ற தொடியணிந்த அரசகுமாரி சினங்கொண்டவுடன் அவ்விடத்தில்; மடத் தகை ஆயம் கைதொழுதாங்கு - மடப்பத்தையுடைய தோழியர் குழாம் கைதொழுது இறைஞ்சினாற்போல; உறுகால் ஒற்ற ஆம்பல் ஒல்கி தாமரைக்கு இறைஞ்சும் - மிக்க காற்று மோதுதலானே ஆம்பல் குவிந்து தாமரை மலரிடத்தில் வந்து சாய்ந்து வணங்காநிற்கும்; தண் துறை ஊரன் சிறு வளை விலை என - தண்ணிய துறையையுடைய ஊரன் ஏனையொருத்திக்குப் பரியமளிக்க வேண்டிச் செல்லுவான் இடையே எம்மைக் காண்டலானே சிறிய வளையினையுடைய இவட்குரிய விலை இதுவென்று; பெருந்தேர் பண்ணி எம் முன்கடை நிறீஇச் சென்றிசினோன் - தன் பெரிய தேரை அலங்கரித்து எமது முன்றிலின்கண்ணே நிறுத்தியிட்டு வேறொரு பரத்தையின் மனையகம் நாடிச் சென்றொழிந்தனன் கண்டாய்; நீயும் தேரொடு வந்து போதல் செல்லாது ஏஎர் தழும்பன் 'ஊணூர்' ஆங்கண் - அவனது தேருடனே வந்த நீயும் அவன் பின்னே செல்லாது போரிலே பெரிய புண்ணால் அழகுபெற்ற 'தழும்பன்' என்பவனது ஊணூரிடத்துள்ள; பிச்சைசூழ் பெருங்களிறு போல - பிச்சைக்கு வந்த பெருங்களிறு நிற்றல்போல; எம் அட்டில் ஓலை தொட்டனை நில் - எம்முடைய அட்டிற்சாலைக் கூரையின் பனையோலையைத் தொட்டு நிற்கின்றனை; அவ்வண்ணமே நிற்பாயாக! எ-று.

    உள்ளுறை :- காற்று மோதுதலாலே ஆம்பல் தாமரையைத் தாழும் என்றது, தலைவன் நின்னை ஏவுதலாலே நீ இங்கு வந்து இறைஞ்சி நடலை பயிற்றா நின்றனை என்றதாம். மெய்ப்பாடு - வெகுளி. பயன் - வாயின் மறுத்தல்.

    இரண்டாந் துறையின் உரை:- ஊரனொருவன் இவளைப் பொன் அணியவேண்டி இச்சிறிய வளையுடையாளுக்கு விலை ஈதென்று தனது தேரினை அலங்கரித்து நிதியத்தோடு எமது முன்றிலிற் கொணர்ந்து நிறுத்தி அந்தணர், சான்றோர் முதலாயினோரை அழைத்து வரப்போயினான்; நீயும் அவ்வண்ணம் தேரோடு வந்து நிதியந்தந்து மணந்து செல்லாது பாணர் ஒக்கலுக்கு உணவளிக்குந் தழும்பனது ஊணூரென்னு மிடத்தே களிறு நிற்றல் போல இரவுக் குறியிடமாகிய அட்டிற் சாலைக் கூரைப் பனை யோலையைத் தொட்டுக் கருதிக்கொண் டிருக்கின்றனை; அங்ஙனமே நிற்பாயாக; எ - று.

    (பெரு - ரை.) இரும்பாண் ஒக்கல் தலைவன் என்னும் தொடரையும் தழும்பனுக்கே அடையாக்கிப் பாணனே என வருவித் தோதுதல் இச் செய்யுளாசிரியர் கருத்திற் கொப்பதாம். ஏஎர் தழும்பு - விழுப்புண்ணால் உண்டான தழும்பு. இத்தகைய தழும்புடைமையால் ஏஎர் தழும்பன் எனப் பெயர் பெற்றான்போலும். அவன் ஊர்தானும் அறக்கோட்டங்கள் மிக்கு எளியவர்க்கு உண்டி வழங்குமிடமாதலாற்போலும் ஊணூர் எனப்படுகின்றது. அவ்வூரில் களிறு பிச்சைக்குச் சூழ்ந்து வரும் என்றது, அறநிலையங்கட்கு அரிசி முதலிய ஏற்றற்கு யானை தெருக்களிலே வரும் வழக்கத்தைக் குறித்தவாறு போலும்; 'பேர்தல் செல்லாது' என்றும் பாடம். இச் செய்யுளின்கண் மெல்லிய தண்டுடைமையாற் காற்றான் மோதுண்ட ஆம்பன் மலர், வன்றண்டுடைமையாற் சாயாது நிற்கும் தாமரை மலரின்பாற் சாய்தலைக் கோமகள் சினங்கொண்டு தோழியர் வணங்குதல் போன்று என உவமித்த அழகுங் கற்பனையும் உள்ளுதோறுவகை தருகின்றன.

(300)