(து - ம்.) என்பது, தலைமகளைக் குறைநயப்பித்துக் கூட்டுவிக்குந் தோழி தலைவியின் அருமைபெருமை முதலாயவற்றை யறிந்து, தலைமகன் விரைவில் வரைதல் காரணமாக அவனுக்கு இயையாது மறுத்துக் கூறி அவன்படுந் துன்பத்தை அறிந்துவைத்தும் எம் அன்னை இவளைப் பலகாலும் நோக்கிப் புகழ்ந்து கூறித் தன்மனத்து மறக்கப்படாத் தன்மையளாய் இராநின்றாள் ஆதலின் இங்குக் கூட்டுவிப்பதை யறிந்தால் எத்தன்மையளாமோ? யான் இதனை அஞ்சுகின்றேனென்று தன்னுள்ளே கவன்று கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "மறைந்தவள் அருக . . . . . . . பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும்" என்னும் (தொல். கள. 23) விதிகொள்க.
| நீண்மலைக் கலித்த பெருங்கோல் குறிஞ்சி |
| நாள்மலர் புரையும் மேனிப் பெருஞ்சுனை |
| மலர்பிணைத்து அன்ன மாயிதழ் மழைக்கண் |
| மயிலோர் அன்ன சாயல் செந்தார்க் |
5 | கிளியோர் அன்ன கிளவிப் பணைத்தோள் |
| பாவை அன்ன வனப்பினள் இவளெனக் |
| காமர் நெஞ்சமொடு பலபா ராட்டி |
| யாய்மறப்பு அறியா மடந்தை |
| தேமறப்பு அறியாக் கமழ்கூந் தலளே. |
(சொ - ள்.) தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தலள் - அகிலின் நெய்பூசி நீங்ககில்லாத மணம் வீசுகின்ற கூந்தலையுடைய தலைமகள்தான் பருவம் உடையள் ஆயினமையால்; நீள் மலைக்கலித்த பெருங்கோல் குறிஞ்சி நாள் மலர் புரையும் மேனி - நீண்ட மலையிலே தழைந்த பெரிய தண்டினையுடைய குறிஞ்சியின் விடியலிலே விரிந்த மலர் போன்ற மேனியையும்; பெருஞ்சுனை மலர் பிணைத்து அன்ன மா இதழ் மழைக் கண் - பெரிய சுனையிலுள்ள குவளைமலர் எதிர் எதிர் வைத்துப் பிணைத்தாற்போன்ற இமையையுடைய கரிய குளிர்ச்சி பொருந்திய கண்ணையும்; மயில் ஓர் அன்ன சாயல் - மயிலின் ஒருதன்மையொத்த சாயலையும்; செந்தார்க் கிளி ஓர் அன்ன கிளவி - கழுத்திலிட்ட சிவந்த வரையுடைய கிளியின் ஒருதன்மையொத்த சொல்லையும்; பணைத்தோள் - பருத்த தோளையும்; பாவை அன்ன வனப்பினள் - கொல்லிப் பாவை போன்ற அழகையுமுடையவள்; இவள் எனக் காமர் நெஞ்சமொடு பல பாராட்டி - இவளென்று விருப்பம் வரும் உள்ளத்துடனே பலபடியாகப் புகழ்ந்து கூறி; யாய் மறப்பு அறியா மடந்தை - எம் தாய் சிறிதும் மறக்கப்படாத மடந்தையாயிராநின்றாள் ஆதலின் இவளது ஆற்றாமை தீரக் கூட்டுவிப்பதை அறியின் அவ்வன்னை எத்தன்மையள் ஆவளோ? இதற்கு யான் அஞ்சுகின்றேன்; எ - று.
(வி - ம்.) தேம் - அகிலினெய். செந்தார் - கழுத்திலிட்ட வரை. தலைமகள் பருவமெய்திக் கதிர்ப்புக்கொண்டதனை நோக்கினமையின் புறத்தேபோனால் முருகு அணங்குமோவென்று அன்னை ஒழியாது கருதுபவள் ஆதலின், யாய்மறப்பறியா மடந்தையென்றாள். மெய்ப்பாடு - பிறன்கண்தோன்றிய வருத்தம்பற்றிய அவலம். பயன் - தானே கூறி ஆறுதல்.
(பெரு - ரை.) "நீண்மலை" என்பது தொடங்கி "வனப்பினள்" என்னுந் துணையும் தோழி தாயின் பாராட்டுரையைக் கேட்டிருந்தவள் அவற்றைக் கொண்டு கூறினள்.
(301)